அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: ``தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அம...
குமரி: மாணவிக்கு முத்தம் கொடுத்து வீடியோ எடுத்த மாணவன்; ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்தாரா?
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் தாமஸ் - லென்ஸி தம்பதியின் மகன் கவின் ஜெனில் (16).
இவர் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். விக்டர் தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ரத்தினபுரம் வடக்குத் தெருவில் வசித்து வருகின்றனர்.
நேற்று அவர் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், கவின் ஜெனில் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை வேலைக்குச் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் முன்பக்கக் கதவை வெளிப்பக்கமாகப் பூட்டிய கவின் ஜெனில், தனது பாட்டியிடம் வெளியே சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்பக்கக் கதவு வழியாக மீண்டும் வீட்டிற்குள் சென்ற கவின் ஜெனில், அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டின் உள்ளிருந்து கூச்சலிடும் சத்தம் வருவதைக் கேட்ட அவரது பாட்டி உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கவின் ஜெனில் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்தபடி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர் கவின் ஜெனிலை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கவின் ஜெனில் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மாணவர் கவின் ஜெனிலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அவரது தாயார் லென்ஸி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மாணவரின் தாய் லென்ஸி அளித்த புகாரில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வகுப்பில் உடன் படித்த மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காக ஆசிரியர்கள் தனது மகனைக் கண்டித்ததாகவும், அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாகவே மகன் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார்.
அவரது புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள் கண்டித்ததே மாணவரின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறி சக மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மேலும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மாணவரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர். அத்துடன், மாணவர் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திச் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

அதே சமயம், மாணவர் கவின் ஜெனில் தன்னுடன் படிக்கும் மாணவி ஒருவருடன் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றதாகவும், அப்போது பேருந்தில் வைத்து மாணவிக்கு முத்தம் கொடுப்பதை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் விசாரித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில்தான் மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதற்கிடையே மாணவர், மாணவியுடன் எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


















