செய்திகள் :

Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? - பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth

post image

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

தலைநகரில் வெடித்த வர்த்தகர்கள் போராட்டம்!

கடந்த இரு வாரங்களாக இரான் பெரும் கொந்தளிப்பிலிருக்கிறது. இரானின் இஸ்லாமிய மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டங்கள் இரானிய ஆட்சிக்கு உலை வைத்துவிடுமா என்ற கேள்வியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்களை அடுத்து, இந்த உள் நாட்டு கிளர்ச்சி, மற்றொரு பிராந்தியப் போரைத் தூண்டுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இரானின் தலை நகர் டெஹ்ரானில் கடந்த டிசம்பர் 28ந்தேதி முதலில் தொடங்கியது பிரச்னை.

இரானிய நாணயமான, ரியாலின் மதிப்பு , அமெரிக்க டாலருக்கு எதிராக அதல பாதாளத்தில் வீழ்ந்த நிலையில் ( 1 டாலர் - கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரியால் ) , டெஹ்ரானின் முக்கிய வணிக வீதியில் உள்ள பெரிய மார்க்கெட் வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களும் பின்னர் சேர்ந்துகொள்ள எதிர்ப்புகள் பெருகின.

இரான் போராட்டம்!

இந்தக் கொந்தளிப்புக்கு காரணம் , கடந்த பல ஆண்டுகளாகவே இரான் எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகள்தான் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இரான் மீது கடந்த ஆண்டு நடத்திய 12 நாள் குண்டுத்தாக்குதலும் இரானியப் பொருளாதாரத்தை மேலும் அழிவுப்பாதைக்குக் கொண்டுசென்றது.

இரானின் அணு சக்தித் திட்டம் குறித்து ஒபாமா நிர்வாகம் இரானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் நிர்வாகம் வெளியேறியது. அதை அடுத்து கடுமையாக்கப்பட்ட அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் இரானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தின.

இரானிய நாணயத்தின் தொடர் வீழ்ச்சி... விலைவாசி உயர்வு!

கடந்த ஆண்டு ஓர் அமெரிக்க டாலருக்கு எதிராக 7 லட்சம் ரியால்கள் என்ற அளவில் மோசமான நிலையில் இருந்த இரானிய நாணயம், டிசம்பர் மாதம் மேலும் சரிந்து ஒரு மில்லியன் ரியால் என்ற அளவுக்கு மேல் வீழ்ந்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்குக் கொண்டு சென்றது.

இரானியப் பணவீக்கம் சுமார் 40 சதவீதம் என்ற அளவுக்கு ராக்கெட் போல் பாய்ந்த நிலையில்,

பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தையும் , வணிகர்களின் வர்த்தகத்தையும் பாதித்தது.

இந்த நிலையில் வெடித்த டெஹ்ரான் போராட்டங்கள், மேலும் நாடெங்கும் பரவின. இரான் முழுவதும் சுமார் 68 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

Iran

இந்த ஆர்ப்பாட்டங்களை கடந்த காலங்களில் ஒடுக்கியதைப் போலவே இம்முறையும் ஒடுக்க இரான் எத்தனித்தது.

ராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படைகளை போராட்டக்காரர்களை ஒடுக்க இரானின் மதகுருமார்கள் அரசு ஏவியது.

பொதுமக்கள் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்புப் படைகள் பல இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களை நடத்தியதில், பல நூற்றுக்கணக்கானோர் இறந்திருக்கின்றனர்.

2,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!

இந்த வன்முறைகளில் சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இரான் அரசு இதை மறுக்கிறது. இரானின் வெளி நாட்டு எதிரிகள் செய்யும் பொய்ப் பிரசாரம் என்று இரான் வர்ணிக்கிறது.

செய்தித் தணிக்கை

போர் என்றாலே முதல் பலி உண்மைச் செய்திதான் என்பார்கள். எதேச்சாதிகார நாடுகளிலும் நிலைமை அப்படித்தான் என்பது தெரிந்த விஷயம்.

இரான் ஏற்கனவே கடும் செய்தித் தணிக்கையை அனுபவித்துவரும் நாடு. வெளிநாட்டு ஊடகங்கள் எதுவும் அங்கு செயல்படுவதில்லை. இந்த நிலையில் இந்தப் போராட்ட செய்திகள் இணையம் மூலமாக மட்டுமே வெளி உலகுக்குத் தெரியவரும் என்பதை உணர்ந்த இரானிய அரசு, கடந்த ஒருவாரமாக இணைய சேவையை முடக்கியிருக்கிறது.

இரான்

ஆனால் இதையும் மீறி, இரானில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வி.பி.என் போன்ற வலையமைப்புகளை பயன்படுத்தி ஓரளவு செய்திகளை வெளியே கொண்டுவந்திருக்கின்றனர்.

எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் விண்வெளி வழியே இணையசேவைகளை தரும் நிறுவனம். இந்த ஸ்டார்லின்க் ஏற்கனவே இரானில் தடை செய்யப்பட்டிருந்தாலும், அதை ரகசியமாக பயன்படுத்தி பல இரானியர்கள் செய்திகளை வெளி உலகுக்குத் தெரியப்படுத்திவருகிறார்கள்.

