செய்திகள் :

Doctor Vikatan: பஞ்சங்களால் மாறிய மரபணுக்கள்; ஆரோக்கியமான இளைஞர்களுக்கும் மாரடைப்பு - இதுவா காரணம்?

post image

Doctor Vikatan: கடந்த காலங்களில் இள வயது மாரடைப்புகளும் மரணங்களும் அதிகரித்து வருவதைக் கேள்விப்படுகிறோம். இவற்றுக்கெல்லாம் நம் மூதாதையர்களின் மரபணுக்கள்தான் காரணம் என்று சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.

அது உண்மையா.... அப்படியானால் ஆரோக்கியமாக உள்ள இள வயதினருக்கும் மாரடைப்பு வரும் அபாயம் உண்டு என அர்த்தமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி.

இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி
இதயநோய் சிறப்பு சிகிச்சை மருத்துவர் ரெஃபாய் ஷௌகத் அலி

இதற்கான தெளிவான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன் தாங்கள் படித்த செய்தி மற்றும் அது சொல்ல வரும் உண்மைகள் குறித்து இன்னும் சற்று விரிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

அப்போலோ மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி, இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியர்களுக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய மரபியல் காரணங்கள் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.

அதில், 'தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியா உட்பட, கடந்த காலத்தில்  கடுமையான பல பஞ்சங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியான பஞ்சங்களால், முன்னோர்களின் உடல், மிகக் குறைந்த உணவில் இருந்தும் ஆற்றலை உறிஞ்சி, அதை உடலுக்குள் கொழுப்பாகச் சேமித்து வைக்கும் வகையில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) தகவமைத்துக் கொண்டது.

தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட இந்த 'சிக்கனமான மரபணு' (Thrifty Genes), இன்றும் நமது உடலியலில் தொடர்கிறது. இன்று உணவுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், நமது உடலின் மரபணு கட்டமைப்பு இன்னமும் ஆற்றலையும் கொழுப்பையும் சேமிக்கவே முயல்கிறது.

நவீன காலத்து உடலுழைப்பற்ற வாழ்க்கைமுறை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை இந்த மரபணு அமைப்போடு சேரும்போது, குறைந்த வயதிலேயே இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு மற்றும் ரத்த நாள அடைப்பு போன்ற பிரச்னைகள் வருகின்றன.

பஞ்சம்

இந்தியர்கள் வெளிப்புறத் தோற்றத்திற்கு ஒல்லியாகவோ அல்லது இயல்பான எடையிலோ இருந்தாலும், அவர்களது கல்லீரல், இதயத்தைச் சுற்றியுள்ள உள் உறுப்புகளில் கொழுப்பு சேர்கிறது. இதை அறிவியலில் TOFI (Thin Outside, Fat Inside) என்பார்கள். இதனால்தான் புறத்தோற்றத்தில் ஆரோக்கியமாக இருப்பவர்கள் போலத் தோன்றுபவர்களுக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.  

மேலைநாட்டினருடன் ஒப்பிடும்போது தெற்காசியர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் முன்னதாகவே இதய நோய்கள் ஏற்படுகின்றன. மரபியல் அமைப்பை உடனடியாக மாற்ற முடியாது என்றாலும், ஆரோக்கியமான உணவுப்பழக்கம், தினசரி உடற்பயிற்சி, மனஅழுத்த மேலாண்மை மற்றும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் இந்த மரபியல் அபாயத்தைக் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்...' என்று குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாகவே இந்திய வீடுகளில் இதய ஆரோக்கியம் பற்றிய விவாதங்கள் ஒரே கேள்வியை சுற்றியே சுழல்கின்றன. 'நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்... நெய்தான் பிரச்னையா... கடுகு எண்ணெய்க்கு மாற வேண்டுமா.... தேங்காய் எண்ணெய் நல்லதா... பொரித்த உணவுகளை நிறுத்திவிட வேண்டுமா... என்பன போன்ற கேள்விகளை அடிக்கடி கேட்டுக்கொள்கிறோம். ஆனால், நாம் கேட்க வேண்டிய மிகப்பெரிய கேள்வியே வேறு.

உடல்தகுதியோடும் ஆரோக்கியமாகவும் தோன்றும் இளம் இந்தியர்களுக்குக்கூட, குறைந்த வயதிலேயே தீவிர இதய நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதே அது.

30களில் இருக்கும் ஒருவர் உடற்பயிற்சி செய்து, சரியான உடல் எடையைப் பராமரித்து, ஓரளவு நல்ல உணவை உட்கொண்டாலும், அவருக்கு இதய நோய் வருவதற்கான கணிசமான அபாயம் இருக்கலாம். ஏனெனில், இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு என்பது ஏதோ ஓர் உணவு அல்லது ஒரு கெட்ட பழக்கத்தின் விளைவு அல்ல. அது பல காரணிகள், பல ஆண்டுகளாக ஒன்றிணைவதால் ஏற்படுவது.

இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு என்பது ஏதோ ஓர் உணவு அல்லது ஒரு கெட்ட பழக்கத்தின் விளைவு அல்ல. அது பல காரணிகள், பல ஆண்டுகளாக ஒன்றிணைவதால் ஏற்படுவது.

தெற்காசியர்களின் ஆரோக்கியத்தில் மரபியல் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. பிற மக்களுடன் ஒப்பிடும்போது, தெற்காசியர்களுக்கு இன்சுலின் எதிர்ப்புத் திறன், நீரிழிவு நோய் மற்றும் உடலில் கொழுப்பு சீரற்ற முறையில் பரவுதல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு நபர் வெளிப்புறத்திற்கு ஒல்லியாகத் தெரிந்தாலும், அவரின்  உள் உறுப்புகளைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து, மறைமுக வளர்சிதை மாற்ற ஆபத்தை உருவாக்கலாம்.

குடும்பப் பின்னணியும் இதில் மற்றொரு முக்கிய காரணியாகும். சிலருக்கு அதிக கொலஸ்ட்ரால் அல்லது அதிக அளவிலான லிப்போ புரோட்டீன் ஆகியவை, இதய ரத்தநாள நோய்களோடு பெரிதும் தொடர்புடைய மரபியல் ரீதியான அபாயக் காரணியாக இருக்கிறது. அதாவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவரும் கூட தங்களது தனிப்பட்ட நோய் அபாயத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

மேலும், நவீன வாழ்க்கை முறையும் வெகுவாக மாறிவிட்டது. நீண்டநேர வேலை, பல மணி நேரம் உட்கார்ந்தே இருப்பது, தொடர்ச்சியான திரைப் பயன்பாடு, போதிய தூக்கமின்மை மற்றும் தொடர்ச்சியான பணி அழுத்தம் ஆகியவை நகர்ப்புற இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன.

நாள் முழுவதும் அமர்ந்தே இருந்துவிட்டு, உடற்பயிற்சி என்பது ஒரு குறுகிய நேரப் பயிற்சியோடு முடிந்துவிடுகிறது. அதே நேரத்தில், வீட்டு உணவுகளுக்குப் பதிலாக அதிக உப்பு, கலோரிகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் துரித உணவுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

காலப்போக்கில் இவை உயர் ரத்த அழுத்தம், சீரற்ற கொலஸ்ட்ரால் அளவு, நீரிழிவு, உடல் எடை அதிகரிப்பு மற்றும் அழற்சி (inflammation) போன்றவற்றை உண்டாக்கி, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

இளம் வயதாக இருப்பதோ, ஒல்லியாக இருப்பதோ அல்லது வெளிப்புற தோற்றத்திற்கு ஆரோக்கியமாகத் தெரிவதோ இதய ஆரோக்கியத்திற்கான விஷயங்களாக கருதப்படக்கூடாது

மன அழுத்தமும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால், அதையே ஒரே காரணியாகக் கருதிவிடக் கூடாது. நாள்பட்ட மன அழுத்தமானது ரத்த அழுத்தம், தூக்கம், உணவுப் பழக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும் என்றாலும், அது இந்தப் பிரச்னையின் ஒரு பகுதி மட்டுமே.

இதய நோய் அபாயம் எந்தவித அறிகுறியும் இன்றி அமைதியாக இருக்கலாம் என்பதுதான் கவலைக்குரிய விஷயம். இதனால்தான் இளம் வயதாக இருப்பதோ, ஒல்லியாக இருப்பதோ அல்லது வெளிப்புற தோற்றத்திற்கு ஆரோக்கியமாகத் தெரிவதோ இதய ஆரோக்கியத்திற்கான விஷயங்களாக கருதப்படக்கூடாது என்கிறோம்.

நெய் மற்றும் எண்ணெய் பற்றிய உரையாடலுக்கும் இங்கே ஒரு சரியான தெளிவு தேவைப்படுகிறது. அவற்றை முற்றிலும் ஆகாதவையாகக் கருத வேண்டியதில்லை. ஒட்டுமொத்த உணவு முறை, அளவு, தரம் மற்றும் மிக முக்கியமாக ஒரு நபரின் ஒட்டுமொத்த இதய நோய் அபாய சுயவிவரம் (risk profile) தான் இங்கு முக்கியம்.

