புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை...
புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்!
தெருவில் எதாவது பொருள் கிடந்தால் உடனே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொள்வது வழக்கம். அதுவும் பணம் என்றால் ஒரு ரூபாய் கிடந்தால் கூட விடமாட்டார்கள். ஆனால் புனேயில் தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சத்தை தூய்மைப் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்து அதனை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். புனே சதாசிவ் பேட் பகுதியில், அஞ்சு மானே என்ற பெண் ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரிக்கும் வேலையை செய்து வருகிறார். அவர் வழக்கம்போல் ஒவ்வொரு வீட்டிலும் குப்பையை வாங்கிக்கொண்டு வந்தபோது சாலையில் பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.
உடனே அதில் எதாவது மருந்து இருக்கலாம் என்று கருதி அதனை எடுத்து தனது வண்டியில் தனியாக வைத்தார். சிறிது நேரம் கழித்து அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் மருந்தும், கட்டுக்கட்டாக பணமும் இருந்தது.

உடனே அந்த பகுதியில் உள்ளவர்களிடம் யாராவது பணம் இருந்த பையை தவறவிட்டார்களா என்று அஞ்சு விசாரித்தார். அப்போது ஒருவர் மிகவும் பதட்டத்துடன எதையோ தேடிக்கொண்டு வந்தார். அவரது பதட்டத்தை பார்த்த அஞ்சு அவரிடம் என்னவென்று விசாரித்தார். உடனே அவர் தான் பேக்கை தவறவிட்டுவிட்டதையும், அதில் பணம் மற்றும் மருந்து இருந்ததை தெரிவித்தார்.
உடனே பணத்திற்கு சொந்தக்காரர் அவர்தான் என்பதை அறிந்து கொண்ட அஞ்சு அந்த பேக்கில் என்னவெல்லாம் இருந்தது என்பதை கேட்டு உறுதி செய்துகொண்டு அதனை அவரிடம் ஒப்படைத்தார். அவர் அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளவில்லை. பேக்கில் ரூ.10 லட்சம் இருந்தது. பணத்திற்கு சொந்தக்காரர் மிகவும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டார். அப்பெண்ணின் இந்த தன்னலமற்ற செயலை பாராட்டி உள்ளூர் மக்கள் சிறிய பாராட்டு விழா எடுத்தனர். அதில் அவருக்கு ஒரு சேலையும், சிறிது ஊக்கத்தொகையும் கொடுத்தனர். கடந்த 20 ஆண்டுகளாக அஞ்சு புனே மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு வீட்டிலும் குப்பைகளை சேகரித்து வருகிறார்.


















