ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங...
மதுரை: ``மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' - சு.வெங்கடேசன்
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சிறப்பு இருதரப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்க்க வேண்டும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுக்கு கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் வலியுறுத்தியிருந்தேன்.

இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்,
சுற்றுலா மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக 18 இந்திய விமான நிலையங்களை சுற்றுலா நகரமாக ஏழு ஆசியான் நாடுகளுக்கு அறிவித்து மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தமானது ONE-TIME POLICY DECISION எனவும்,
தற்போது மதுரையை இந்த ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரமாக சேர்ப்பதற்கான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை எனவும்,
இந்திய விமான நிறுவனங்கள் விரும்பினால் மதுரையிலிருந்து ஆசியான் நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்க எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும்,
ஆனால் அந்த முடிவு இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் லாபம் மற்றும் வழித்தடத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு அவர்களே முடிவு செய்ய முடியும் என்றும் அரசு அவர்களின் விமான இயக்கத் திட்டங்களில் தலையிட முடியாது எனவும் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மதுரை மண்டலம் இயற்கையாகவே தெற்காசிய நாடுகளுடன் கலாசார மற்றும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது, அங்கு வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் தென் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள்.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பெரும்பாலானோர் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
மதுரைக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையேயான சுற்றுலா வாய்ப்புகளும் ஏராளம். இத்தனை அம்சங்களையும் அறிந்துதான் மலேசியாவின் ஏர்ஆசியா 2003ஆம் ஆண்டிலிருந்தும், பாட்டிக்ஏர் (மலிண்டோ) 2014ஆம் ஆண்டிலிருந்தும் மதுரைக்கு நேரடி விமான சேவையை இயக்க முன்வந்தனர்.

மேலும் 2014-15 காலகட்டங்களில் ஏர் அரேபியா, ஃப்ளை துபை போன்ற சில வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களும் மதுரைக்கு தங்களது விமானங்களை இயக்க ஆர்வம் காட்டின. ஆனால் இவை அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களில் மதுரை இடம் பெறாத ஒரே காரணத்தால் நடைமுறைக்கு சாத்தியமில்லாமல் போனது.
ஒருபக்கம் இந்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் மதுரை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு எதிராகவே உள்ளன. மறுபுறம் ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் சுற்றுலா நகரங்கள் என சேர்க்கப்பட்டுள்ள 18 இந்திய நகரங்களை ஆராய்ந்தோமானால், கஜுராஹோ இன்றுவரை முழுமையான உள்நாட்டு விமான நிலையமாக உள்ளன, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தில் ஒரு உள்நாட்டு விமான நிலையத்தை POC ஆகச் சேர்ப்பதில் எந்தப் பயனும் இல்லை.
ஏனெனில் சுங்க மற்றும் குடியேற்ற வசதிகள் இல்லாமல் சர்வதேச விமான நடவடிக்கைகளை அங்கு கையாள முடியாது. ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து, போர்ட்-பிளேர், அவுரங்காபாத் போன்ற சில விமான நிலையங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசியான் இருதரப்பு சலுகைகளைப் பயன்படுத்தவில்லை.
இருதரப்பு ஒப்பந்தங்கள் ஒரு கொள்கை முடிவு என்று இந்திய அரசு கூறுகிறது, ஆனால் அந்த கொள்கையே நியாயமற்றதாக தெரிகிறது., அதுமட்டுமின்றி இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் மதுரை விமான நிலையம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.
வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய் போன்ற தங்கள் HUB வழியாக உலகம் முழுவதும் பயணத்திட்டங்களை மேற்கொள்கின்றன. அதிகளவில் லாபம் ஈட்டுகின்றன ஆனால், இந்திய விமான நிறுவனங்கள் பெரும்பாலும் O&D போக்குவரத்தையே சார்ந்துள்ளன.
ஆர்வமுள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதும், தயங்கும் இந்திய விமான நிறுவனங்கள் மதுரை விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதை எதிர்பார்ப்பதும்/அதற்காக காலவரையற்று காத்திருப்பதும், மதுரையை ஒவ்வொரு ஆண்டும் நஷ்டம் விளைவிக்கும் AAI விமான நிலையங்களின் பட்டியலில் வசதியாக சேர்க்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

இந்தக் கொள்கை முடிவு என்பது முற்றிலும் நியாயமற்றது. இது ஒரு முறை முடிவு செய்யப்படும் கொள்கை முடிவாக இருக்கக்கூடாது.
குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்குப் பிறகாவது இந்த சிறப்பு ஆசியான் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
சர்வதேச போக்குவரத்திற்கு பயன்படாத விமான நிலையங்களுக்கு பதிலாக தெற்காசிய நாடுகளுடனான நேரடி விமானங்களுக்காக பல வருடங்களாகக் காத்திருக்கும் மதுரை போன்ற தகுதியான விமான நிலையங்களை இந்த ஆசியான் ஒப்பந்தத்தில் POC-ஆக சேர்ப்பது தானே நியாயமாக இருக்க முடியும்?
தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மதுரையை ஆசியான் சிறப்பு ஒப்பந்தத்தில் ஒரு சுற்றுலா நகரமாக சேர்க்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
மதுரைக்கு மெட்ரோ திட்டம் கிடையாது என ஒன்றிய அரசு மறுக்கிறது, பிற மாநிலங்களில் அடிப்படையாக இருக்கவேண்டிய வசதிகள் கூட இல்லாத சிறிய விமான நிலையங்களை ஊக்குவிக்கிறது, ஆனால், மதுரை விமான நிலையத்தைப் புறக்கணிக்கிறது. ஒன்றிய அரசின் வஞ்சகம் நிறைந்த இச்செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது." என்று தெரிவித்துள்ளார்.
















