விழுப்புரம்: அணிவகுத்த பாரம்பர்ய உணவுகள்; சமையல் சூப்பர் ஸ்டார் போட்டியில் மகுடம...
India - US Trade Deal: `இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டுமே!' - க.கனகராஜ் | களம் 03
எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’
இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது `இந்திய அமெரிக்க ஒப்பந்தமும் சர்ச்சையும்'.
(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மாபெரும் வெற்றி என மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டாடி மகிழ்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இருதரப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக எக்ஸ் தளத்தில் பதிவிடுவது, அதை பகிர்ந்து இந்தியாவின் பிரதமர், அமைச்சர்களும் கொண்டாடுவது மிக மோசமான முன்னுதாரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்று தேடித்தேடி பார்த்தால் நிகரமாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், வர்த்தக கொள்கைக்கும், பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய இழப்பு என்று உறுதியாக சொல்ல முடியும்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மீது 25 சதவிகிதம் இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணையை இறக்குமதி செய்வதற்காக 25 சதவிகிதம் தண்டனை வரி என்பதை குறைத்து 18 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 18 சதவிகிதம் வரி என்பது இதர நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது அதிகம் தான் என்றாலும், இந்திய பொருட்களால் போட்டியிட முடியும் என்பது சற்று பலன் தரக்கூடியதுதான். ஆனால், இதற்காக நாம் இழப்பது எவ்வளவு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இறக்குமதிக்கு இலக்கா அல்லது இழப்பிற்கு இலக்கா?
2025 ஆம் ஆண்டு முழுவதும் மொத்தமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் அளவு சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாகும். அது இப்போது 10 மடங்காக அதிகரித்து 45 லட்சம் கோடி ரூபாய் (500 பில்லியன் டாலர்) அளவிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு இறக்குமதி வரி விதிப்பு மூலம் இந்தியா சுமார் 25,000 கோடி ரூபாய் வரியாக பெற்றிருக்கிறது. இந்நிலையில், இறக்குமதி 10 மடங்காகும் என்ற சொல்லப்படும் நிலையில் இறக்குமதிக்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டின் அளவிலேயே இறக்குமதி மட்டும் உயர்கிறது என்று வைத்துக் கொண்டால் சுமார் 2 1/2 லட்சம் கோடி அளவிற்கு நாம் இறக்குமதி வரி வசூலிக்க வேண்டும்.

ஆனால், அது இனிமேல் முற்றிலுமாக இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இந்திய கஜானவிற்கு வரவேண்டிய இரண்டரை லட்சம் கோடி இனி வராது. ஒரு ஒப்பந்தத்தின் மூலம் மாறுதல் செய்கிறோம். அப்படியே ஒப்பீடு செய்வது சரியல்ல என்று ஒருவர் சொல்லக்கூடும். அப்படி வைத்துக் கொண்டால் கூட அமெரிக்கா சொல்லும் 45 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதிக்கு 10 சதவிகிதம் வரி விதித்தால் அது 4 1/2 லட்சம் கோடி. 5 சதவிகிதம் விதித்தால் 2 1/4 லட்சம் கோடி. ஒரு சதவிகிதம் விதித்தால் கூட 45,000 கோடி.
ஆனால், இதை முற்றிலுமாக விட்டுக்கொடுக்க மோடி அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இந்திய மக்களின் பிரதான உணவு தானியங்களான அரிசிக்கும், கோதுமைக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. உத்தேசமாக, இதன் மூலமாக மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாயை இந்திய அரசாங்கம் பெறுகிறது. ஆனால், அமெரிக்காவிற்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை விட்டுத்தர முன்வருகிற இந்தியா உணவுப்பொருள் மீதான ஜிஎஸ்டி-யை விலக்கிக் கொள்ள தயாராக இல்லை.
இரண்டாவதாக, இந்தியாவிற்கு தேவைப்படுகிற பொருளை தேவைப்படுகிற அளவிற்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், 45 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யச் சொல்வதும் அதுபற்றி மோடி அரசாங்கம் மௌனம் காப்பதும் ஏனென்று தெரியவில்லை. 45 லட்சம் கோடி என்பது இந்தியாவின் 2026 பட்ஜெட்டில் 84 சதவிகிதம். இந்த அளவிற்கு இறக்குமதி செய்வது என்று இலக்கு வைப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்.
ஒரு நாடு தன் தேவைக்குத்தான் இறக்குமதி செய்ய வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டின் வியாபாரத்திற்காக தன் நாட்டு தொழில்களை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று விடுவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. இது வெறும் பொருள் இறக்குமதி சார்ந்ததாக மட்டும் இருக்காது. இந்திய தொழில்கள் பாதிக்கப்படும், தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள், அந்நிய செலாவணி குறையும், நடப்பு கணக்கில் மிகப்பெரிய பள்ளம் ஏற்படும். இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் டொனால்ட் ட்ரம்ப் சொல்கிறார் என்பதற்காக அமைதி காப்பது இந்தியாவின் நலனை காவுக் கொடுப்பதாகும்.

