ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
மசோதா : குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளும், உச்ச நீதிமன்றத்தின் பதில்களும் | முழு விவரம்
ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர், மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில், அதன் மீது குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அந்த 14 கேள்விகளுக்கும் உச்ச நீதிமன்றம் தனித்தனியாகப் பதில் அளித்திருக்கிறது. அந்தக் கேள்வி பதில்களைத் தற்போது விரிவாகப் பார்க்கலாம்.

1. அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு ரீதியான அவரது தனிப்பட்ட விருப்ப உரிமை என்பதை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியுமா?
200-வது பிரிவின் கீழ் ஆளுநர் தனது தனி விருப்ப உரிமையைச் செயல்படுத்துவதை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. நீதிமன்றம் அந்த முடிவின் தகுதி மீதான ஆய்வுக்கு செல்ல இயலாது. எனினும் ஒரு மசோதா மீது நீண்ட காலம் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தால் சட்டப் பிரிவு 200-ன் கீழ் செயல்படுமாறு ஆளுநரை வரம்புக்கு உட்பட்டு நீதிமன்றத்தால் கேட்டுக் கொள்ள முடியும்.
2. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவின் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது ஆளுநருக்கு உள்ள அரசியலமைப்பு ரீதியான வாய்ப்புகள் என்ன?
ஆளுநருக்கு அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின் கீழ் மூன்று அரசியலமைப்பு ரீதியான வாய்ப்புகள் உள்ளன. அவை,
* ஒப்புதல் அளித்தல்,
* ஜனாதிபதியின் பரிசீலனைக்காக மசோதாவை எடுத்து வைப்பது,
* ஒப்புதலைத் தடுத்து நிறுத்தி, அதற்கான காரணங்களுடன் மசோதாவைச் சட்டமன்றத்திற்குத் திரும்ப அனுப்புதல்.
இது ஒரு நான்காவது வாய்ப்பை வழங்குவதல்ல, மாறாக ஏற்கனவே உள்ள வாய்ப்புகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கிறது.
* மூன்றாவது வாய்ப்பான மசோதாவைச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்புவது என்பது பண மசோதா அல்லாத மசோதாக்களுக்கு மட்டுமே அவ்வாறு திருப்பி அனுப்ப முடியும்.
3. 200-வது பிரிவின் கீழ் மசோதா சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது முடிவெடுக்க ஆளுநர் தனக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தும்போது அமைச்சரவையின் உதவியையும் ஆலோசனையையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதா?
பதில்: அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஏற்கனவே சொல்லப்பட்ட அந்த மூன்று வாய்ப்புகளில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மாநில ஆளுநருக்குத் தனி விருப்புரிமை இருக்கிறது. அப்படி முடிவு எடுக்கும்போது அதற்கு மாநில அமைச்சரவையின் உதவி அல்லது ஆலோசனையை அவர் கட்டாயம் கேட்க வேண்டும் என்பதில்லை, அதற்கு அவர் கட்டுப்பட்டவரும் இல்லை.
4. இந்திய அரசியல் சாசனத்தின்படி பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர் எவ்வளவு காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்ற காலக்கெடுவை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா?
முடியாது. ஆளுநர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் எந்த கால வரம்பையும் நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது.

அரசியல் சாசன சட்டப் பிரிவு 201-ன்படி குடியரசுத் தலைவரின் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விருப்ப உரிமை நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதா?
பதில்: முடியாது, மசோதாக்கள் மீது ஆளுநர் என்ன செய்ய வேண்டும் என்பதை நீதிமன்றங்கள் எப்படிச் சொல்ல முடியாதோ, அதேபோல இந்தக் குறிப்பிட்ட சட்டப் பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்கும் அவ்வாறு சொல்ல முடியாது.
6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 361-வது பிரிவானது, 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் மேற்கொள்ளும் செயல்கள் மீதான நீதிமன்ற ஆய்வுக்கு முற்றிலும் தடையாக இருக்குமா?
ஆம், 361-வது பிரிவு ஆளுநரைத் தனிப்பட்ட முறையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கு முற்றிலும் தடையாக உள்ளது. ஆனால், 200-வது பிரிவின் கீழ் ஆளுநர் நீண்டகாலமாகச் செயலற்ற தன்மையில் இருக்கும்போது, அவர் ஏன் அதைச் செய்யாமல் இருக்கிறார் என்பதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் கிடையாது.
7. மசோதா சட்டமாக மாறுவதற்கு முந்தைய நிலையில் 200 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோரின் முடிவுகள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவையா?
இந்திய அரசியலமைப்பின் 200 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் எடுக்கும் முடிவுகள், மசோதா சட்டமாக உருவாவதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல. சட்டமாக மாறுவதற்கு முன்னர் ஒரு மசோதாவின் உள்ளடக்கத்தின் மீது எந்த வகையிலும் நீதிமன்றங்கள் ஆய்வு மேற்கொள்ள அனுமதியில்லை. குறிப்பாக, 143 பிரிவின் கீழ் மசோதாக்களை நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய முடியாது.
8. அரசியல் சாசனத்தில் கால வரம்பு மற்றும் அதிகாரப் பயன்பாட்டு முறை குறிப்பிடப்படாத நிலையில், 201-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவுகள் மூலம் கால வரம்புகளை நிர்ணயிக்க முடியுமா?
ஆளுநருக்கு 200-வது பிரிவு தொடர்பாகக் கூறப்பட்ட அதே காரணங்களுக்காக, 201-வது பிரிவின் கீழ் பணிகளை நிறைவேற்றுவதில் குடியரசுத் தலைவரையும் நீதிமன்ற ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட கால வரம்புகளுக்கு கட்டுப்படுத்த இயலாது.

9. ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது குடியரசுத் தலைவர் 143-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவது கட்டாயமா?
அரசியலமைப்பு சாசனத்தில், ஆளுநர் ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும் ஒவ்வொரு முறையும், குடியரசுத் தலைவர் 143-வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்க வேண்டியதில்லை. ஒருவேளை மசோதா தொடர்பாகச் சட்ட ஆலோசனைகள் எதுவும் தேவைப்பட்டால் இந்த நீதிமன்றத்தை அணுகலாம்.
10. இந்திய அரசியலமைப்பின் 142 பிரிவின் கீழ் (உச்ச நீதிமன்றத்திற்கு என்று உள்ள சிறப்பு தனி அதிகாரம்) குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களது உத்தரவுகளையும் எவ்வகையிலும் மாற்ற முடியுமா?
குடியரசுத் தலைவர்/ஆளுநரின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களது உத்தரவுகளையும் இந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்தி மாற்ற முடியாது.
11. இந்திய அரசியலமைப்பின் 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே மாநில சட்டமன்றம் இயற்றிய மசோதா அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக நடைமுறைக்குக் கொண்டு வர முடியுமா?
இந்தக் கேள்விக்கான பதில் கேள்வி 10-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றம் இயற்றிய சட்டம் நடைமுறைக்கு வர முடியாது. ஆளுநரின் சட்டமியற்றுதல் பணியை வேறு எந்த அரசியலமைப்பு அதிகாரமும் மாற்றம் செய்ய முடியாது. அதை ஆளுநர் மட்டுமே செய்ய முடியும்.
12. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 145(3)-ன்படி, ஒரு வழக்கில் அரசியலமைப்பு விளக்கம் தொடர்பான சட்டக் கேள்வி உள்ளதா என்பதை முதலில் தீர்மானித்து, அதனைக் குறைந்தபட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவது இந்த நீதிமன்றத்தின் எந்த அமர்வுக்குக் கட்டாயம்?
145(3)-வது பிரிவின் அரசியலமைப்பு முக்கியத்துவம் குறித்து இந்த அமர்வு ஏற்கனவே விளக்கத்தைத் தெளிவாகக் கொடுத்து விட்டது. எனவே, இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் திருப்பி அனுப்புகிறோம்.

13. இந்திய அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு அல்லது சட்ட விதிகளுக்கு மாறாகவோ முரணாகவோ, வேறு உத்தரவுகளையோ வழிகாட்டுதல்களையோ பிறப்பிக்க முடியுமா?
உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் தொடர்பான இந்தக் கேள்வி மிகவும் பெரியதாக இருக்கிறது. இது தொடர்பாக உறுதியான பதில் கொடுப்பது சாத்தியம் கிடையாது. ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் பணிகள் தொடர்பில் பிரிவு 142 குறித்து ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்வியின் பதிலின் ஒரு பகுதியாகவே இதற்கான பதில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
14. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு இந்திய அரசியலமைப்பு பிரிவு 131-ன் கீழ் செயல்படுவதைத் தவிர வேறு ஏதேனும் வகையில் செயல்படத் தடை எதுவும் இருக்கிறதா?
இந்தக் கேள்வி நீதிமன்றங்களிடம் கேட்கும் சந்தேகங்களுக்குத் தொடர்பற்றதாக இருக்கிறது. எனவே, இதற்குப் பதில் அளிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது.
