குடும்பத்தில் குறைந்த வயதிலேயே இதய நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள், முன்னதாகவே இதய பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. தனிப்பட்ட தேவையைப் பொறுத்து, வழக்கமான ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளுடன் Apolipoprotein B, Lp(a) or high-sensitivity C-reactive protein (Apolipoprotein B) போன்ற கூடுதல் பரிசோதனைகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

நெய் மற்றும் எண்ணெய் பற்றிய உரையாடலுக்கும் இங்கே ஒரு சரியான தெளிவு தேவைப்படுகிறது. அவற்றை முற்றிலும் ஆகாதவையாகக் கருத வேண்டியதில்லை.

இதற்கான தீர்வு, ஒவ்வொரு வேளை உணவைக் கண்டும் பயப்படுவதோ அல்லது சமையலறையிலிருந்து அனைத்துப் பொருள்களையும் நீக்குவதோ அல்ல. இதய ஆரோக்கியத்தை முழுமையாக அணுகுவதே சரியான தீர்வு.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவது, நன்றாகத் தூங்குவது, மன அழுத்தத்தைக் கையாள்வது, புகையிலையைத் தவிர்ப்பது, சரியான உடல் எடையைப் பராமரிப்பது, சீரான உணவை உண்பது மற்றும் முக்கியமான சுகாதார அளவீடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதுதான் இதில் முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகளுக்கு விரல்களை வெட்டி அகற்றுவது ஏன்?

Doctor Vikatan: என் உறவினர் பெண்ணுக்கு 60 வயதாகிறது. அவருக்குப் பல வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களில் அவருக்கு கால்களில் ஒவ்வொரு விரலாக வெட்டி எடுத்துவிட்டார்கள்.... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி ஷவர்மா சாப்பிடும் பிள்ளைகள்... வெஜிடேரியன் ஷவர்மா ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: என் மகனுக்கு 23 வயதாகிறது. அவன் வாரத்துக்கு 3-4 நாள்கள் ஷவர்மா சாப்பிடுகிறான். இது அவனது ஆரோக்கியத்தை பாதிக்குமா... வெஜிட்டேரியன் ஷவர்மா சாப்பிடலாம், அது ஆரோக்கியமானதுதான் என்கிறார்கள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இனி வாரம் ஒருமுறை ஊசி போட்டால் போதும்; இன்சுலின் போடுவோருக்கு குட் நியூஸ்!

Doctor Vikatan: என் வயது 52. கடந்த ஒரு வருடமாக சர்க்கரைநோய்க்கு இன்சுலின் போட்டுக்கொண்டிருக்கிறேன். தினமும் ஊசி குத்திக்கொள்வது வலியைத் தருகிறது. தவிர, சில நாள்களில் மறந்துவிடுகிறேன். இந்நிலையில்தான் ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தோள்பட்டையிலிருந்து விரல்களுக்கு இறங்கும் வலி... எப்படிப்பட்ட சிகிச்சை தேவை?

Doctor Vikatan: எனக்கு தோள்பட்டையில்வலி இருக்கிறது. தவிர வலது கை மற்றும் விரல்களிலும் வலி இருக்கிறது. மொபைல் பார்க்க முடியாத அளவுக்கு வலி இருக்கிறது. இதற்கு எப்படிப்பட்ட சிகிச்சை எடுக்க வேண்டும்... பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: எந்த க்ரீமும் ஹெல்ப் பண்ணலையா... உங்க ஸ்கின் இன்ஸ்டன்ட்டா Glow ஆகணுமா?

Doctor Vikatan: என் வயது 40. மாநிறமாக இருப்பேன். நான் மாதம் தவறாமல் ஃபேஷியல் செய்துகொள்வேன். காஸ்ட்லியான காஸ்மெட்டிக்ஸ்தான் உபயோகிக்கிறேன். என்ன செய்தும் என் சருமத்தில் மாற்றம் தெரியவில்லை. சருமத்தை இ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காரணமே இல்லாம திடீர்னு உடல் எடை குறையுதா... இதையெல்லாம் கவனிச்சீங்களா?

Doctor Vikatan: என் வயது 43. எனக்குக் கடந்த சில மாதங்களாக உடல் எடை மெள்ள மெள்ள குறைந்து வருகிறது. எடையைக் குறைப்பதற்காக நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இப்படி திடீரென உடல் எடை குறைய என்ன காரணம்.... மேலும் பார்க்க