செய்திகள் :

புதிய தொழிலாளர் சட்டம்: ``ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு" - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

post image

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ள 4 தொழிலாளர் சட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம் CPI(M) மற்றும் காங்கிரஸ் கட்சி ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

குறிப்பாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு 2020, ஊதியம் குறித்த சட்டத் தொகுப்பு 2019, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020 ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``இன்று, நமது அரசு நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை கணிசமாக எளிதாக்குகிறது. மேலும், வணிகம் செய்வதை எளிதாக்குகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சிபிஎம் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பெ. சண்முகம்,``இந்திய தொழிலாளி வர்க்கம் 150 ஆண்டு காலம் போராடி பெற்ற ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப்பாதுகாப்புகளை உள்ளடக்கிய 29 சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவேற்றியது.

இந்த சட்ட தொகுப்புகள் சட்டமாக்கப்பட்டாலும் இந்திய தொழிலாளி வர்க்கம் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தியதின் விளைவாக அமலாக்கத்தை ஒத்திவைத்தது. பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான குரூரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

பெ. சண்முகம்
பெ. சண்முகம்

தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் 21.11.2025 முதல் நடைமுறைப்படுத்த நிர்வாக ரீதியிலான அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது.

மோடி அரசின் இத்தகைய செயலானது இந்திய பெரும் முதலாளிகளையும், கார்ப்பரேட்டுகளின் லாப வேட்கைக்கு சிவப்பு கம்பளம் விரித்துள்ளதாகும். இனி தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தட்டி கேட்க முடியாத வகையில் சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை மறுக்கப்பட்டு தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக்கப்படுவார்கள்.

இதன் விளைவாக, தொழிலாளர்களின்உண்மை ஊதியம் மென்மேலும் குறைந்தும், 70 சதவிகிதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்.

நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவேகமாக குறைந்து, காண்ட்ராக்ட், தினக்கூலி, குறிப்பிட்ட கால வேலை முறையில் அத்துக்கூலிகளின் பெருமளவிலான வேலைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பற்ற தொழிலாளார்கள் கூட்டம் பெருகும் ஆபத்தை உண்டாக்கும்.

மோடி
மோடி!

இது இந்திய சமூக, அரசியல், பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். தொழில் துறையில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தொழிலாளர்களின் போராட்டங்களும் தீவிரமடைந்து தொழிலமைதியற்ற நிலைமையை ஏற்படுத்தும்.

மோடி அரசின் தொழிலாளர்கள் மீதான தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்கு சேவகம் செய்ய தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கும் வகையில் அமலாக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென சிபிஐ (எம்) ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது" இவ்வாறு பெ. சண்முகம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, ``இன்று நாடு முழுவதும் கட்டாயமாக அமலாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள், தொழிலாளர்களின் நலனையும் மனிதநேய உரிமைகளையும் நேரடியாக புறக்கணிக்கும் முடிவாகும்.

உழைக்கும் மக்களை பலவீனப்படுத்தும் நோக்கத்திலேயே ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இந்தச் சட்டங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

8 மணி நேர வேலை நேரம் என்பது ஒரு சாதாரண விதிமுறை அல்ல; தலைமுறைகள் கடந்து நடந்த ரத்தத்தும் உயிர்தியாகங்களும் கொண்ட போராட்டங்களின் பயனாக உருவான வரலாற்றுச் சாதனை.

தொழிலாளர் | May Day Clicks
தொழிலாளர் | May Day Clicks

தொழிலாளர்களின் உடல்நலம், குடும்ப நேரம், சமூக வாழ்வு இவை அனைத்தையும் காக்கும் மனிதநேய உரிமையாக இதை உறுதி செய்தவர் புரட்சியாளர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.

‘தொழிலாளர் ஒரு மனிதன் இயந்திரம் அல்ல’ என்ற அவரின் உயர்ந்த கொள்கையின் அடிப்படையில் நாடு முழுவதும் 8 மணி நேர வேலை நேரம் என்பது சட்டமாக கொண்டுவரப்பட்டது. அந்த உரிமையை 12 மணிநேரமாக நீட்டிக்க முயல்வது தொழிலாளரின் ரத்தத்தை உறிஞ்சும் கொடூரமான முடிவு.