ரஷ்ய கச்சா எண்ணையும் வெனிசுலா கச்சா எண்ணையும்
ஏதோ தான் அமைதிக்காக அவதாரம் எடுத்தது போல் டொனால்ட் ட்ரம்ப் பேசித் திரிகிறார். நரேந்திர மோடி தனது நன்றி அறிவிப்பு எக்ஸ் பதிவில் டொனால்ட் ட்ரம்ப்பின் அமைதி முயற்சிகளை பாராட்டி புளகாங்கிதம் அடைந்துள்ளார். ஒரு நாட்டின் அதிபரை திருட்டுத்தனமாக இரவு நேரத்தில் புகுந்து மனைவியோடு கடத்திக் கொண்டுவந்து தன் நாட்டில் சிறை வைப்பது அமைதி நடவடிக்கையா? 66,000 பாலஸ்தீனியர்களை கொன்று குவித்தபோது இஸ்ரேலுக்கு துணையாக நின்றது அமைதி நடவடிக்கையா? கனடாவை தனது மாநிலங்களில் ஒன்றாக இணைத்துக் கொள்ள போகிறேன் என்று கொக்கரிப்பது அமைதி நடவடிக்கையா?
கீரின்லாந்து எனக்குத்தான் சொந்தம் என்று திமிர்த்தனமாக பேசுவது அமைதி நடவடிக்கையா? இத்தனை இருந்தபிறகும், ரஷ்யா போரில் ஈடுபடுவதற்கு எண்ணை வியாபாரம் தான் காரணம், எனவே போருக்கு எதிராக எனது நடவடிக்கை இது என்று ட்ரம்ப் பசப்பித்திரிகிறார். இதே ட்ரம்ப் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து போரை நிறுத்து என்று சண்டியர்த்தனம் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொண்டவர். அதன்பிறகு அரிய வகை தனிமங்களை அடிமாட்டு விலைக்கு விற்க உக்ரைனை நிர்ப்பந்தித்து அடிமை சாசனம் எழுதி வாங்கிக் கொண்ட பிறகு போருக்கு ஆயுதமும், பணமும் கொடுத்ததை எந்த வகையில் சேர்க்க.
ஆனாலும், அமெரிக்கா சொல்கிறது ரஷ்யாவிடம் எண்ணை வாங்காதே என்று. அதிலாவது, தர்க்க ரீதியாக ஏதோ நியாயம் இருப்பதாக நாமும் கற்பனை செய்து கொள்ளலாம். ஆனால், வெனிசுலாவிடம் தான் கச்சா எண்ணை வாங்க வேண்டும் என்று சொல்வது என்ன வகையில் நியாயம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 68 டாலராக இருந்தபோது ஆரம்பித்து இப்போது வரை ஒரு பீப்பாய் 60 டாலருக்கு ரஷ்யா இந்தியாவிற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.
இன்றைய நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 68 டாலர். அதாவது ஒரு பீப்பாய்க்கு 8 டாலர் அதிகம். ஒரு நாளைக்கு 21 லட்சம் பீப்பாய்களை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்தது. இப்போது ஏற்படும் இழப்பை யார் சரிக்கட்டுவார்கள். ஏற்கனவே இறக்குமதி பொருட்களுக்கு வரியே இல்லை என்பதன் மூலம் குறைந்தபட்சம் 45,000 கோடியிலிருந்து சில லட்சம் கோடிகள் வரை இந்தியா இழக்கும் நிலையில், இன்னொரு பக்கம் கச்சா எண்ணை இறக்குமதியை ரஷ்யாவிடமிருந்து மாற்றுவதால் அதுவும் ஒரு மிகப்பெரிய இழப்பாக அமையப்போகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தை இந்தியாவிற்கு ஆதரவான ஒப்பந்தம் என்று கொண்டாட முடியாது. மாறாக, இத்தகைய அள்ளிக் கொடுக்கும் அடிபணிந்து போகும் ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தை, தொழில்களை சீரழிக்கப் போகிறது.

இன்னும் என்னவெல்லாம் மறைந்திருக்கிறது என்பது முழுமையான ஒப்பந்தம் வெளிவந்தால் மட்டுமே வெளிச்சம் கிடைக்கும். அதில் ஒன்றும் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட இந்தியாவிற்கு சாதகமான எதுவும் இருந்துவிடும் என்று நம்புவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. எனவே, இந்த ஒப்பந்தம் உண்மையில் இருதரப்பு ஒப்பந்தம் அல்ல இந்தியா மீது அமெரிக்காவின் நிர்ப்பந்தம் மட்டும்தான்.!















