`பொய் வழக்கு; தமிழ்நாடு உள்துறை ரூ.8 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ - உயர் நீ...
Doctor Vikatan: வெண்டைக்காய் ஊறவைத்த நீர்; சர்க்கரைநோய், பிசிஓடி, குடல் பிரச்னைகளுக்கு பயனளிக்குமா?
Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ பார்த்தேன். வெண்டைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி சரியாகும், குடல் பிரச்னைகள் குணமாகும் என்று அதை சர்வரோக நிவாரணி போல சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை... யார், எப்படி, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவர் யோ. தீபா.

வெண்டைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதிலுள்ள சத்துகள், பலவகைகளிலும் ஆரோக்கியத்துக்கு உதவுவது உண்மைதான்.
சமூக ஊடகங்களில் சமீபகாலமாக வெண்டைக்காய் குறித்து நிறைய தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தும், பெண்களின் இல்லற வாழ்க்கையை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
ஆனாலும், இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதற்கான ஆதாரங்கள், நிரூபணங்கள் இதுவரை இல்லை. அதற்குள் போவதற்கு முன், வெண்டைக்காய் தண்ணீர் குறித்துப் பார்ப்போம்.
வெண்டைக்காயை வெட்டி, தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் அந்தத் தண்ணீரை மட்டும் குடிக்கலாம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து இருக்கும்.
அது தண்ணீரை கெட்டியாக்கி, ஒருவித மணத்தையும் கொடுக்கும். ஆனால், இதில் அறிவியல்பூர்வ நன்மைகள் உள்ளனவா என்பதற்கான ஆய்வுகள் இதுவரை இல்லை.

ஆனாலும், வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால், அதில் தேவையான வைட்டமின்கள், (வைட்டமின் ஏ மற்றும் கே) தாதுச்சத்துகள், மக்னீசியம், ஃபோலேட், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் போன்றவை இருப்பதால், பச்சையாக எடுத்துக்கொள்வதாலேயே அதன் பலன்கள் நமக்குக் கிடைத்துவிடும். ஆனாலும், இதை யாரெல்லாம், எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதற்கான ஆய்வுகள் தேவை.
இதில் செரிமானத்தை மேம்படுத்தும் திறன் இருக்கிறது. 2019-ல் விலங்குகளை வைத்து இது குறித்து ஓர் ஆராய்ச்சியும், 2021-ல் மற்றோர் ஆராய்ச்சியும் நடத்தப்பட்டுள்ளன.
அதில் வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு, ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெண்டைக்காய் சாப்பிட்டால் இயல்பிலேயே குடலின் செயல்திறன் சீராகும். வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதாலும் குடல் இயக்கம் சீராகும்.

2023-ல் நடத்தப்பட்ட மற்றோர் ஆய்வில், வெண்டைக்காய் ஊறவைத்த நீருக்கு கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெண்டைக்காய் அலர்ஜி உள்ளவர்களுக்கு இப்படியெல்லாம் எடுப்பது அலர்ஜியை தீவிரப்படுத்தலாம். இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் அந்தத் தண்ணீரைக் குடிப்பதும் சிலருக்கு செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே, ஃப்ரெஷ்ஷாக சமைத்து உடனே சாப்பிடுவதற்கும், இப்படி இரவு முழுவதும் ஊறவைத்து சமைக்காமல் சாப்பிடுவதற்கும் வேறுபாடுகள் உண்டு.
இதில் ஆக்ஸலேட் அதிகம் என்பதால் கிட்னி ஸ்டோன்ஸ் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும். ஆக்ஸலேட் என்பது கால்சியத்துடன் சேர்வதால்தான் கிட்னி ஸ்டோன் உருவாகிறது.
எனவே, எந்த மருத்துவத் தகவலையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவதுதான் சரியானது. சோஷியல் மீடியாவை பார்த்துப் பின்பற்றுவது ஆபத்தானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