மேலும், தொழிலாளர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட 29 முக்கியமான சட்டங்களை ஒரே அடியில் களைந்து 4 சட்டங்களாகச் சுருக்கும் நடவடிக்கை, தொழிலாளர் வர்க்கத்தின் குரலையும் பாதுகாப்பையும் பறிக்கும் செயலாகும். இந்த மாற்றங்கள் தொழிலாளர்களுக்காக அல்ல. நாட்டின் பெருஞ்செல்வத்தை தன் வசம் வைத்துள்ள பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர்களான அம்பானிக்கும், அதானிக்கும் திட்டமிட்டு கொண்டு வரப்படுகின்றன.

உழைப்பால் தேசத்தை வளர்க்கும் மக்களின் சுவாசத்தையும், துன்பத்தையும் இந்த ஒன்றிய அரசு தொழிலாளர் நலனில் மிகவும் அலட்சியமாக உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை
செல்வப் பெருந்தகை

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் இந்திய தொழிலாளர் வரலாற்றில் ஒரு கருப்புதினமாகும், தொழிலாளர்களின் நலனையும், உயிர் பாதுகாப்பையும் பறிக்கும் இந்த சட்டங்களை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வையை நாட்டின் செல்வமாக மதிக்கும் அரசியல் பண்பாட்டை உருவாக்குவதே எங்கள் உறுதியான நிலைபாடு.

இந்த அநீதி நீங்கும் வரை, எங்கள் குரலும், எங்கள் போராட்டமும் தொடர்ந்தும் ஒலிக்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கப்படும் வரை நாம் ஒருபோதும் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கமாட்டோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சட்டத்தை எதிர்த்து நாடுதழுவிய அளவில் 26-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

அமைச்சர் ஐ.பெரியசாமி குடும்பத்தினர் வீட்டில் 7 மணி நேரம் நீண்ட சோதனை - ஆவணங்களுடன் சென்ற அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி தன்னுடைய கணவர் துவாரநாதனுடன் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். துவாரநாதன் வத்தலகுண்டு அருகேயுள்ள ஓட்டுப்பட்டியில் ... மேலும் பார்க்க

"கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு; திமுக செய்த தவறு..." - எடப்பாடி பழனிசாமி

மதுரை மற்றும் கோவை மாவட்டங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்திருக்கிறது. இதற்கு கோவை மற்றும் மதுரையில் போதுமான மக்கள் தொகை இல்லாதது காரணமாக கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 20 லட்சம்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் வீட்டில் ரெய்டு!

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி, திண்டுக்கல் வள்ளலார் நகரில் வசித்து வருகிறார். இன்று மதியம் அவரது வீட்டிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ( Directorate General... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: `எப்டி ஓட்டுனாலும் ரோட்ல விழுறது சாதாரணமாகிடுச்சி’ - பழையபாளையம் சாலையின் அவலம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையபாளையம் ஊராட்சியில், கொடாக்காரமூலை முதல் பழையபாளையம் வரை செல்லும் சாலையானது சுமார் 1.5கி.மீ வரை ஐந்து வருடங்களாக குண்டும் குழியுமாக காட்சியளிப்பதோடு மட்டுமல்லா... மேலும் பார்க்க

ஏழை முதியவர் ரூ.1.14 கோடி; பந்தல் தொழிலாளி ரூ.5 கோடி வரி பாக்கி - அதிர வைத்த GST நோட்டீஸ்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திருமாஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. பந்தல் அமைக்கும் தொழில் செய்து வரும் ராமமூர்த்தியின் பெயரில் ரூ.5 கோடி ஜி.எஸ்.டி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ்... மேலும் பார்க்க

"திமுக தொழில்த்துறை முதலீடுகளில் ஊழல் பொய்" - பாமக அன்புமணி அடுக்கும் குற்றச்சாட்டுகள்

திமுக தலைமையிலான தமிழக அரசு, தொழில்துறை முதலீடுகளில் தொடர்ந்து ஊழலும், பொய்யான அறிவிப்புகளை அறிவித்து வருவதாக பாட்டளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகி... மேலும் பார்க்க