டெஹ்ரானில் சுமார் 200 போராட்டக்காரர்களின் சடலங்கள் ஒரு மருத்துவமனை சடலக்கிடங்கில் அடுக்கி வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியெ கொண்டுவந்தது இந்த மாதிரி ரகசிய இணைய சேவைகள் மூலமாகத்தான்.

போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை?

இதனிடையே, இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பலருக்கு அவசர அவசரமாக இரானிய நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்து வருவதாகவும் செய்திகள் வந்தன. இதைக் கண்டித்து தனது சமூக ஊடகமான Truth Socialல் பதிவு ஒன்றை செய்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போராட்டக்காரர்கள் மீது மரண தண்டனை விதிப்பதை இரானிய அரசு நிறுத்தவேண்டும் இல்லையேல் அமெரிக்கா நேரடியாக தலையிடும் என்று எச்சரித்தது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர் எர்பான் சொல்தானி என்ற 26 வயது இளைஞர். இவர் டெஹ்ரான் அருகே பர்திஸ் என்ற நகரில் துணிக்கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வருபவர். இவரைக் கைது செய்த இரான் பாதுகாப்புப் படையினர், இவர் மீது இரண்டே நாட்களில் விசாரணை நடத்தி மரண தண்டனை விதித்து, புதன்கிழமை தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் அச்சுறுத்தலை அடுத்து அந்த தண்டனை நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அமெரிக்கா, மேற்குலக நிலைப்பாடு!

வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை தனது கொள்கையாகவே முழங்கி, ஆட்சியைப் பிடித்த ட்ரம்ப், பதவிக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக இரான் மீது தாக்குதல், உக்ரைன் விவகாரத்தில் முன்னுக்குப் பின் முரணான போக்கு, சமீபத்தில் வெனிசுலா விவகாரத்தில் தலையிட்டு , மதுரோவை சிறைப்பிடித்து அமெரிக்காவில் சிறை வைத்திருப்பது என்று அடுத்தடுத்து வெளிநாட்டுப் பிரச்னைகளில் தலையிட்டு, இப்போது இப்போது இரானிய மக்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருப்பது வியப்புக்குரியதுதான்.

ஆனால் ட்ரம்ப் என்ன சொன்னாலும், அமெரிக்க நிர்வாக அமைப்புகள் இரான் விவகாரத்தில் சற்று நிதானத்துடனே செயல்படும் என்று கருதுகிறார்கள் மத்தியக் கிழக்குப் பிராந்திய வல்லுனர்கள்.

வெனிசுலா - அமெரிக்கா

இரான் வெனிசுலாவைப் போல எளிதில் வெற்றி கொள்ளக்கூடிய நாடல்ல என்பதை ட்ரம்ப் உணர்ந்திருப்பார் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு காசா போரின்போது இரானின் அணு ஆயுத சோதனைக்கூடங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் முற்றிலும் பலனளிக்காமல் போனதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும், மத்தியக் கிழக்குப் பகுதியில் இஸ்லாத்தின் இரு முக்கிய பிரிவுகளான ஷியா சுன்னி நாடுகளிடையே ஏற்கனவே நிலவும் அரசியல்-சமூக முறுகல் நிலையை , அமெரிக்கா ஒரு சார்பாக நடத்தும் எந்த ஒரு தாக்குதலும் மேலும் கூர்மைப்படுத்தும் என்ற அச்சமும் இருக்கிறது.

இதனால் அமெரிக்கா இரான் விஷயத்தில் எச்சரிக்கையுடனேயே எந்த நடவடிக்கையையும் எடுக்கும் என்றே தோன்றுகிறது.

இரானில் உள் நாட்டு நெருக்கடி அதிகரித்து மக்கள் போராட்டத்தின் மூலம் அரசு மாறுவதையே அமெரிக்கா விரும்பும். எனவே அந்த நிலை உருவாவதற்கு அனைத்து தார்மீக மற்றும் பொருளாதார ஆதரவையும் அமெரிக்கா தர முயலும்.

இஸ்ரேல் போடும் கணக்கு?

ஆனால் அமெரிக்காவின் நிலைப்பாடு ஒரு புறமிருக்க, இரான் கடந்த 40 ஆண்டுகளாக பரம வைரியாகக் கருதிக்கொண்டிருக்கும் இஸ்ரேல் இந்த இரானிய உள் நாட்டுப் பிரச்னைகளை எப்படிப் பார்க்கிறது என்பதும் முக்கியம்.

இரானிய இஸ்லாமிய மதகுருமார்கள் அரசை தன் இருப்புக்கே ஒரு அச்சுறுத்தலாக இஸ்ரேல் பார்த்துவருகிறது. இரானும் இஸ்ரேலை அதே போல ஒரு கடும்போக்குடனே அணுகி வந்திருக்கிறது. இரானின் அணு சக்தித் திட்டங்கள் இஸ்ரேலைக் குறிவைத்தே உருவாக்கப்படுகின்றன என்பது இஸ்ரேலின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அதன் காரணமாகவே இரானிய அணு சக்தி நிலைகளின்மீது அமெரிக்கத் தாக்குதல்கள் கடந்த ஆண்டு நடத்தப்பட இஸ்ரேல் ஒரு முக்கிய தூண்டுகோலாக இருந்தது.

