Lucky The Superstar Review: கலகல வசனம் பேசும் நாய்கள்; படத்தின் பரீட்சார்த்த முய...
தாய்மொழி தினம்: "வநக்கம் டமில் மக்களே!" - அரசியல் மேடைகளில் அரங்கேறும் 'மொழியியல்' கொலைகள்!
இன்று பிப்.21 - சர்வதேச தாய்மொழி தினம்.
மொழியின் சிறப்பைப் போற்றுவதற்கான நாள். ஆனால், தேர்தல் காலம் வந்துவிட்டால் போதும், நம் அரசியல்வாதிகள் மொழியை வைத்து நடத்தும் வித்தைகளைப் பார்த்தால், மொழிப்பற்று உள்ள எவருக்கும் ரத்தக் கண்ணீர் வந்துவிடும்.
ஓட்டுக்காக வேற்று மொழிகளைத் தப்புத் தப்பாக உச்சரிப்பது, திருக்குறளைத் 'திருத்தி' வாசிப்பது, மொழிபெயர்ப்பு என்ற பெயரில் மேடைகளில் காமெடி செய்வது எனச் சமகால அரசியல் மேடைகள் ஒரு மாபெரும் 'மொழி வதை' முகாமாகவே மாறிவிட்டன.

"வநக்கம் டமில் மக்களே"
தட்டுத்தடுமாறும் டெலிப்ராம்ப்டர் தலைவர்கள் தேர்தல் வந்துவிட்டால், பல தேசியத் தலைவர்களுக்குத் திடீரெனத் தமிழ் மீது தீராத காதல் வந்துவிடும். விமானத்தில் வரும்போதே, ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ தமிழை 'transliterate' செய்து பேப்பரில் எழுதிக்கொண்டு வருவார்கள். அல்லது எதிரே இருக்கும் 'டெலிப்ராம்ப்டர்' (Teleprompter) திரையைப் பார்த்து வாசிப்பார்கள்.
தமிழ் என்பதை டமில் என்றும், கழகம் என்பதை கலகம் என்றும் உச்சரிக்கும்போதே கூட்டத்தில் உள்ளவர்களுக்கு பாதி உயிர் போய்விடும். உள்ளூர் வட்டார வழக்குகளைப் பயன்படுத்த நினைத்து, "எப்புடி இருக்கீங்க?" என்று கேட்பதற்குப் பதிலாக, ஏதோ ரோபோ பேசுவது போல் "என் அன்பார்ந்த... தமிழ்... நெஞ்சங்களே..." என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் நடுவில் ஒரு மைல் இடைவெளி விட்டு அவர்கள் படும் பாடு இருக்கிறதே... அடடா!
திருக்குறள் பாவம்
தமிழ்நாட்டில் ஓட்டு கேட்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு திருக்குறளாவது மேடையில் சொல்ல வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆனால், இங்குதான் மிகப்பெரிய ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. முதல் அடியை ஒரு குறளில் இருந்தும், இரண்டாவது அடியை சம்பந்தமே இல்லாத வேறொரு குறளில் இருந்தும் எடுத்து ரீமிக்ஸ் செய்வார்கள்.
சில உள்ளூர் அரசியல்வாதிகள் குறளை சரியாகச் சொல்லிவிடுவார்கள். ஆனால், அதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் இருக்கிறதே! "அதாவது வள்ளுவர் என்ன சொல்றாருன்னா..." என்று ஆரம்பித்து, கட்சித் தலைமையைப் புகழ்வதற்கும், எதிர்க்கட்சியைத் திட்டுவதற்கும் திருக்குறளை வளைத்து நெளித்து முறுக்குவார்கள். இதைக் கேட்கும்போதெல்லாம், கன்னியாகுமரியில் இருக்கும் 133 அடி வள்ளுவர் சிலை, கடலுக்குள் குதித்துவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குக் கொடூரமாக இருக்கும்.

மொழிபெயர்ப்பாளர்களின் கிரியேட்டிவிட்டி
சமகால அரசியலில் மிகவும் ரசிக்கக்கூடிய ஒரு விஷயம், மேடை மொழிபெயர்ப்புகள்தான். தேசியத் தலைவர் ஒன்று பேச, உள்ளூர் மொழிபெயர்ப்பாளர் முற்றிலும் சம்பந்தமில்லாமல் இன்னொன்றை மொழிபெயர்த்துத் தள்ளுவார். தலைவர் மைக் வேலை செய்கிறதா என்று பார்க்க "Hello, Check" என்பார். நம்மவர் உடனே, "இந்தியா எங்களை உற்று நோக்குகிறது" என்று மொழிபெயர்ப்பார்.
சில நேரங்களில் தலைவரின் ஆங்கிலமோ, இந்தியோ மொழிபெயர்ப்பாளருக்குப் புரியாது. உடனே அவர் மனம் தளராமல், தலைவர் பேசுவதை அப்படியே நிறுத்திவிட்டு, தமக்குத் தெரிந்த கட்சிப் பிரசாரத்தை எல்லாம் "தலைவர் சொல்கிறார்..." என்ற பெயரில் அடித்து விடுவார். தலைவர் உணர்ச்சிவசப்பட்டு கை நீட்டிப் பேச, மொழிபெயர்ப்பாளரோ செத்த வீட்டில் இரங்கல் உரை வாசிப்பது போல் பேசுவதும் அரங்கேறும்.
பாரதியாரா.... அல்லதுபாகுபலியா?
இலக்கியம் பேசுகிறேன் பேர்வழி என்று சில மேடைப் பேச்சாளர்கள் செய்யும் அலப்பறைகள் தனிரகம். சங்க இலக்கியப் பாடல்களை சினிமா பாட்டு மெட்டில் பாடுவது. சினிமா வசனங்களை எல்லாம் "அன்றே பாரதியார் பாடினார்", ``பாகுபலியில் வந்தது,’’ "புறநானூறு சொல்கிறது" என்று அடித்து விடுவது. எதுகை மோனைக்காக, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவிட்டு, "இதுதான் சிலப்பதிகாரத்தின் சாரம்" என்று சாமர்த்தியமாக முடிப்பது.

ஆக அரசியல்வாதிகளே... ஒரு மொழியை பற்றுடன் கற்றுக்கொண்டு அரைகுறையாகப் பேசுவது வேறு, ஓட்டுக்காக அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, 'குண்டக்க மண்டக்க' என்று பேசி மொழியைக் கொலை செய்வதுதான் கூடாது. ஒரு மொழியை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து சிதைக்காமல் இருங்கள் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்வதைத் தவிர இந்த நாளில் நமக்கு வேறு வழியில்லை.













