ஜனநாயகன்: சென்சார் சர்டிபிகேட் சிக்கல்; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம் - விரிவா...
Madhav Gadgil: மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும்வரை இவர் பெயர் ஒலிக்கும் - மறைந்தார் சூழலியல் பேரறிஞர்
இந்திய துணைக்கண்டத்தின் பெருங்கொடை, பேரதியசம், இயற்கையின் புதையல் என உயிரியலாளர்களாலும் இயற்கையியலாளர்களாலும் போற்றப்படுகிறது மேற்கு தொடர்ச்சி மலை. மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகளால் சிதைக்கப்பட்டு வரும் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க பல ஆய்வாளர்களை காலம் கொடையாக வழங்கி வருகிறது. அப்படி வழங்கப்பட்ட முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவர் தான் இந்திய சூழலியலின் தலைச் சிறந்த பேரறிஞர் பேராசிரியர் மாதவ் காட்கில்.( Madhav Gadgil)

1942- ம் ஆண்டு புனேவில் பிறந்த இவர், புனே பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டம், மும்பை பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் ஆய்வாளர் பட்டம் பெற்றார்.
1973 முதல் 2004 ஆம் ஆண்டு வரை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றியதுடன் சூழலியலை அறிவியல்பூர்வமாக அணுகி அதற்கான ஆய்வு மையத்தையும் நிறுவினார். மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக அரசு அமைத்த நிபுணர்கள் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து அசாத்தியமான அறிக்கையை உருவாக்கினார்.
மாதவ் காட்கில் அறிக்கை எனப்படும் அந்த அறிக்கையை அரசு ஏற்க மறுத்ததன் மூலம் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தாலும் சூழலில் பாதுகாப்பு உலகில் அந்த அறிக்கை பொக்கிஷமாக போற்றப்படுகிறது.
அந்த அறிக்கை மூலம் உலக அளவில் சூழலியல் பாதுகாப்பு முன்னோடியாக உயர்ந்தார். இந்திய அரசின் பத்மஶ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வழங்கி சிறப்பிக்கப்பட்டதுடன் சூழலியல் உலகின் மிக உயரிய விருதான 'சேம்பியன் ஆஃப் தி எர்த் ' எனப்படும் புவிக்கோள வாகையர் என்கிற உயரிய விருதை 2024 - ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைப்பு மூலம் இவருக்கு வழங்கப்பட்டது

இவர் வயது மூப்பு காரணமாக புனேவில் நேற்று ( 07-01-2026) இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த சூழலியல் உலகும் நன்றி கலந்த பிரியாவிடையை வழங்கிக் கொண்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலை இருக்கும் வரை இவரின் பெயர் ஒலிக்கும் வகையில் அபாரமான அறிவியல் புரிதலை எளிய மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார் சூழலியல் பேரறிஞர் மாதவ் காட்கில்.!


