இப்போது இரானிய உள் நாட்டு அரசியல் மீண்டும் மக்கள் போராட்டங்களால் சிக்கலாகியிருக்கும் நிலையில், இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இஸ்ரேல் நிச்சயம் கணக்குப் போடும் என்றே அரசியல் விமர்சகர்கள் நம்புகிறார்கள்.ஆனால். அமெரிக்காவின் கண்ணசைவுக்காக அது காத்திருக்கிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இதை உணர்ந்துதான், இரானிய அரசு, இந்த உள் நாட்டுப் போராட்டங்களையே , இரான்-விரோத வெளி நாட்டு சக்திகள் ஆதரவுடன் நடக்கும் போராட்டம் என்று வர்ணித்து வருகிறது.

இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, வெளி நாடுகளின் “தீய தலையீட்டை” எதித்து இரான் தன்னைக் காத்துக்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார்.

மன்னராட்சி மீண்டும் திரும்புமா?

இந்தப் போராட்டங்களுக்கு உள் நாட்டில் தலைமை தாங்கி நடத்த வலுவான எதிர்க்கட்சி இல்லாத நிலையில், இரானிய முன்னாள் மன்னர் மறைந்த ரேஸா பஹ்லவியின் வாரிசு , இளவரசர் பஹ்லவி அமெரிக்காவில் இருந்து இந்தப் போராட்டக்காரர்களுக்கு ஊக்கம் கொடுத்துவருகிறார்.

இவர் கடந்த காலங்களில் இரானியர்களை பிளவுபடுத்தும் ஒரு சக்தியாகத்தான் இருந்தார். ஆனால் தற்போதைய போராட்டத்தில் இவர் இரானியர்களை ஒன்று திரட்டி அரசுக்கு எதிராகப் போராடத் தூண்டும் ஒரு கிரியாவூக்கியாகப் பங்கு வகிக்கிறார் என்று சில இரானிய விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பஹ்லவியின் சர்வாதிகார முடியாட்சியைத் தூக்கி எறிந்துவிட்டுத்தான் அயோதுல்லா கொமொனி தலைமை வகித்து நடத்திய இஸ்லாமியப் புரட்சி 1979ல் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. இப்போது மீண்டும் இரானியர்கள் மதகுருமார்களின் ஆட்சியை அகற்றிவிட்டு பழைய மன்னராட்சிக்குத் திரும்புவார்களா என்பது தெரியவில்லை.

பஹ்லவியிடம் இது குறித்து கேட்டபோது, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அந்த வாக்கெடுப்பு முடிவின் படி இரானின் எதிர்கால அரசு அமையும் என்று பதிலளித்திருக்கிறார்.

இரான் போராட்டம்
இரான் போராட்டம்

47 வருடங்களாக அதிகாரத்தில் இருந்து வரும் இஸ்லாமிய அரசு, இந்த மாதிரி பல போராட்டங்களை கடந்த சுமார் 16 ஆண்டுகளில் சந்தித்திருக்கிறது. கடந்த 2022ல் பெண்கள் முகத்திரை விஷயத்தில், முகத்திரை சரியாக அணியாத ஒரு இளம் பெண், இரானிய மதப் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் கைதியாக இருந்த நிலையில் கொல்லப்பட்டது இரானில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இது போன்ற பல போராட்டங்களை இரானிய அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்கிறது.

இந்த முறையும் இதுவரை இந்தப் போராட்டத்தை படை பலத்தைப் பயன்படுத்தி அடக்கியிருக்கிறது இரான். ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயிச்சேதம் அதிகமாக விளைந்திருக்கிறது இம்முறை.

இந்தப் போராட்டத்தின் தீவிரத்தன்மை தொடருமா அல்லது இரானிய அரசு மீண்டும் போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்துத்தான் இரானிய அரசியலின் எதிர்காலம் மட்டுமல்லாது, இரான் அமைந்திருக்கும் மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியல் நிலவரமும் தங்கியிருக்கிறது

I-PAC: ``மம்தா தலையீடா? அமலாக்கத்துறை அவசரமா?" - உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்!

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் ‘ஐ-பேக்’ I-PAC நிறுவனத்தின் இயக்குநர் பிரதிக் ஜெயின். இவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவன... மேலும் பார்க்க

தாக்கரே சகோதரர்களா... பாஜக, ஷிண்டே கூட்டணியா?- மும்பை மாநகராட்சி தேர்தலில் மக்கள் உற்சாக வாக்களிப்பு

மும்பை மாநகராட்சிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைய... மேலும் பார்க்க

கோலாகலமாகக் கொண்டாடப்படும் பொங்கல்: `மோடி முதல் விஜய் வரை' - தலைவர்களின் வாழ்த்து தொகுப்பு!

தைப் பொங்கல் விழா தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள் உடுத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு கோலாகலமாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையைய... மேலும் பார்க்க