ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
Doctor Vikatan: எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் அசைவம் சாப்பிடக் கூடாதா?
Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் நாள்களில் அசைவ உணவுகளையும் சைவத்திலுமே சில உணவுகளையும் சாப்பிடக் கூடாது என்கிறார்களே... அது உண்மையா...? எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் இது போன்ற கட்டுப்பாடுகள் வேறு ஏதேனும் உண்டா... அவை வலியுறுத்தப்படுவதன் நோக்கம் என்ன?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது நமது உடலை ஆசுவாசப்படுத்தவும் (Relaxation), உடலின் உள் உறுப்புகளைச் சீரமைக்கவும் (Reset) மேற்கொள்ளப்படும் ஒரு செயலாகும். அந்த நாள்களில் உணவுக் கட்டுப்பாட்டையும், சில வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்றுவது மிகவும் அவசியம்.
எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் சிக்கன், மட்டன் மற்றும் பிரியாணி போன்ற பலமான அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
அகத்திக்கீரை, சிறுகீரை, எள், கொள்ளு மற்றும் பாகற்காய் போன்றவற்றையும் சாப்பிடக் கூடாது. பால், பாலாடை மற்றும் பனீர் போன்றவை மந்தத்தை ஏற்படுத்தக்கூடியவை மற்றும் செரிமானத்திற்கு கடினமானவை என்பதால் இவற்றையும் தவிர்க்க வேண்டும். அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், காரமான உணவுகள் (Spicy food), பொரித்த உணவுகள் (Fried food) மற்றும் இனிப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய்க் குளியலின்போது உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி, உடல் சூடு குறையும். இந்த நேரத்தில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளையும், காரசாரமான உணவுகளையும் சாப்பிடும்போது, குடல் சூடு மேலும் அதிகரிக்கும். செரிமான மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றம் (Metabolism) அதிக சுமைக்கு உள்ளாகும். விடுமுறை நாள்கள் ஓய்வுக்கானவை என்று சொல்லிக்கொண்டு, அந்த நாள்களில் வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்வதைப் போன்றதுதான் இதுவும்.
நமது ரத்தம் மற்றும் உள் உறுப்புகளுக்கென்று குறிப்பிட்ட வெப்பநிலை உண்டு. அதை உள் வெப்பநிலை (Core Temperature) என்று சொல்கிறோம். இந்த வெப்பநிலையானது, நம் வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை முறைப்படுத்துகிற வேலையைத்தான் எண்ணெய்க் குளியல் செய்யும். அந்நேரத்தில் ஹெவியான உணவுகளை உண்பது குடல் சூட்டை மீண்டும் அதிகரிக்கும்.

எண்ணெய்க் குளியல் என்பதே நம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதற்கும்தான் செய்யப்படுகிறது. ஓய்வு என்பது உடலளவிலான ஓய்வை மட்டும் குறிப்பதல்ல. உடலின் உள் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, அவற்றின் சூட்டைக் குறைப்பதும் இதில் அடங்கும். எனவே, எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் சாப்பிடும் உணவுகள், பலத்தைக் கொடுக்க வேண்டும், பலவீனத்தைப் போக்க வேண்டும். இட்லி, தோசை, இடியாப்பம் மற்றும் ஆப்பம் போன்ற நீராவியில் வேகவைத்த எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடலாம். காய்கறி சூப் அல்லது அசைவம் உண்பவராக இருந்தால் எலும்பு சூப் (Bone broth) அருந்தலாம். எண்ணெய் குளியலுக்குப் பிறகு வெயிலில் அலைவதோ அல்லது மழையில் நனைவதோ கூடாது. உடலுக்குப் போதுமான ஓய்வு அளிக்க வேண்டும்.
எண்ணெய்க் குளியல் எடுக்கும் நாள்களில் நன்றாகத் தூக்கம் வரும். ஆனால், பகல் தூக்கத்தைத் தவிர்க்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறுவதுடன், மன அழுத்தமும் குறையும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



















