திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங். குழு; "அரசல் புரசல் செய்திகளுக்கு ...
`அதிமுக ஆட்சியில்தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் வர மீனாட்சி விரும்புகிறார்' - சொல்கிறார் செல்லூர் ராஜூ
"மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "2026 தேர்தலில் மதுரை மக்களை ஏமாற்றி வாக்கை பெற வேண்டும் என்பதற்காக மெட்ரோ திட்டத்திற்காக திமுக போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எந்தவிதமான திட்டங்களையும் மதுரை மக்களுக்கு திமுக அரசு கொண்டு வரவில்லை.
மதுரை மக்களுக்கு நல்லதைச் செய்தது அதிமுகதான், எடப்பாடி பழனிசாமி எட்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பல பணிகளை மேற்கொண்டார். எந்நேரமும் மதுரை மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால், திமுக அரசு தற்போது வரை அதைக் கொண்டு வரவில்லை.
ஒரு ஆளும்கட்சி நடத்துகிற ஆர்ப்பாட்டத்தில் 2,500 பேர் இருக்கிறார்கள். மூன்று மாவட்ட அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆர்ப்பாட்டதில் இவ்வள்வு பேர்தான் வந்திருக்கிறார்கள்.
திமுக அரசு, மெட்ரோ குறித்து பேசுகின்ற வாதம் தப்பானது, மெட்ரோ ரயிலை மத்திய அரசு தடுத்து விட்டது என்று பரப்புவது திமுகவின் நாடகம். மத்திய அரசு அனுப்பிய கடிதம் வழக்கமான நடைமுறைதான்.
தமிழக அரசு அனுப்பிய திட்ட அறிக்கையில் நிறைய குளறுபடி இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு மெட்ரோ விதிகளின் படி 17 லட்சம் மக்கள்தொகை இருக்க வேண்டும், ஆனால், 15 லட்சம் மக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இது சரியல்ல, மீண்டும் சரியான அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய அரசு சொல்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை வருடம் ஆகிறது. இத்தனை வருடங்களாக திட்ட அறிக்கை தயார் செய்யாமல் தற்போதுதான் அனுப்பி இருக்கிறார்கள்.

மதுரையின் தற்போதைய மக்கள்தொகை எவ்வளவு என்பதை குறிப்பிட்டு திமுக அரசு அறிக்கை அனுப்பியிருக்க வேண்டும். 20 லட்சம் மக்கள் மதுரையில் வாழ்கிறார்கள். ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை உள்ள மக்களை திமுக கணக்கெடுத்து மெட்ரோ ரயில் திட்ட ரிப்போர்ட் அனுப்பியிருக்க வேண்டும், ஆனால், இத்திட்டம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் திமுக செய்துள்ளது.
மதுரைக்கு ஒரு வளர்ச்சிப் பணி கிடைக்கிறது என்றால் அனைவருக்கும் அது மகிழ்ச்சிதான். ஆக்ராவில் 2016-இல் மெட்ரோ திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை அனுப்பிவிட்டார்கள், மெட்ரோ திட்டம் மதுரைக்கு கிடைக்க வேண்டும் என்று திமுக அரசு நினைத்தால் திட்ட அறிக்கையை முறையாக அனுப்பி இருக்க வேண்டும்.
மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் சேர்ந்து மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார்கள். ஐந்து மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்து, மேயர் நீக்கப்பட்டுள்ளார் அவரது கணவர் கைது செய்யப்பட்டார், இந்த நடவடிக்கை அனைத்திற்கும் முன்னதாக அதிமுக ஆர்ப்பாட்டம் செய்தோம்.
மதுரை மெட்ரோ ரயில் குறித்து ஆர்ப்பாட்ட நாடகம் ஆடுவது திமுக-வுக்கு கைவந்த கலை. மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது மக்களை திமுக அரசு ஏமாற்றுகிறது, அப்படியென்றால் கேரளாவிற்கு மெட்ரோ திட்டம் கிடைத்திருக்கிறது, கேரள முதல்வர் பினராயி விஜயன் என்ன என்.டி.ஏ கூட்டணியிலா இருக்கிறார்? மதுரை மக்களுக்கு மெட்ரோ கிடைக்க வேண்டும் என்று திமுக அரசு நினைத்திருந்தால் முறையாக செயல்பட்டிருக்க வேண்டும்.

எஸ்.ஐ.ஆர் வேண்டாம் என்று வழக்கு போட்டதிமுக அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் வழக்கு போட வேண்டியதுதானே? திமுக 2026 தேர்தலை நாடகமாடி ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறது. சதுரங்க வேட்டை பட பாணியில் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, மீண்டும் மக்களை திமுக ஏமாற்றக்கூடாது.
மதுரையை வைத்து திமுக நாடகமாடக்கூடாது. 2026 தேர்தலுக்காக திமுக அரசு மெட்ரோ குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறது, மெட்ரோ வருவதற்கு திமுக அரசுக்கு விருப்பமில்லை. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமிதான் மதுரை மெட்ரோ ரயிலை துவக்கி வைக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி சொக்கநாதர் விரும்புகிறார்கள், மதுரை மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்" என்றார்















