TVK: `இந்தியாக் கூட்டணியில் தவெக?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில் என்ன?
Personal Finance: 5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? ஷேர் மார்கெட்டும் பொறுமையும்
''மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும்...!'' என்று எங்கள் 'லாபம்' மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனத்தைப் பலரும் தொடர்பு கொண்டு பேசும்போது, நான் அவர்களிடம் கேட்கும் முக்கியமானதொரு கேள்வி, ''எத்தனை ஆண்டுகளுக்கு உங்கள் பணத்தை நீங்கள் முதலீடு செய்துவைத்திருப்பீர்கள்?'' என்பதுதான்.
ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஏறக்குறைய எல்லோருமே ''ஐந்து ஆண்டுகள்'' என்பார்கள். ''ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த பணத்தை எடுத்து என்ன செய்வீர்கள்?'' என்று நான் அடுத்த கேள்வியைக் கேட்பேன்.
சிலர், ''அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்வேன்'' என்று சிலர் சொல்வார்கள். இன்னும் சிலர், ''அதை அப்போ பார்த்துக்கலாம். இப்போதைக்கு ஐந்து ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்'' என்பார்கள்.
எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கும்! சொல்லி வைத்த எல்லோருமே ஐந்து ஆண்டுகள் என்று சொல்ல என்ன காரணம்?, தமிழர்களுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? என என் மனதில் பல கேள்விகள் வரும்.
தமிழ் முதலீட்டாளர்கள் பலரும் இப்படிச் சொல்வதற்கு முக்கியமான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்ததில் சில விஷயங்கள் எனக்குப் புரிந்தது. அந்த விஷயங்களைப் பார்ப்போம்.

முதல் விஷயம், பங்குச் சந்தை அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பெருவாரியான தமிழ் மக்களுக்குப் புதிது என்பதால், அது பற்றி பலருக்கும் இன்னும் சரியாகப் புரியவில்லை. எனவே, அதன் மீது நிறைய சந்தேகம் இருக்கிறது! என்றாலும் அதில் நிறைய லாபம் கிடைக்கும் என்று பலரும் சொல்வதால், 'கொஞ்ச பணத்தைப் போட்டுத்தான் பார்ப்போமே...' என்று முதலீடு செய்ய வருகிறார்கள்.
அப்படி செய்யவரும்போது, 'நாம் மியூச்சுவல் ஃபண்டில் போட்ட பணம் நீண்ட காலம் வைத்திருந்தால், மொத்தப் பணத்தையும் இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் வைத்திருந்து, பணத்தைத் திரும்ப எடுத்துவிடுவோம்' என்று பலரும் நினைப்பதால், ஐந்து ஆண்டுகள் மட்டும் முதலீடு செய்ய அவர்கள் நினைக்கலாம்.
அல்லது, 'மியூச்சுவல் ஃபண்டில் நாம் போட்ட பணம் நஷ்டம் வந்துவிட்டால், சட்டென்று எடுத்து வேறு ஏதாவது செய்துவிடலாம்' என்றுகூட நினைக்கலாம்.

ஆனால், இப்படி நினைப்பதெல்லாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. காரணம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள், 25 ஆண்டுகள் வரை எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்!
அப்படி நீண்ட காலத்துக்கு வைத்திருக்கும்போது அவருக்கு ஆண்டுதோறும் 12% வரை கூட்டு வட்டி அடிப்படையில் லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த லாபம் வங்கி எஃப்.டி.யில் கிடைப்பதைப் போல ஒரு மடங்கு அதிகம்.
இந்த 12% லாபம் என்பது உத்தரவாதமானதல்ல. பங்குச் சந்தை நன்கு செயல்பட்டால் 10 ஆண்டு காலத்தில் 12% லாபம் கிடைக்கும். 15% கூட லாபம் கிடைக்கலாம். கடந்த 10 ஆண்டுகளில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகள் 16% லாபம் தந்துள்ளன.
அது போல, அடுத்த 10 ஆண்டுகளிலும் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், நீண்ட காலத்தில் மட்டுமே இந்த லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறபோது வெறும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்!

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நடத்திவரும் ஒரு ஃபண்ட்-ஆனது கடந்த 24 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 23% லாபம் தந்திருக்கிறது. 24 ஆண்டுகளுக்குமுன் 10 ரூபாயில் வாங்கப்பட்ட அந்த ஃபண்டின் ஒரு யூனிட் விலை இன்று ரூ.1500. 150 மடங்கு விலை உயர்வு. ஆனால், 24 ஆண்டுகள் பொறுமையாக இருந்தவர்களுக்குத்தான் இந்த லாபம் கிடைத்திருக்கும். வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டும் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு மடங்கு அல்லது இரு மடங்கு லாபம் மட்டுமே கிடைத்திருக்கக்கூடும்.
மேலும், சொத்து என்று வரும்போது நீண்ட காலத்துக்கு அதை வைத்திருக்க நினைப்பவர்கள்தான் நம் மக்கள். உதாரணமாக, ஒரு வீடு வாங்கினால், அது தாத்தா, மகன், பேரன் என்று நிச்சயம் போகும். அதாவது, குறைந்தது 50 ஆண்டுகளுக்காகவாவது அந்த வீட்டை வைத்திருப்பார்கள். அதே போல, ஒரு தங்க நகை வாங்கினால், பாட்டி, மகள், பேத்தி என்று அடுத்த 50 ஆண்டுகளுக்குச் செல்லும்.
ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது மட்டும் வெறும் 5 ஆண்டுகள் மட்டுமே யோசிப்பார்கள். காரணம், மனை அல்லது வீடு போல, தங்க நகை போல, மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளைக் கண்ணில் பார்க்க முடியாது.
அது நம்பர் வடிவில் ஒரு காகிதமாகத்தான் இருக்கும். இந்த நம்பர் மீது, இந்த காகிதத்தின் மீது நம் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மீதே நம்பிக்கை இல்லை. எனவே, நீண்ட காலம் வைத்திருக்க வேண்டாம்; ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.

எந்த முதலீடாக இருந்தாலும் நீண்ட காலத்தில் வைத்திருக்கும்போது அதன் மதிப்பு என்பது உயரவே செய்யும். ஒரு வீடு பழையதாகிவிட்டது. மாடர்ன் ஆக இன்னொரு வீட்டை வாங்க நினைப்பவர்கள் அந்த வீட்டை விற்கிற மாதிரி, தங்கநகை விற்று, புது நகையை வாங்குகிற மாதிரி, நாம் வைத்திருக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் சரியாகச் செயல்படவில்லை எனில், அந்த ஃபண்ட் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.
ஒரே திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அது மட்டுமல்ல, இத்தனை ஆண்டுகளுக்குக் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை.
ஆக, 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் என உங்கள் எதிர்காலத் தேவைக்கேற்ப நீங்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், உங்களுக்குப் பணவீக்கத்தைவிட (6%) அதிகமாக 10%, 12% லாபம் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.
எனவே, ஐந்து ஆண்டுகள் என்பதை முடிவை மாற்றி, 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் முதலீடு செய்வேன் என்று யோசிக்க ஆரம்பித்தால் மட்டுமே எதிர்காலத்துக்குத் தேவையான நிறைய பணத்தை நம்மால் சேர்க்க முடியும். இனியாவது அப்படி யோசிப்பீர்களா?
மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யணுமா?

மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் - 89259 44568
சபரிநாதன் - 89259 44569
தங்கலட்சுமி - 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

















