TVK: விஜய்யின் தவெக காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக் கூட்டம் | Photo Album
Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்
நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய கடத்தல் சம்பவம் இதுதான் எனவும் கூறப்படுகிறது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நைஜிரிய கிறிஸ்துவ சங்கம் முதலில் 227 நபர்கள் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியிட்டிருந்தது.

பின்பு, எண்ணிக்கை சரிபார்க்கையில் மொத்தமாக 303 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் கடத்தப்பட்டிருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள்.
கடத்தப்பட்ட மாணவர்களுக்கு எட்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவில் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை இப்படியான மூன்று கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு நிலைமை குறித்தான அச்சமும் எழுந்திருக்கிறது.
நைஜிரியாவின் நைஜர் மாநிலத்திலுள்ள செயின்ட் ஆகஸ்டின் பள்ளியின் மீது கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, அருகிலிருக்கும் மற்றொரு பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தி 25 மாணவிகளை கடத்திச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து நைஜர் மாநில ஆளுநர் மொஹம்மது உமர் பாகோ, “போலீசார் எத்தனை பேர் மொத்தமாக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என சரிபார்த்து வருகிறார்கள். நைஜர் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டிருக்கிறோம்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சிகள் தற்போது அரசின் முதன்மை நடவடிக்கையாக உள்ளது. அருகிலுள்ள பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதேபோன்ற உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.
இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு, தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருந்த தனது வெளிநாட்டுப் பயணங்களை ரத்து செய்திருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள் பணத்திற்காகத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் இந்தக் கடத்தல் கும்பல் தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இப்போது நைஜர் மாநிலத்தில் நடந்திருக்கும் இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய நைஜர் மாநில காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நைஜிரியாவில் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் கொலைச் செய்யப்பட்டு வருவது குறித்து சமீபத்தில் பேசிய டிரம்ப், "நைஜீரியா அரசு கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதை தொடர்ந்து அனுமதித்தால், அமெரிக்கா தன்னுடைய அனைத்து உதவி, ஆதரவுகளையும் உடனடியாக நிறுத்தும். மேலும், தேவையானால், அமெரிக்கா அந்த நாட்டுக்குள் நுழைந்து, இந்த கொடூர தாக்குதல்களை நடத்தும் இஸ்லாமிய தீவிரவாதிகளை முற்றிலும் ஒழித்துவிடவும் செய்யும்." என எச்சரித்து இருந்தார்.
















