செய்திகள் :

NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்' என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்; ஓர் அலசல்

post image

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC India Ltd), கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சுற்றுச்சூழல் விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இது தொடர்பாக 2017-18 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்தியத் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் (CAG) ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவை இந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் சமர்ப்பித்திருக்கிறது.

அந்த அறிக்கையில், `தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலும், ராஜஸ்தானிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களை இயக்கி வரும் என்.எல்.சி நிறுவனம், உரிய சுற்றுச்சூழல் அனுமதியின்றிச் செயல்பட்டது முதல், அனல்மின் நிலையங்களை முறையாகப் பராமரிக்கத் தவறியது வரை பல விதிமீறல்களைச் செய்துள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

என்.எல்.சி
என்.எல்.சி

'சிஏஜி அறிக்கையில் என்னென்ன விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன' என்ற கேள்வியுடன் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர ராஜனைத் தொடர்புகொண்டோம்.

இந்தப் பிரச்னையின் தீவிரத்தன்மையை விரிவாகப் பேசத் தொடங்கிய சுந்தர ராஜன், ``நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலியிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்சிங்கரிலும் இயக்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் 2017 -18 முதல் 2022 -23 ஆண்டுகளுக்கு இடையேயான செயல்பாடுகளை சிஏஜி ஆய்வு செய்து, அந்த அறிக்கையை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருக்கிறது சிஏஜி.

2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், `1994-ம் ஆண்டு வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ், சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற அனைத்துத் திட்டங்களுக்கும், 2006இல் வெளியான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் கீழ் மீண்டும் அனுமதி பெற வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.

என்.எல்.சி
என்.எல்.சி

என்.எல்.சி-யின் சுரங்கம்-II 1994-ம் ஆண்டு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் (EIA) கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தது. அதனால், மீண்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது.

ஆனால், என்.எல்.சி. நிறுவனம் அந்த அனுமதியைப் பெறவில்லை. இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தீர்க்கப்பட்டு, 2023 செப்டம்பர் மாதம்தான் என்.எல்.சி-யின் விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது. 2006-2016 வரை அனுமதி பெறாமலே இந்த நிறுவனம் இயங்கியிருக்கிறது.

சுரங்கம்-I-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் நிபந்தனைகள்படி, சுரங்கம் தோண்டும்போது எடுக்கப்படும் மண், பாறை உள்ளிட்டவற்றை 20 மீட்டர் உயரத்திற்கு 28 டிகிரி சரிவு இருக்கும்படியாகத்தான் கொட்ட வேண்டும். ஆனால், விதிகளுக்குப் புறம்பாக 50 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டிருக்கிறது. அதிகப்படியான மழைப்பொழிவு ஏற்பட்டால் அந்த மண் குவியல் சரிந்து விழும் அபாயமிருப்பதாக சிஏஜி குறிப்பிட்டிருக்கிறது.

அதே போல, சுரங்கம் II-க்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின்படி கொட்டப்படும் மண் மற்றும் பாறைகளின் உயரம் 65 மீட்டர் மற்றும் 28 டிகிரி சரிவு என்கிற அளவைத் தாண்டக்கூடாது. ஆனால், இந்நிபந்தனைக்கு மாறாக 120 மீட்டர் உயரத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண் சரிந்து அருகிலுள்ள கால்வாய் மற்றும் விவசாய நிலங்களை மூடியிருக்கிறது.

என்.எல்.சி
என்.எல்.சி

2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் என்.எல்.சி நிறுவனத்தின் அலட்சியத்தால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் தொடர்ந்துள்ளன. விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குப் பிறகு ரூ. 2.18 கோடி அளவிலான இழப்பீட்டை என்.எல்.சி நிறுவனம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

சுரங்கங்களில் நிலத்தைத் தோண்டவும், நிலக்கரியை அள்ளவும், கொண்டு செல்லவும் பெரிய அளவிலான சிறப்புச் சுரங்க இயந்திரங்கள் (Specialised Mining Equipment – SME) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் ஆயுட்காலம் 1,00,000 முதல் 1,37,500 மணி வேலை நேரங்கள்தான்.

காலாவதியான இயந்திரங்களைப் புத்துயிராக்கம் செய்து, கூடுதலாக 15 ஆண்டுகள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம் என என்.எல்.சி நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. ஆனால், மொத்தமுள்ள 72 SME இயந்திரங்களில் 26 SME இயந்திரங்கள் எவ்வளவு மணிநேரம் பயன்படுத்தப்பட்டன என்கிற கணக்கே பராமரிக்கப்படவில்லை.

என்.எல்.சி
என்.எல்.சி

மேலும் கணக்குகள் பராமரிக்கப்பட்ட 46 SME இயந்திரங்களில் 15 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பும் புத்துயிராக்கம் செய்யப்படாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8 SME இயந்திரங்கள் காலாவதியான பின்பு 11 ஆண்டுகள் கழித்தே புத்துயிராக்கம் செய்யப்பட்டுள்ளன.

