ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
Doctor Vikatan: ஃபேஸ் வாஷ், எப்படித் தேர்வு செய்ய வேண்டும்; யாருக்கு, எது பொருந்தும்?
Doctor Vikatan: முகத்துக்கு சோப் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால், ஃபேஸ்வாஷிலேயே ஏகப்பட்ட வெரைட்டி இருக்கின்றன. யாருக்கு, எது சரியாக இருக்கும், எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.
ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யும்போது அடிப்படையாக சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த வகையில், முதலில், வயது மற்றும் சருமத்தின் தன்மையின் அடிப்படையில் ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யப்பட வேண்டும்.
அதாவது டீன் ஏஜ் மற்றும் டீன் ஏஜுக்கு முந்தைய வயதில் இருப்பவர்களுக்கு சருமத்தில் பொதுவாக அதிக எண்ணெய்ப் பசை இருக்கும். அவர்களும், சாதாரண சருமம் கொண்டவர்களும்
காலையில் ஜெல் அடிப்படையிலான கிளென்சர் (Gel-based cleanser) பயன்படுத்தலாம். ஜெல் கிளென்சர் லேசாக நுரைத்து, சருமத்தை வறண்டு போகாமல் வைத்திருக்கும். ஜெல் வடிவ க்ளென்சர் பிடிக்காதவர்கள், மைல்டான க்ரீமி கிளென்சரையும் (Creamy cleanser) பயன்படுத்தலாம்.
பருக்கள் பாதிப்பு உள்ளவர்கள், நுரைக்கும் தன்மை கொண்ட ஃபேஸ் வாஷை (Foaming Face Wash) பயன்படுத்த வேண்டும். இதில், கிளைகாலிக் ஆசிட் (Glycolic Acid), அஸிலிக் ஆசிட் (Azelaic Acid), அல்லது சாலிசிலிக் ஆசிட் (Salicylic Acid) போன்ற ஏதேனும் ஆக்டிவ் பொருள் (Active) இருக்க வேண்டும்.

இந்த வகை கிளென்சர்கள், எண்ணெய் சுரப்பைக் கட்டுப்படுத்தவும், மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளில் கரும்புள்ளிகள் (Blackheads) சேராமல் தடுக்கவும் உதவும். அதுவே, முதிர்ந்த சருமம், வறண்ட சருமம் அல்லது சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள், கிரீம் வடிவிலான, நுரைக்காத, சோப் ஃப்ரீ கிளென்சர் பயன்படுத்துவது சிறந்தது.
ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக நுரைக்கும் தன்மை கொண்ட ஃபேஸ் வாஷைத் தவிர்க்கவும்.
சில ஃபேஸ் வாஷ்களில் குளுட்டோதயோன் போன்ற ஆக்டிவ்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும். ஃபேஸ்வாஷ் என்பதை அதிகபட்சம் 20 நொடிகள் மட்டுமே சருமத்தில் பயன்படுத்தப் போகிறோம்.
எனவே, அதில் சேர்க்கப்படுகிற ஆக்டிவ்ஸ் பெரிதாக எந்தப் பலனையும் தராது என்பதால் ஆக்டிவ்ஸ் உள்ள ஃபேஸ்வாஷ் தேவையில்லை.
உதாரணத்துக்கு, சிக்கன் நல்லது என்றாலும், அதை சருமத்தின் மேல் பூச்சாக உபயோகிப்பதால் பலன் கிடைக்காது. உள்ளுக்குச் சாப்பிட்டால்தான் பலன் தெரியும். அப்படித்தான் இதுவும்.
சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் மற்றும் சருமத்தின் தடுப்பு அரணைப் பாதிக்காத விதத்தில் வாங்கினால் போதும். சிறு சிறு துகள்கள் சேர்க்கப்பட்ட ஸ்கிரப் வடிவிலான ஃபேஸ்வாஷும் தேவையில்லை.

சீதோஷ்ண நிலைக்கேற்பவும் ஃபேஸ் வாஷ் தேர்வு செய்யப்பட வேண்டும். கோடைக்காலத்தில், இயற்கையாகவே சருமத்தில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருப்பதால், நுரைக்கும் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தில், சருமம் வறண்டு போகாமல் இருக்க, சோப் இல்லாத, கிரீமியான கிளென்சர்களை பயன்படுத்தலாம். குறைந்தபட்சம் 2 முறை முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் வாஷ் செய்த பிறகு மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்த வேண்டும். பகல் வேளைகளில் மாய்ஸ்ச்சரைசருடன் சேர்த்து சன் ஸ்கிரீனும் பயன்படுத்த வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் கட்டாயமாக முகத்தைக் கழுவ வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
















