BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா
IND vs SA: ``இதையெல்லாம் தலைக்கு ஏற்றினால் கிரிக்கெட் ஆட முடியாது" - விமர்சனங்களுக்கு ஹர்ஷித் பதிலடி
2024 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருந்தபோது சற்று வெளிச்சத்துக்கு வந்தவர் ஹர்ஷித் ராணா.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்ற பிறகு, போர்டர்–கவாஸ்கர் டெஸ்ட் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் ஹர்ஷித் ராணா ஆடவைக்கப்பட்டார்.
இதுமட்டுமல்லாமல், சமீபத்தில் இந்தியா ஆடிய பெரும்பாலான தொடர்களின் 15 பேர் அணிப் பட்டியலில் இடம்பெற்ற மூன்று–நான்கு வீரர்களில் ஹர்ஷித் ராணாவும் ஒருவர்.

உள்ளூர் கிரிக்கெட்டில் தங்களை நிரூபித்த அபிமன்யு ஈஸ்வரன், சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்களை 15 பேர் பட்டியலில் கூட தேர்வு செய்யாத நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டிலும் இந்திய அணியிலும் பெரிய அளவில் சோபிக்காத ஹர்ஷித் ராணாவை தொடர்ச்சியாக அணியில் தேர்வு செய்வது விமர்சனப் பொருளாகியுள்ளது.
குறிப்பாக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் இதில் கம்பீரின் தலையீடு அதிகமாக இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் ஒரே ஒரு முறை மவுனம் கலைத்த கம்பீர், “தங்களின் யூடியூப் சேனலை ஓடவைப்பதற்காக 23 வயது வீரரை தனிப்பட்ட முறையில் டார்கெட் செய்வது வெட்கக்கேடு. உங்களுக்கு என்னை டார்கெட் செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள்.
அந்த 23 வயது குழந்தையை விட்டுவிடுங்கள். யூடியூப் சேனலுக்காக எதையாவது பேசாதீர்கள். அவனுடைய அப்பா ஒன்றும் தேர்வுக்குழுவில் உள்ள நபர் அல்ல,” என்று பொதுப்படையாகவும், சிலரை மறைமுகமாகவும் விமர்சித்தார்.

இத்தகைய சூழலில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நடப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், தன்மீதான விமர்சனங்களுக்கு ஹர்ஷித் ராணா எதிர்வினை ஆற்றியுள்ளார்.
நேற்று (டிசம்பர் 2) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஹர்ஷித் ராணா, ``இதையெல்லாம் காதில் வாங்கி தலையில் ஏற்றிக்கொண்டு களத்துக்கு வந்தால் என்னால் கிரிக்கெட் ஆட முடியாது. முடிந்தவரை அவற்றைத் தவிர்க்க முயற்சிக்கிறேன்.
களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். வெளியே என்ன நடக்கிறது அல்லது என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

எனது கடின உழைப்பிலும், களத்தில் என்ன செய்யப் போகிறேன் என்பதிலும் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன்.
புதிய பந்தில் மோர்னே மோர்கலுடன் (பந்துவீச்சு பயிற்சியாளர்) நிறைய பயிற்சி செய்து வருகிறேன்.
அர்ஷ்தீப்புடன் நிறைய உரையாடுகிறேன். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. பயிற்சியின் போது அவர் எனக்கு உதவி செய்து என்னை வழிநடத்துகிறார்" என்று கூறினார்.






.jpg)