4 SME இயந்திரங்கள் காலாவதியான பின்னர் புத்துயிராக்கம் செய்யப்பட்டு அதன் பின்னர் 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1961 மற்றும் 1966 இடைப்பட்ட காலத்தில் 2 SME இயந்திரங்களுக்குப் பதிலாக மாற்று இயந்திரங்கள் வாங்கப்பட்ட பின்னரும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

காலாவதியான இயந்திரங்களால் என்.எல்.சி சுரங்கங்களில் பலமுறை விபத்துகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பாக 2009 ஆம் ஆண்டு சுரங்கப் பாதுகாப்புத் தலைவர் நடத்திய ஆய்வில் 'முறையாகப் பராமரிக்கப்படாத இயந்திரங்களால்தான் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்தன' எனத் தெரியவந்தது. 12 காலாவதியான இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு ஆய்வே நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் சிஏஜி அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், என்.எல்.சி. நிறுவனத்தால் சுரங்கம் தோண்டுவதற்காக அடையாளம் காணப்பட்ட 12,835 ஹெக்டரில் 9,180 ஹெக்டர் நிலத்தை மட்டுமே என்.எல்.சி. கையகப்படுத்தியுள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி இதில் 5,880.34 ஹெக்டர் நிலத்தைத் தோண்டிவிட்டது. 3,253.47 ஹெக்டர் நிலம் மண் கொட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 46.19 ஹெக்டர் நிலம் மட்டுமே இன்னும் தோண்டப்படாமல் உள்ளது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

இன்னும் நிலம் கையகப்படுத்த என்.எல்.சி. முயற்சிகள் மேற்கொள்வதாக தகவல் கிடைக்கின்றன. ஏற்கெனவே இந்த நிறுவனத்துக்கு நிலம் வழங்க சுற்று வட்டார மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

நெய்வேலியில் செயல்படும் மூன்று அனல்மின் நிலையங்களிலும் உள்ள குறைபாடுகளால் அவற்றை முழு உற்பத்தித் திறனுக்கு இயக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக ரூ. 2,353.99 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மூன்று அனல்மின் நிலையங்களிலும் ஏற்பட்ட கோளாறுகளின் காரணமாக மட்டும் 6 ஆண்டுகளில் 742 முறை மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 14,538.66 MU மின்சார உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

என்.எல்.சி. அனல்மின் நிலையங்களில் 2001, 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 4 தீ விபத்துகள் நடந்தன. 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரு விபத்துகளில் மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 'அதிக வெப்பமான லிக்னைட் தூசுகளை உரிய முறையில் அகற்றாமல் விட்டதுதான் தீ விபத்துக்குக் காரணம்' என சி.ஏ.ஜி குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியாக லிக்னைட் தூசுகளை அகற்றி வந்திருந்தால் இவ்விபத்துகளைத் தடுத்திருக்கலாம். இது முழுக்க முழுக்க என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சியத்தால் மட்டுமே நிகழ்ந்த விபத்துகள்.

என்.எல்.சி
என்.எல்.சி

ஒரு பொதுத்துறை நிறுவனம் எப்படியெல்லாம் பொறுப்பற்ற முறையில் அலட்சியத்துடன் செயல்படக் கூடாதோ அப்படியெல்லாம் செயல்பட்டு வந்துள்ளது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனத்துக்குத் தங்கள் நிலங்களை வழங்கிய விவசாயிகள், எண்ணற்ற துன்பங்களைச் சந்தித்து நீதி கேட்டுப் போராடி வருகின்றனர்.

விதிமீறல் செயல்பாடுகளால் சுற்றியுள்ள கிராமங்களின் மண்வளத்தையும் நீர்வளத்தையும் கெடுத்து மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் என்.எல்.சி. மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

Brand Bengaluru: சர்வதேச SWAN அமைப்பில் இந்தியாவின் ஒரே பிரதிநிதி; வாழ்த்திய முதல்வர் சித்தராமையா!

SWAN (Smart Water Networks Forum) என்ற அமைப்பு உலகெங்கிலும் உள்ள குடிநீர், கழிவுநீர் மற்றும் மழைநீர் அமைப்புகளை "ஸ்மார்ட்" (Smart) ஆக மாற்றும் ஒரு சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பாகும். இதன் தலைமையகம் லண்ட... மேலும் பார்க்க

Chennai Rail: `வதந்திகளை நம்பாதீங்க... நாளைய சிறந்த எழும்பூருக்காக.!' - சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை மற்றும் சென்னை புறநகரை இணைக்கும் வகையில் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினம்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் வே... மேலும் பார்க்க

திருமணப் பதிவு: "பெற்றோருக்கு வாட்ஸ்அப்பில் தெரிவிக்கப்படும்" - விதிகளைக் கடுமையாக்கும் குஜராத்

குஜராத் மாநில அரசு, திருமணப் பதிவு முறைக்கெனப் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, திருமணத்தில் பெற்றோரின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கம் எனவும் தெர... மேலும் பார்க்க

‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ - நாதக மாநாடு குறித்து சீமான் உருக்கம்!

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது நாம் தமிழர் கட்சி. கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உருக்கமான மடலை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப... மேலும் பார்க்க

கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி - நாளை கலந்தாய்வு!

கடந்த 2019 மற்றும் 2020 கோவிட் தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள், பிறகு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.அப்போது வருங்காலங்களில் ரெகுலரான பணி நியமனங்கள் நட... மேலும் பார்க்க

வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 'இல்லை' சம்பளதாரர்களே! மாற்று என்ன?

வருகிற ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து புதிய வருமான வரிச் சட்டம் அமலாக உள்ளது. இதனால், வருமான வரிப் படிவத்தில் இருந்து வருமான வரிக் கணக்குத் தாக்கல் வரை... இனி பல புதுப்புது மாற்றங்களைச் சந்திக்க உள்ளோம்... மேலும் பார்க்க