Big Boss Kannada: `சாதி பாகுபாடு' - கிச்சா சுதீப், போட்டியாளர்கள் மீது மகளிர் ஆண...
விருதுநகர்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கண் பார்வை இழப்பு; பள்ளி நிர்வாகம் மீது வழக்கு
விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனின் இடது கண் பாதிக்கப்பட்டு செயல் இழந்துள்ளது.
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ளது எம்.புதுப்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது 15 வயது மகன் விருதுநகர் - மதுரை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், சமூக அறிவியல் ஆசிரியரான குமார் என்பவர், அதே வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவரை பிரம்பால் தாக்க முயன்றுள்ளார்.
அப்போது, அருகில் இருந்த மாணவரின் இடது கண்ணில் பலத்த அடி விழுந்துள்ளது. இதனால் அவரது கண்ணின் கருவிழி பாதிக்கப்பட்டு இரத்தம் கொட்டியுள்ளது.

இதையடுத்து, விருதுநகரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, மாணவனுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் மாணவனை பெற்றோர் சேர்த்துள்ளனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், கண்ணில் உள்ள கண்திரை மற்றும் நரம்புகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இடது கண்ணில் பார்வை வருவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவனின் தந்தை விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், ஆசிரியர் குமார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


















