Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
Doctor Vikatan: இதய நோயாளிகள் வாக்கிங் போகலாமா, எந்த வேகத்தில் நடக்க வேண்டும்?
Doctor Vikatan: என் மாமனாருக்கு சமீபத்தில் ஹார்ட் சர்ஜரி நடந்தது. இப்போது அவர் நலமாக இருக்கிறார். ஆபரேஷனுக்கு முன்பு அவருக்கு வாக்கிங் செல்லும் பழக்கம் இருந்தது. இப்போது மீண்டும் வாக்கிங் போக வேண்டும் என்கிறார். அதை அனுமதிக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

இதய நோயாளிகள் கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்யலாம். ஆனால், மருத்துவரின் அனுமதியுடன் மட்டுமே செய்ய வேண்டும். உண்மையில், அனைத்து இதய நோயாளிகளையும் மருத்துவர்கள் நடக்கச் சொல்கிறோம். ஒவ்வொரு நோயாளிக்கும் எவ்வளவு தூரம் நடக்கலாம், எந்த வேகத்தில் நடக்கலாம், எப்படி நடக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறோம்.
மாரடைப்பு (Heart Attack) ஏற்பட்ட நோயாளிகளைக் கூட, ஒரு நாள் படுக்கை ஓய்வுக்குப் பிறகு, அடுத்த நாள் படுக்கையில் உட்கார வைத்து, 48 மணி நேரத்திற்குப் பிறகு நாற்காலியில் உட்கார வைத்து பிறகு நடக்க வைக்கிறோம்.
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் கூட, 24 மணி நேரத்திற்குப் பிறகு, வெளியே வந்த பின்னர், அடுத்த 48 மணி நேரத்தில் நாற்காலியில் உட்கார வைக்கப்படுவார்கள். 72 மணி நேரத்தில் அவர்களை நடக்க வைக்கிறோம்.
எனவே, நடப்பது மிக மிக முக்கியம். இது 'கார்டியாக் ரீஹேபிலிடேஷன்' (Cardiac Rehabilitation) என்ற முறையின் கீழ், ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலைக்கேற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட (Personalized) சிகிச்சையாக அளிக்கப்படுகிறது.
ஏனெனில், ஒவ்வொரு நோயாளியும் ஒவ்வொரு விதமானவர்கள். சிலருக்கு நுரையீரல் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு இதயம் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு தசைகள் பலவீனமாக இருக்கலாம், சிலருக்கு கால் வலி காரணமாக நடக்க முடியாமல் இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காக, அவர்களுக்கேற்றபடி நாங்கள் நடைப்பயிற்சியைப் பரிந்துரைக்கிறோம்.

நடைப்பயிற்சி இதயத்தின் திறனை மேம்படுத்தி, ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத் திறனை உயர்த்துகிறது. நோயாளியின் இதய நிலை, ஸ்டென்ட் வைத்த பிறகோ அல்லது பைபாஸ் செய்த பிறகோ, அல்லது நாள்பட்ட நிலையான இதய நோயில் (Stable Angina) இருந்தால், மருத்துவர் அறிவுறுத்தியபடி நடக்கலாம்.
பொதுவாக, காலை மற்றும் மாலை என இரு வேளையும் நடக்கச் சொல்வோம். ஒரு வேளை மட்டுமே நடக்க முடியுமானால், காலையில் நடப்பது நல்லது.
ஆரம்பத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். குறைந்தபட்சம் வாரத்திற்கு 5 நாள்கள் நடக்க வேண்டும். இதனை படிப்படியாக 15, 20, 25, 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். தொடர்ந்து 30 நிமிடங்கள் நடந்த பிறகு, 5 அல்லது 10 நிமிடங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, மீண்டும் 30 நிமிடங்கள் நடக்கலாம்.
நடக்கும்போது படபடப்பு (Palpitation) அல்லது மூச்சு வாங்குதல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டால், 10 முதல் 20 நிமிடங்கள் நடந்துவிட்டு, 5 நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு, மீண்டும் 10 முதல் 20 நிமிடங்கள் நடக்கலாம். (இது ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது நிலையைப் பொறுத்து அறிவுரையாக வழங்கப்படும்).
ஒரு மணி நேரம் நடப்பவர்கள் கூட, இடையில் 5 நிமிடங்கள் உட்கார்ந்து, மூச்சுப் பயிற்சி, கை மற்றும் தோள்பட்டைகளுக்கான பயிற்சிகள் செய்துவிட்டு மீண்டும் நடக்கலாம்.
மிதமான வேகத்தில் நடப்பது நல்லது. அதற்காக, மிக மெதுவாக நடந்தால் பலன் இல்லை. மிக வேகமாக நடப்பதும் அவசியம் இல்லை. உங்களால் பேசிக்கொண்டே நடக்க முடியும் என்பதே மிதமான வேகம் என அர்த்தம். நடக்கும்போது மூச்சு வாங்கக்கூடாது. மூச்சு விடுவதில் சிரமம் இருக்கக்கூடாது. இதுவே சரியான வேகம்.

அதிகமான வேகத்தில் சென்றால் இதயத் துடிப்பு அதிகமாகி, பாதிப்பு வர வாய்ப்புள்ளது. சாதாரணமாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 70 முதல் 80 வரை இருக்கும். நீங்கள் நடக்கும்போது அது அதிகபட்சமாக 120 முதல் 140 வரை போகலாம். இதற்கு மேலும் போகக்கூடாது. அதேபோல், இதற்கு குறைவாக இருந்தாலும் பலன் இல்லை.
நடைப்பயிற்சியைத் தொடங்கும்போது, மூன்று நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆரம்பத்தில் 5 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் தொடங்கி, படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். நிறுத்தும்போது, சடாரென நிறுத்தக்கூடாது. அதிக வேகத்தில் இருந்து மெதுவாக வேகத்தைக் குறைத்து, 5 நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக நிறுத்த வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.














