ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
நாணயம் விகடன் வழிகாட்டியதால் குவிந்த லட்சங்கள்... சாட்சி சொல்லும் கோவை லோகநாதன்!
சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் பிசினஸ் என அத்தனை விஷயங்களையும் எளிமையாகவும், சரியாகவும் தந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமையைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நாணயம் விகடன், 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
உங்கள் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள உதவும் முதலீட்டு வழிகாட்டியாக இருந்துவரும் நாணயம் விகடன், கடந்த 20 ஆண்டுகளில் சாதித்தது என்ன என்பதற்கு, வாசகர்களாகிய நீங்களெல்லாம்தான் சாட்சி. அந்தவகையில், நாணயம் விகடன் வழிகாட்டியதன் மூலம் பல லட்சங்களைக் குவித்த கோவை வாசகர் லோகநாதன், ‘நாணயம் விகடனும் நானும்’ என்ற தலைப்பில் இங்கே சாட்சி சொல்லியிருக்கிறார்.
எப்போதுமே வாசகர்கள் விரும்புவதைக் கொடுப்பதுதான் நாணயம் விகடனின் ஸ்பெஷல். அந்தவகையில், 21-ம் ஆண்டு சிறப்பிதழுக்கு நீங்கள் கொடுத்த யோசனைகளை ஆராய்ந்து, தொகுத்து அவற்றிலிருந்து புதிய தொடர்களையும், கட்டுரைகளையும் திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறோம்.
வாழ்க்கையில் முதல் சம்பளம் என்பது எல்லோருக்குமே ஸ்பெஷல். அந்த முதல் சம்பளத்தில் வரவு செலவுகளை எப்படி நாம் திட்டமிடுகிறோம் என்பது தான் நம் எதிர்கால நிதிநிலை எப்படி இருக்கப் போகிறது என்று தீர்மானிக்கும். அந்தவகையில், பணம் சார்ந்து செய்ய வேண்டிய, செய்யக்கூடாத விஷயங்களைச் சொல்லும் ‘பணம் பழகுவோம்... சம்பளம் முதல் உயில் வரை’ என்ற தொடர் உங்களுக்காக வருகிறது. எப்போதுமே மக்களின் விருப்பமாக இருந்துவரும் ரியல் எஸ்டேட் சொத்துகள் சார்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களையும், சந்தையில் வரக்கூடிய மாற்றங்களையும் எடுத்துச்சொல்லும் விதமாக ‘வீடு, மனை, லாபம்... ரியல் எஸ்டேட் கள நிலவரம்’ தொடர் இடம்பெறுகிறது.
பணம் சார்ந்து சின்னச் சின்ன விஷயங்களைச் செய்து பெரும் மாற்றத்தைத் தங்களின் குடும்பத்தின் நிதிநிலையில் ஏற்படுத்திய நிதி அமைச்சர்களை, ‘எங்க வீட்டு எஃப்.எம்’ தொடர் மூலம் அங்கீகரித்து, மற்றவர்களுக்கும் அறிமுகப் படுத்துவதில் நாணயம் விகடன் பெருமை கொள்கிறது. தொழிலில் சாதித்துக் கொண்டிருப்பவர்களின் வெற்றிக் கதைகள் ‘நம்ம ஊரு அம்பானி... அசத்தும் பிசினஸ் கில்லாடிகள்!’ என்ற தொடரில் இடம்பெற உள்ளன. ஏ.ஐ யுகத்தில் பிரவேசித்திருக்கும் நமக்கு ஏ.ஐ தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து அறிவையும் தெளிவையும் ஏற்படுத்தும் வகையில், ‘ஏற்றம் தரும் AI ஏஜென்ட்’ என்ற தொடர், அதிரடியாக இங்கே இடம் பிடிக்கிறது.
இப்படி, எப்போதும் உங்களின் நிதி வழிகாட்டியாகக் கூடவே வரும் நாணயம் விகடனுக்கு 20 ஆண்டுகள் என்பது பெருமைக்குரிய மைல்கல். இதற்குத் துணையாக நிற்கும் வாசகர்கள், விளம்பரதாரர்கள், விநியோகஸ்தர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல.
நாணயம் விகடனின் இந்தப் பயணத்தில் என்றென்றும் இணைந்திருப்போம்!
- ஆசிரியர்















