Big Boss Kannada: `சாதி பாகுபாடு' - கிச்சா சுதீப், போட்டியாளர்கள் மீது மகளிர் ஆண...
Doctor Vikatan: `தினமும் 3 லிட்டர் தண்ணீர்' - அனைவருக்குமான அறிவுரையா?
Doctor Vikatan: தினமும் 8 டம்ளர் அல்லது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது பொதுவான ஆலோசனையாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சிலர், திரவ உணவுகளின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது. 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது என்பது எல்லோருக்குமான பொதுவான அட்வைஸ் என்று எடுத்துக்கொள்ளலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

எந்த மருத்துவப் பரிந்துரையையும் அறிவுரையையும் எல்லோருக்குமான பொதுவான விஷயமாக எப்போதும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் சுத்தமாகும். உடலின் வெப்பநிலை சரியாக இருக்கும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது தலைச்சுற்றல், மயக்கம், களைப்பு, தலைவலி போன்றவை வரலாம். உடலில் நீர்வறட்சி ஏற்படும்போது சிலருக்கு கடுமையான தலைவலி வரும். தண்ணீர் குடித்ததும் தலைவலி குணமாவதை உணர்வார்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது நாக்கு வறண்டுபோகும். உதடுகள் வெடிக்கும். இதயத்துடிப்பு அதிகரிக்கும். சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும்.
எனவே தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்துப் பழகாமல் குறிப்பிட்ட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்துப் பழகுவது நல்லது.
நீங்கள் குறிப்பிட்டதுபோல வெறும் தண்ணீர் குடிப்பது சிலருக்கு குமட்டலை ஏற்படுத்தலாம். அவர்கள், தண்ணீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு கலந்து புதினா இலைகள் சேர்த்துக் குடிக்கலாம்.

நீர்வறட்சி ஏற்படாமலிருக்க வெறும் தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. கொழுப்பு நீக்கப்பட்ட தயிரில் தண்ணீர் சேர்த்து நீர் மோராக்கி, நாள் முழுவதும் சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.
சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்துவது செரிமானத்துக்கும் சிறந்தது. உடலையும் குளிர்ச்சியாக வைக்கும்.
சூப், ரசம், இளநீர் போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நீர் வறட்சியைத் தவிர்க்கும்.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும், இதயநோயாளிகளும் மருத்துவர் அனுமதிக்கும் அளவு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்.
மற்றபடி குழந்தைகள் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை வலியுறுத்த வேண்டும். அடிக்கடி சிறுநீர்த்தொற்றுக்கு உள்ளாகிறவர்களும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கப் பழக வேண்டும்.
எனவே, உங்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டே இதில் முடிவெடுக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

















