Los Angeles fires: `சாம்பலாகும் கனவுகளின் நகரம்; தடுமாறும் அமெரிக்கா’ - பேரழிவை காட்டும் காட்டுத்தீ
அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான காலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், மிகப் பெரிய பேரழிவைச் சந்தித்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மேற்கு பக்கம் உள்ள பாலிசேட்ஸ் மற்றும் கிழக்கு பக்கம் உள்ள ஈடன் பகுதிகளிலிருந்து பரவிய காட்டுத் தீ, நகரை சாம்பலாக்கி வருகிறது.
ஜனவரி 10-ம் தேதி வெளியான தகவல்களின் அடிப்படையில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 9000க்கும் மேலான வீடுகள், கடைகள் மற்றும் பிற கட்டடங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இவற்றில் 5,300க்கும் மேலான கட்டடங்கள் முழுவதுமாக சிதைந்துவிட்டன.
அதிகாரிகள் வான்வழி அகச்சிகப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ந்ததில், இது இதுவரையில் நடக்காத மிகப் பெரிய பேரழிவு இது எனக் கூறியுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் தீ காரணமாக ஏற்பட்ட சேதங்களில் இதுதான் அதிகப்படி என்றும் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை வரையில், 13,690 ஏக்கர் வரை பரவியிருந்த, தீ துளியும் கட்டுப்பாடில்லாமல் பரவி வருகிறது. மறுபக்கம் பாலிசேட்ஸ் தீ 19,978 ஏக்கர்கள் பரவியிருக்கிறது. இவைத்தவிர கென்னெத் மற்றும் சன்செட் பகுதிகளிலிருந்தும் காட்டுத்தீ பரவி வருகிறது.
கலிஃபோர்னியாதான் மொத்த அமெரிக்காவின் ஜி.டி.பியில் அதிகம் பங்கு வகிக்கும் மாகாணம். இந்த காட்டுத்தீயால் சுமார் 150 பில்லியன் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருப்பதாக AccuWeather தளம் தெரிவிக்கிறது. இந்திய மதிப்பில், 12.45 லட்சம் கோடி!
பாதிக்கப்பட்ட இடங்களில் கொள்ளையடித்தல் உள்ளிட்ட சட்ட விரோத சம்பவங்களையும் பிற அசம்பாவிதங்களையும் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தீ பரவுவதும் குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிற இடங்களிலும் கட்டுப்படுத்துவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதிலும் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை நிரம்பி, இருள் சூழ்ந்திருக்கிறது. ஹாலிவுட்டில் வாழ்ந்த பல பிரபலங்களின் வீடுகள் சிதைந்திருக்கின்றன.
காட்டுத்தீ பரவியது எதனால்?
அமெரிக்காவில் வழக்கமாக ஏற்படும் காட்டு தீக்கு மின்னல் தாக்குதலே காரணமாக இருக்கும். ஆனால் லாஸ் ஏஞ்சல்ஸ் கதையில் அப்படி இல்லை. பாலிசேட்ஸ் மற்றும் ஈடன் பகுதிகளில் காட்டுத்தீ உருவான நாளில் மின்னல் தாக்குதல் எதுவும் பதிவாகவில்லை என்கின்றனர்.
வேண்டுமென்றே தீ வைப்பது, மின்சார கம்பிகள் மற்றும் பிற பயன்பாட்டு கம்பிகள் மூலம் தீ பரவுவது ஆகிய காரணிகளும் பல தீ பரவல் சம்பவங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. குப்பைகளை எரிப்பதும், பட்டாசு வெடிப்பதும் கூட காட்டுத்தீ பரவ காரணமாக அமையலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுவரை தீ பரவிய தொடக்கம் குறித்து எதுவும் கூறப்படவில்லை.
லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட கலிஃபோர்னியா மாகாணத்தின் பல பகுதிகள் கடந்த 8 மாதகாலமாக மழை இல்லாமல் வறண்டிருக்கின்றன. லாஸ் ஏஞ்சல்ஸில் 0.4 செ.மீ மட்டுமே மழை பொழிந்திருக்கிறது. இதனால் காற்றின் வேகத்துக்கு ஏற்ப வறண்ட நிலப்பரப்பு வழியாக காட்டுத்தீ எளிமையாக பரவியுள்ளது.
முதன்முதலில் நெருப்பு எழ காரணம் என்ன என்பதைக் கண்டறிவதை விட மக்களை பாதுக்காப்பான பகுதிக்கு வெளியேற்றுவதிலும், மேற்கொண்டு சேதம் ஏற்படுவதை தடுப்பதிலும்தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மக்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றும் நடவடிக்கைகளும் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து மக்கள் வெளியேறியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் சாலையில் கார்களை அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் பல நூறுகார்கள் சாலையில் எரிந்து சாம்பலாகியிருக்கிறது.
அமெரிக்காவால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லையா?
காட்டுத்தீ பரவ காலநிலை மாற்றம் சரியான சூழலை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. வறட்சியின் காரணமாக காய்ந்த விளைநிலங்கள் காட்டுத்தீக்கு எரிபொருளாக செயல்பட்டுள்ளன. வழக்கத்துக்கு மாறான அதிவேகமான காற்றும் தீ பரவ உதவியுள்ளது.
கலிஃபோர்னியா அமெரிக்காவிலேயே அதிக நிதி ஒதுக்கப்படும் தீயணைப்புத் துறையைக் கொண்டிருக்கிறது. உலகின் சிறந்த தீயணைப்பு வீரர்கள் இருந்தும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் மலைப்பகுதிகளின் கரடுமுரடான பகுதிகளில் நெருப்புடன் சண்டையிட சிரமப்படுகின்றனர். பல திசைகளில் இருந்து காட்டுத்தீ பரவுவதால் தீயணைப்புத்துறையினர் சரியான திட்டமிடல்களை மேற்கொள்ள முடியவில்லை. வீடுகளில் தீயணைக்கப் பயன்படுத்தப்படும் வாகனங்களால் காட்டுத்தீக்கு ஈடுகொடுக்க முடியவில்லை, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய நகரம். இதன் சுற்றுவட்டாரத்தில் காட்டுத்தீயால் எளிமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் கூட மக்கள் குடியிருப்புகளை அமைத்துள்ளனர். தேவையான தண்ணீர் இல்லாமல் தீயை எதிர்த்துப் போரிடுவது இந்த பகுதிகளில் கடும் சவாலாக மாறியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs