Gold Rate: நேற்று ஆட்டம் காட்டியது; இன்று குறைந்தது! - இன்றைய தங்கம் விலை நிலவரம...
Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கு பத்திய உணவு அறிவுறுத்தப்படுவது ஏன்?
Doctor Vikatan: மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்குப் பெரும்பாலும் பத்திய உணவுகளைப் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு என்ன காரணம்... மஞ்சள்காமாலை பாதித்தவர்கள் மோர் சாதம் சாப்பிடலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.

மஞ்சள் காமாலை என்று நாம் தமிழில் ஒரே வார்த்தையில் சொல்கிறோம். உண்மையில் 'காமாலை' என்றால் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். பொதுவாக இந்நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பாட்டின் மீது விருப்பம் இருக்காது. இந்த நோயும் அதையே பிரதிபலிக்கிறது.
கல்லீரல் பாதிப்படையும்போது தோன்றும் முதல் அறிகுறியாக, பசியின்மை ஏற்படும். வாயில் கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வது, எதைப் பார்த்தாலும் பிடிக்காத உணர்வு, சோர்வு மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிளும் தோன்றும்.
தவிர, ரத்தத்தில் பிலிருபின் (Bilirubin) அளவு அதிகரிக்கும்போது, உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். அதையும் சேர்த்துதான் இதற்கு மஞ்சள் காமாலை என்று பெயர் வந்தது.
கல்லீரலின் செயல்பாடு மாறும்போது ஏற்படுகிற இந்தப் பாதிப்பை, மருத்துவர்கள், 'எல்எஃப்டி' என்ற பரிசோதனையின் மூலம் உறுதிசெய்வார்கள். மஞ்சள் காமாலையின் பல அறிகுறிகளில் இதுவும் ஒன்று.
மஞ்சள் காமாலை ஏற்பட வேறு சில காரணங்களும் இருக்கலாம். உதாரணத்துக்கு, ஹெப்படைட்டிஸ் (Hepatitis) ஏ, பி, சி, டி மற்றும் இ போன்ற வைரஸ் தொற்றுகள், அதிக மது அருந்தும் பழக்கம், சிரோசிஸ் (Cirrhosis) எனப்படும் கல்லீரல் வீக்கம், ஆட்டோ இம்யூன் நிலைகளால் ஏற்படும் பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை கற்கள் பித்த நாள அடைப்பு என இதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்.
மஞ்சள் காமாலை என்பது உறுதிசெய்யப்பட்டால், சித்த மருத்துவர்கள், பத்திய உணவுகளைக் கட்டாயம் வலியுறுத்துவார்கள். கல்லீரல் என்பது உடலின் மெட்டபாலிசம் மற்றும் நச்சு நீக்கத்திற்கு (Detox) மிக முக்கியமான உறுப்பு.
பசி, செரிமானம், கழிவு வெளியேற்றம் என எல்லாவிதமான ஹார்மோன் தொடர்பான செயல்பாடுகளுக்கும் கல்லீரல்தான் பிரதானம். கல்லீரல் அழுத்தத்தில் இருக்கும்போது அதற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்படியான கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், அதிக காரம், உப்பு மற்றும் சர்க்கரை, அசைவ உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், விருந்து சாப்பாடு போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது.
எந்தக் காரணத்தால் மஞ்சள் காமாலை வந்திருந்தாலும் அதிலிருந்து குணமாகி, கல்லீரல் இயல்புநிலைக்குத் திரும்பும்வரை, குறைந்தது 2-3 வாரங்களுக்காவது பத்திய உணவுகளைப் பின்பற்ற அறிவுறுத்துவோம்.
அதனால்தான் மஞ்சள் காமாலை பாதித்தால், எளிதில் செரிமானமாகும் இட்லி, இடியாப்பம், ஆப்பம், கல் தோசை, புளிப்பு ஏறாத உணவுகள், புழுங்கல் அரிசி கஞ்சி அல்லது பாசிப்பருப்பு சேர்த்துக் குழைய வேகவைத்த கிச்சடி (எண்ணெய் இல்லாமல்), காரம் மற்றும் உப்பு குறைவாக வீட்டிலேயே செய்த காய்கறி சூப், புளிப்பில்லாத மோர் சாதம் மற்றும் பருப்புத் தண்ணீர் ரசம் போன்றவை சிறந்தவை.

வழக்கமாக நம் உணவில் 8 கிராமுக்கு மேல் உப்பு இருக்கும். மஞ்சள் காமாலை பாதித்தவர்கள், ஒரு நாளைக்கு 2 கிராம் உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், மருத்துவர் அறிவுறுத்தினால் ஒழிய உப்பை முழுமையாகத் தவிர்க்கவும் கூடாது. நிறைய தண்ணீர் குடித்து, சிறுநீரை வெளியேற்றும்போது, அதிகப்படியான பிலிருபின் வெளியேறி, சிறுநீரின் நிறம் இயல்பாக மாறும். வெளிறிய நிறத்தில் வெளியேறிக் கொண்டிருந்த மலமும் இயல்பாக மாறும்.
உணவுமுறையோடு சேர்த்து, கீழாநெல்லி மற்றும் கரிசலாங்கண்ணி இரண்டையும் சம அளவு (ஒரு கைப்பிடி) எடுத்து அரைக்க வேண்டும். சாறாக இருந்தால் 30 மில்லி அல்லது அரைத்த விழுதாக இருந்தால் ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து காலை வெறும் வயிற்றில் உப்பில்லாத மோரில் கலந்து 3 முதல் 5 நாள்கள் குடிக்க வேண்டும். இது காமாலை பாதிப்புகளைச் சரிசெய்ய உதவும். கல்லீரல் இயல்புநிலைக்குத் திரும்ப பொதுவாக 2 முதல் 3 வாரங்கள் ஆகும். இருப்பினும், குறைந்தது 6 வாரங்கள் வரை பத்தியத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.




















.jpeg)