குமரி: விபத்துகளால் பலியாகும் உயிர்கள்; நான்குவழிச் சாலை பணி முடியும் வரை கனிமவள...
LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?
2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் குறிக்கோள். அதனால், 2040-லும் அலைப்பேசி இல்லாமல் வாழ்கிறார் வைப் வாசே.

இப்படி சமூக வலைதள டிரெண்டிங் வாசமே முகர்ந்திடாதவருக்கு சமூக வலைத்தள பக்கத்தில் பாலோவர்ஸ் குறிக்கோளுடன் இருக்கும் தீமாவுடன் (கீர்த்தி ஷெட்டி) காதல் ஆக்டிவேட் ஆகிறது. ஆனால், இவர்களுடைய காதலைச் சூரியனின் (எஸ்.ஜே.சூர்யா) எல்.ஐ.கே செயலி சுக்கு நூறாக்குகிறது. இதன் பிறகு 'எல்.ஐ.கே' செயலியை வைப் வாசே என்ன செய்தார், அதன் நிறுவனரான சூர்யனைப் பழிவாங்கினாரா என்பதுதான் இந்த நவீன காதல் படத்தின் கதை.
காதல், காமெடி, ஆக்ஷன் எனத் தனக்குப் பழக்கப்பட்ட களத்தில், தன்னுடைய டிரேட்மார்க் டச் கொடுத்து மீண்டுமொரு சதம் அடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரின் வசன உச்சரிப்பும் உடல்மொழியும் 'ஹா ஹா' காட்சிகளை இன்னும் சத்தமாக்கியிருக்கிறது. க்யூட்னெஸ் நிறைத்து நல்லதொரு நடிப்பையும் சேர்த்துக் கொடுத்திருக்கும் கீர்த்தி ஷெட்டி ஃபாலோவர்ஸ்களை கவர்கிறார். பாசமும், லேசான கண்டிப்பும் கலந்த தந்தையாக, பசுமை உலகத்தின் நிம்மதி குலைந்துவிடாமல் காப்பவராக நடிப்பில் கைதட்டல் வாங்குகிறார் சீமான்.

பர்சனல் வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றம், அதனால் காதலுக்காகக் கண்டுபிடிக்கும் செயலி, நியாயமற்ற முறையில் அதனைக் காப்பாற்ற நினைக்கும் முடிவு என வில்லத்தனமான மைதானத்தில் ரசிக்க வைக்கும்படி ஆடி அசத்தியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. யோகி பாபுவின் 'கெட்டப்' காமெடிகள் ஆங்காங்கே கலகலத்திருக்கின்றன. இவர்களைத் தாண்டி கெளரி கிஷன், ஷா ரா, ஆனந்த்ராஜ், மாளவிகா ஆகியோர் குறைவில்லாத நடிப்பை ஷேர் செய்திருக்கிறார்கள். மேலும், எக்கச்சக்க சோசியல் மீடியா முகங்களும் படத்திற்கு ஆங்காங்கே சார்ஜ் ஏற்றியிருக்கிறார்கள். அனிருத் பின்னணி குரல் கொடுத்திருக்கும் ரோபோவும் நம்மைக் கவர்கிறது.
தொழில்நுட்பத்தில் முன்னேறியிருக்கும் எதிர்கால உலகை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ஒளியமைப்பில் வர்ணஜாலம் சேர்த்திருக்கிறார். கதையின் மையத்தைத் தொடாமல் சோர்வுடன் சுற்றிக் கொண்டே இருக்கும் படத்தின் முதல் பாதிக்கு '9G' கனெக்ஷன் கொடுக்கத் தவறியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ். ஆனால் இடைவேளைக்குப் பிறகு அந்தக் குறையை நிவர்த்தி செய்து, திரையின் ஒவ்வொரு இன்ச்சையும் கதை சொல்லப் பயன்படுத்தியிருக்கிறார்.

