LIK: " இந்தப் படத்திற்கு அந்த பயம் இருந்தது; ஏன்னா..." - பிரதீப் ரங்கநாதன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இன்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்தப் படத்தின் ஒன்லைன் எனக்கு 2023 பிப்ரவரி மாதம் சொன்னார்கள். அதிலிருந்து இப்போது ஒரு மூன்று, மூன்றரை வருஷம் ஆகிவிட்டது. அப்போதே இந்தப் படம் பண்ணப்போகிறோம் என்று ஆடியன்ஸ்க்குத் தெரிந்துவிட்டது. அதற்குப்பிறகு அவ்வளவு தாமதம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து முறை ரிலீஸ் தேதியை மாற்றியிருப்போம். பாடல் கூட இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது.
பொதுவாக ஒரு படம் இவ்வளவு தள்ளிப் போகும்போது அந்தப் படத்தோட ஹைப் குறைந்துவிடும், நம்பிக்கை குறைந்துவிடும். இது அந்த டீமையும் பாதிக்கும். எனக்கும் அதே பயம் இருந்தது. படம் இவ்வளவு தாமதம் ஆகிறதே, படத்திற்கு எப்படி ஓப்பனிங் கிடைக்கும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
ஆனால், படத்திற்கு ஓப்பனிங் கிடைத்த விதம் எல்லாருக்குமே ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. மக்கள் கொடுத்த அந்த அன்பை நான் எதிர்பார்க்கவில்லை. இத்தனை தடங்கல்களையும் தாண்டி கிடைத்த இந்த ஓப்பனிங்கிற்கு மக்களுக்கும், உங்களது அன்புக்கும் மிகப்பெரிய நன்றிகள்.
என்னுடைய இயக்குநர், தயாரிப்பாளர்கள் எல்லாருக்கும் என்னுடைய நன்றிகள். முக்கியமாக மூன்று தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நான் இங்கே நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சார், எடிட்டர் பிரதீப் இ. ராகவ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் சார்.

இவர்கள் மூன்று பேர் இல்லாமல் இந்தப் படத்தோட ப்ராசஸ் ரொம்பக் கடினமாக இருந்திருக்கும். இவர்கள் இல்லாமல் இந்தப் படத்தை என்னால் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியவில்லை. அவர்கள் கொடுத்த அந்த விஷுவல்ஸ், இசை, எடிட்டிங் எல்லாமே இயக்குநரோடு சேர்ந்து பணியாற்றிய விதம் அவ்வளவு சிறப்பாக இருந்தது.
படம் பார்த்துவிட்டு இவர்கள் மூன்று பேருக்கும் தனிப்பட்ட முறையில் போன் செய்து என் நன்றியைச் சொன்னேன். ஏனென்றால் அவர்களது உழைப்பு இந்தப் படத்திற்கு ரொம்பப் பெரியது. பொதுவாகத் தொழில்நுட்பக் கலைஞர்கள் பின்னால் இருப்பதனால் அவர்கள் பெயர் வெளியே வராமலே போய்விடும்.
ஆனால் இந்தப் படம் இவ்வளவு 'டெக்னிக்கலாக' வலுவாக இருக்கிறது என்றால் அதற்கு இவர்கள்தான் காரணம். கடைசியாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், உங்களது ஆதரவு ஆரம்பத்திலிருந்து இப்போது வரை இருக்கிறது. அதற்கு மிக்க நன்றி" என்றார்.















