தொடங்கிய இறுதி ஊர்வலம்: வி.எஸ் பாபு உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்!
EPFO SWP: ஓய்வுக்குப் பிறகு PF பணத்தை தவணையாகப் பெறலாம்; வட்டியும் தொடரும்! 3 ஆப்ஷன்கள் என்ன?
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஓய்வுக்குப் பிறகு பி.எஃப். சேமிப்புத் தொகையை மொத்தமாக எடுப்பதற்குப் பதிலாக, தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் Systematic Withdrawal Plan-க்கு (SWP) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் புதிய வசதியின் கீழ், ஓய்வுபெற்றவர்கள் தங்களது சேமிப்பிலிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதே சமயம், கணக்கில் மீதமிருக்கும் பி.எஃப். தொகைக்கு வழக்கமான இ.பி.எஃப். வட்டி விகிதத்தில் தொடர்ந்து வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும்.
உதாரணத்திற்கு, ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது அவரது பி.எஃப். கணக்கில் ரூ.30 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

அவர் அந்த முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுப்பதற்குப் பதிலாக, சிறிய தவணைகளாகப் பிரித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
இது மூன்று வகைப்படுகிறது.
ஒன்று, பி.எஃப். சேமிப்பைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் (மாதந்தோறும் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை) தொடர்ந்து பெற்றுக்கொள்வது,
இன்னொன்று, ஒரு குறிப்பிட்ட தொகையை உடனடியாக மொத்தமாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையைத் தவணை முறையில் பெறுவது,
மற்றொன்று, அசல் தொகையை அப்படியே முதலீட்டில் வைத்துவிட்டு, அதற்குக் கிடைக்கும் வட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது.
கணக்கில் மீதமிருக்கும் பி.எஃப். இருப்புத் தொகைக்குத் தொடர்ந்து வட்டி வழங்கப்படும்.
2025-26 நிதியாண்டிற்கான இ.பி.எஃப். வட்டி விகிதமாக 8.25 சதவிகிதம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பணம் பெறும் காலகட்டத்தில் குறிப்பிட்ட நபர் உயிரோடு இல்லையென்றால், விதிகளுக்கு உட்பட்டு அவரது வாரிசுதாரர் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் மீதமுள்ள தொகையை மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.

எப்போது நடைமுறைக்கு வருகிறது?
இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர, இன்னும் இது நடைமுறைக்கு வரவில்லை.
இந்தத் திட்டத்தில் பணம் எடுக்கும் நடைமுறை, பணம் வழங்கப்படும் கால இடைவெளி மற்றும் குறைந்தபட்ச இருப்புத் தொகை ஆகியவற்றைப் பற்றி இன்னும் சொல்லவில்லை.
இந்தப் புதிய எஸ்.டபிள்யூ.பி. வசதி பி.எஃப். சேமிப்புத் தொகைக்கு மட்டும்தான். ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் கிடைக்கும் மாதாந்திர ஓய்வூதியத்திற்கு இது பொருந்தாது.
















