பயணப்படிக்கு விண்ணப்பம் கொடுத்த பெண் இன்ஸ்பெக்டர்; ஆபாச படங்கள் அனுப்பிய எஸ்.பி ...
"பாலாறு 4,730 கோடி மணல் கொள்ளை டு அவளூர் ஏரி" - விஜய் சொல்லும் காஞ்சிபுரம் பகுதி பிரச்னைகள்!
இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் இந்த மக்கள் சந்திப்பு என்பதால் பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

விஜய் சொல்லும் காஞ்சிபுர பகுதி பிரச்னைகள்
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் காஞ்சிபுரம் பகுதியில் இருக்கும் பிரச்னைகள் குறித்துப் பேசியிருக்கும் விஜய்,
"நமக்கு எப்பவும் மக்கள் பிரச்னைதான் முக்கியம். காஞ்சிபுரத்தில் மக்கள் பிரச்னை நிறைய இருக்கு.
பாலாறு மணல் கொள்ளை
பாலாறு ஆற்றை கொள்ளையடித்து, சுரண்டி அழிச்சுட்டாங்க. இதை ஆதாரத்தோடுதான் சொல்றேன். சட்டம் அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டி 22லட்சத்து 70 ஆயிரம் யூனிட் ஆற்று மணல் கொள்ளை அடிச்சிருக்காங்க. இதுல 4,730கோடி கொள்ளை அடிச்சிருக்காங்க. இதற்கான ஆதாரம் அமலாக்கத்துறையிடமே இருக்கு.
பட்டு - கைத்தறி நெசவாளர்கள்
காஞ்சிபுரம் பட்டின் பெருமை உலகத்திற்கே தெரியும். அதை செய்யுற நெசவாளர்கள் வறுமை, கந்துவட்டி கொடுமையால பாதிக்கப்பட்டிருக்காங்க. பட்டு கைத்தறி, பருத்தி கைத்தறி தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. சாயத் தொழில், தறிப்பட்டறை தொழில்னு இங்க நிறைய இருக்கு.
அவங்களோட ஒருநாள் ஊதியம் 500 ரூபாய்தான். கூலியை உயர்த்தித் தர கோரிக்கை வைத்து எவ்வளவோ போராடியும் ஒன்னும் நடக்கல. இதுபோக அவங்க மழையாலும் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதுவரை எதற்குமே அவர்களை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

காஞ்சிபுரம் பேருந்து நிலையம்
60 ஆண்டுக்கு முன்னாடி அண்ணா ஆட்சியில் கட்டிய காஞ்சிபுரம் பேருந்து நிலையம். அது ரொம்ப பாழடைந்து இருக்கு. காஞ்சிபுரத்திற்கு ஒரு நல்ல பஸ் ஸ்டாண்ட்கூட இதுவரையிலும் கட்டித்தரல.
வாலாஜாபாத் அவளூர் ஏரி
வாலாஜாபாத் அவளூர் ஏரி பாலாற்றை விடவும் உயரமாக இருக்கு. அதனால ஆற்றுத் தண்ணி ஏரிக்கு போக முடியல. அத சரி பண்ணி, அங்க ஒரு தடுப்பு அணை கட்டினால் அந்த ஏரி நிறைய தண்ணீர் நிற்கும். அதனால அந்தப் பகுதியை சுற்றியிருக்கும் பல கிராமங்கள், விவசாயம் செழிப்பாக இருக்கும்.
பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விவசாய நிலத்தில் விமான நிலையம் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தவெக ஆரம்பத்திலிருந்து மக்கள் பக்கம் நிற்கிறது. அதை எதிர்த்து என்றும் தவெக மக்களுடன் நிற்போம்" என்றார்.


















