ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்: திருவண்ணாமலை போறீங்களா? அப்போ அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்!
திருவண்ணாமலையில் ஈசனே மலையாக எழுந்தருளியிருக்கிறார் என்பது ஐதிகம். நினைத்தாலே முக்தி தரும் தலம். இத்தலத்திற்கு வந்தாலும் கிரிவலம் செய்தாலும் பல ஜன்மப் பாவங்களும் போகும்.
அப்படிப்பட்ட திருவண்ணாமலைத் திருத்தலத்தில் பல்வேறு ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்.
திருவண்ணாமலை சின்னக்கடைத் தெருவில் இருக்க்கூடிய பவளக்குன்று மடம் வழியாகச் செல்லும் மலைப் படிக்கட்டுகளில் ஏறினால் இந்த ஆலயத்தை அடையலாம்.
இங்கே அண்ணாமலையார் சிவசக்தி சொரூபமாக – அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தருகிறார்.

சிறு குன்றினைப்போல அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியின் உச்சிக்கு செல்ல 150 படிகள் ஏற வேண்டும். செல்லும் வழியிலேயே சிறு குடைவரை சிற்பங்களைக் காணமுடியும். அவற்றில், விநாயகர், முருகன், பைரவர், வீரபத்திரர், எதிரே நந்தி பகவான் ஆகியோர் அற்புதமாகக் காட்சி அருள்கிறார்கள்.
மேலே ஏறியதும் வலதுபுறம் ஒரு சுனை உள்ளது. இது மிகவும் பழைமையான தீர்த்தம். இந்தத் தீர்த்தம் கொண்டுதான் சுவாமி அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
காஞ்சிபுரத்தில் தவம் செய்த அம்பிகையை ஈசன் திருவண்ணாமலைக்கு வரச் சொன்னார். அப்படி வந்தபோது கௌதம மகரிஷி அம்பிகையை வரவேற்று இந்தப் பவளக் குன்றில் அமர்ந்து தவம் செய்யுமாறு வழிகாட்டினார்.
இந்தக் குன்றிலேயே தேவி பர்ணசாலை அமைத்து தவம் செய்தாள். நான்கு திசையிலும் துர்கையை காவல் புரிய அம்பிகையின் தவம் நிகழ்ந்தது.
அப்போது மகிஷாசுரன் தொல்லை கொடுத்தான். அம்பாள் துர்கையை அனுப்பி மகிஷாசுரனை வதம் செய்தாள் என்கிறது புராணம். அப்படி அவன் தலையை வெட்டியபோது அவன் தலைக்குள் ஒரு லிங்கம் இருந்ததாம். அம்பாள் அதைக் கையில் எடுத்தபோது அது அவளின் கையில் ஒட்டிக்கொண்டது.

இதுகுறித்து கௌதம மகரிஷியிடம் அம்பிகை கேட்டபோது ஈசன் அசரீரியாக பதில் சொன்னார்.
“கத்தியினால தரையை பிளந்து கற்க தீர்த்தம் உண்டாக்கு. கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, கோதாவரி, சோன நதி எல்லாம் அதில் வந்து சேரும். 30 நாள்கள் அதில் நீராடி பூஜை செய்தால் லிங்கம் கையில் இருந்து விலகும்” என்றார்.
அம்பாளும் அப்படியே செய்ய 30 நாள் கழித்து லிங்கம் கையை விட்டு விலகியது என்கிறது புராணம். அந்த லிங்கத்தை 'பாவ விமோசன லிங்கேஸ்வரர்' என்று பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். இன்றும் துர்கையம்மன் கோயிலில் அந்த பாவ விமோசன லிங்கத்தை தரிசனம் பண்ணமுடியும்.
இப்படி எல்லாம் அம்பிகை கடும் தவம் புரிய ஈசன் மனம் மகிழ்ந்து இந்தப் பவளக்குன்றில் காட்சி அளித்து அம்பிகையைத் தன்னோடு சேர்த்து அர்த்தநாரீஸ்வரராக மாறினார். திருவண்ணாமலைத் தலத்தில் இரண்டு விசேஷம். ஒன்று ஈசன் மலையாக இருப்பது. மற்றொன்று அம்பிகைக்கு இடபாகம் அளித்தது. இரண்டாவது விசேஷம் நிகழ்ந்த தலம் இந்தப் பவளக் குன்று.
இந்தக் குன்றின் மீது ஈசன் அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். கூடவே விநாயகர், முருகர், முக்தாம்பிகை ஆகியோரும் எழுந்தருளியிருக்கிறார்கள்.
கௌதம மகரிஷி பிரதிஷ்டை செய்த சிவலிங்கமும் பவளகிரீஸ்வரர் என்கிற நாமத்தோடு இங்கே காட்சி அருள்கிறார்.

கோயிலின் அழகான கோபுரத்தின் நான்கு புறங்களில் தட்சிணாமூர்த்தி, சயன கோலத்தில் பெருமாள், மயில் மேல் முருகன், நந்தியில் சிவனும், பார்வதியும் ஆகியோர் காட்சி கொடுக்கின்றனர்.
பிராகாரத்தின் நான்கு மூலையிலும் நந்தி இருப்பதோடு நந்திக்கு கீழே முதலையின் சிற்பமும் அமைந்திருப்பது சிறப்பு. பிராகாரத்தில் சண்டிகேஸ்வரருக்கு தனி சந்நிதி உண்டு.
ரமண மகரிஷி இங்கே தங்கியிருந்து தவம் செய்வார். ஒருமுறை அவரின் தாய் அழகம்மைக்கு உபதேசம் செய்த தலமும் இதுதான்.
திருவண்ணாமலை வரும் பக்தர்கள் பலரும் இந்தத் தலத்துக்கு வருவதில்லை. இங்கே ஆலயம் குறிப்பிட்ட வேளைகளில்தான் திறந்திருக்கும். ஆனால் பவளக்குன்றின் மீது ஏறி நின்று திருவண்ணாமலையையும் ஈசனின் ஆலய கோபுரதரிசனமும் கண்டாலே நமக்குப் புண்ணிய பலன் கிடைக்கும்.


