எல்.ஐ.கே செயலி, டிஜிட்டல் குடை, ரோபோக்கள், நவீன வளர்ச்சிக் கண்ட சென்னையின் முக்கியக் கட்டிடங்கள் என 2040-ம் ஆண்டை கிராபிக்ஸ் உதவிக் கொண்டு பிரமாண்டமாகக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள். அதில் சிறப்பானதொரு அவுட்புட்டையே தந்திருக்கிறார்கள். ஆனால், சில இடங்களில் இந்த 2040-ம் ஆண்டு உலகம், 2010-ன் கேம் வடிவம் போல் காட்சியளிப்பது சற்றே மைனஸ்! ஏ.ஐ பயன்படுத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் கச்சிதத்தைக் கொண்டு வராதது ஏமாற்றம்.
`அடாவடி', `தீமா', `பட்டுமா', `வைப் வாசே' எனப் பாடல்களில் அனிருத் கை பட்டிருக்கும் இடமெல்லாம் ஹிட்தான்! `எனக்கென யாரும் இல்லையே' பாடலுக்கும் இப்படத்தில் உருவம் கிடைத்து, திரையரங்கை கான்சர்ட் திருவிழாவாக்கி இருக்கிறது படக்குழு. அனிருத்தின் பின்னணி இசையும் படத்தை உயிர்ப்போடு நகர்த்தியிருக்கிறது. சோசியல் மீடியா டிரெண்டிங் ஒலிகளைப் பயன்படுத்திய விதத்திற்கும் லைக்ஸ்!
மொபைல் பயன்பாட்டை விரும்பாத ஓர் ஆணுக்கும், சோசியல் மீடியா பிரபலமாக இருக்கும் ஒரு பெண்ணிற்கும் இடையே மலரும் காதல், அதற்கு இடையில் குறுக்கிடும் ஒரு மொபைல் செயலி என இந்த "ப்யூச்சரிஸ்டிக்" உலகத்தைக் கட்டமைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். 2040-ம் ஆண்டைப் பற்றிய விவரணை, அப்போது பயன்படுத்துவதாகச் சொல்லப்படும் தொழில்நுட்பங்கள், பசுமை உலகம், சமகால நிகழ்வுகள் அப்போது என்ன வடிவிலிருக்கிறது என்பன போன்ற விஷயங்களோடு சுவாரஸ்யமான திரைக்கதையை இன்ஸ்டால் செய்திருக்கிறார்.

தீவிரமாக மொபைலுக்கு அடிமைப்பட்டிருக்கும் பழக்கம், நம் நெருங்கிய உறவுகளையும் எப்படி மறக்கச் செய்கிறது, அது உண்டாக்கும் சிக்கல்கள், அவை ஏற்படுத்து உளவியல் ரீதியான பாதிப்புகள் என்பதையும் அழுத்தமாகக் காட்டுகிறது இந்த 'எல்.ஐ.கே'. ஆனால், அவற்றோடு சில பூமரிச சிந்தனைகளையும் சேர்த்து ஊட்டியிருப்பது சின்ன நெருடல்! ஆப்-பின் பிரச்னையை மையப்படுத்தாமல் தொழில்நுட்பமே எதிரி என்ற சிந்தனையை விதைக்கும் தொடக்கக் காட்சிகளும், சீமான் கதாபாத்திரத்தின் மகள் பிளாஷ்பேக்கும் படு செயற்கை!
இதனைத் தொடர்ந்து வரும் முதல் பாதி, 'ஹாங்' ஆகி நம் பொறுமையையும் சோதிக்கிறது. எமோஷனல் காட்சிகளை ஒட்டியே காமெடிகளையும் சேர்த்திருப்பது, அந்த எமோஷன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை 'ப்ளாக்'கில் போட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு வரும் இடைவேளை காட்சி சர்ப்ரைஸை உண்டாக்கி, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. இரண்டாம் பாதியில், 'எல்.ஐ.கே' செயலிக்கு முடிவு கட்ட வைப் வாசே தீட்டும் திட்டங்கள் சாதாரணமானதாக இருந்தாலும், அதனை ரெபரென்ஸ்கள், காமெடிகள் என 'பி.ஆர்' ஜோனுக்குள் கதையைத் திருப்பி ரசிக்கும்படியாக மாற்றியிருக்கிறார்கள்.

முதல் பாதியில் வந்த சில விஷயங்களின் தொடர்ச்சியாக இரண்டாம் பாதியில் காட்சிகளை இணைத்திருப்பது, கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும் இடங்கள் போன்றவை ப்ளஸ்! தொழில்நுட்பம் தனக்குள் உள்ளிடப்படும் தரவுகளை வைத்தே முடிவுகளை எடுக்கிறது, அதற்கு நிஜமான உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்ற மெசேஜை சொன்ன விதமும் அப்ளாஸ்!
சில குறைகள் இருந்தாலும், ப்யூச்சரிஸ்டிக் உலகத்தைப் படைத்து அதில் ரசிக்க வைக்கும் விஷயங்களை வைத்துக் கதை சொன்ன இந்த `எல்.ஐ.கே'வை லைக், ஷேர், கமென்ட் மற்றும் சப்ஸ்கிரைப் செய்யலாம்.


















