செய்திகள் :

Lucky The Superstar Review: கலகல வசனம் பேசும் நாய்கள்; படத்தின் பரீட்சார்த்த முயற்சி கைகூடுகிறதா?

post image

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் தேங்காய் ஸ்ரீனிவாசன் (சுப்பு பஞ்சு) மனைவி (தேவதர்ஷினி), குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

இவருடைய குழந்தை அம்மு (மேக்னா சுமேஷ்) ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பிடித்த விஷயங்களுடன் நெருங்கி வளர்வதே அக்குழந்தைக்கான மருந்து என மருத்துவர்கள் கூறிவிட, மாமா லக்ஷ்மணன் (ஜி.வி. பிரகாஷ்) அவரைப் பாசமாகக் கவனித்துக் கொள்கிறார். 

ஒரு நாள் அவருக்கென லக்ஷ்மணன் ஒரு நாய்க்குட்டியையும் வீட்டிற்குக் கொண்டு வருகிறார். அதனுடன் மிகவும் இணக்கமாகிறார் அம்மு. ஆனால், திடீரென ஒரு நாள் அந்த நாயைச் சிலர் கடத்திச் சென்று விடுகிறார்கள்.

Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்
Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்

பெரும் அற்புதங்களை நிகழ்த்தும் அந்த 'லக்கி' நாய்க்குட்டி, பலரின் கைகளுக்கும் செல்கிறது. இடையே லக்கியின் தாய் நாயும் குட்டியைத் தேடி அலைகிறது. மற்றொரு பக்கம், நாய் காணாமல் போனதால் மிகவும் வருத்த நிலையில் இருக்கிறார் அம்மு. அம்முவின் சந்தோஷத்திற்காக அந்த நாய்க்குட்டியை மாமா மீட்டுக்கொண்டு வரும் பாசப் போராட்டமே இந்த 'லக்கி தி சூப்பர்ஸ்டார்'.

சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு பரிச்சயமான ஜி.வி.பிரகாஷே வந்து போகிறார். ஓரிரு இடங்களில் கட்டுப்பாட்டை மீறி அவிழ்த்துக் கொண்டு ஓடும் செயற்கைத்தனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

நாயகி அனஸ்வரா ராஜனுக்கு நடிப்பில் குறிப்பிடும்படியான வேலை தரப்படாததால், நம் மனதில் இடம் பிடிக்காமலேயே தப்பி ஓடிவிடுகிறார். சுப்பு பஞ்சு அவருக்கெனத் தைக்கப்பட்ட காமெடி அளவுச்சட்டையை அணிந்திருக்கிறார். ஆனால், சட்டையில் ஜொலிப்பு இல்லை!

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை தேவதர்ஷினி பொறுப்பாகக் கரைசேர்க்க, குழந்தை நட்சத்திரம் மேக்னா சுமேஷும் நடிப்பில் நல்லதொரு பங்களிப்பைத் தந்திருக்கிறார். 

Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்
Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்

மேலும், டேனியல் ஆனி போப், ஆடுகளம் நரேன், இளங்கோ குமரவேல், மதுசூதன் ராவ், நமோ நாராயணா ஆகியோருக்கு ஓரிரு காமெடிகளை நிகழ்த்தும் வேலை மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்களைத் தாண்டி நாய்களுக்குப் பின்னணி குரல் தந்திருக்கும் கோவை சரளா, ‘மொட்டை’ ராஜேந்திரன், தம்பி ராமையா ஆகியோரின் பணி காமெடி என்றாலும் சோதிக்கவே செய்திருக்கிறது.

UK செந்தில்குமார் கேமரா 'டீசன்ட்' சொல்ல வைத்தாலும், இக்காமெடி படைப்பிற்கேற்ற கலர்ஃபுல் டோன் ஒளிப்பதிவில் இல்லாமல் போயிருக்கிறது.

ஓர் இடத்திற்குள்ளேயே மீண்டும் மீண்டும் 'ரிங்கா ரிங்கா ரோஸஸ்' விளையாடும் காட்சிகளைக் கூர்மைப்படுத்தாமல் அப்படியே படத்திற்குள் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர்.

சீரான டி.ஐ. கலரிங் இல்லாததும் படத்தின் விஷுவல்களை 'டல்'லாக்கியிருக்கிறது. பாடல் இசையில் ஹேஷம் அப்துல் வஹாப்பும், பின்னணி இசையில் நவ்நீத் சுந்தரும் இந்த டிராமாவிற்குத் தேவையான டச் தராதது மைனஸ்.

Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்
Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்

ஆங்கிலப் படங்களைப் போல மிருகங்களுக்கு வாயசைவுடன் டப்பிங் செய்திருப்பது கிராபிக்ஸ் ரீதியாக ஓகே என்றாலும், சில காட்சிகளில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங்!

லக்கி என்ற குட்டி நாயுடன் நெருக்கமாகும் குழந்தை, பெயரைப் போலவே அந்த நாயும் லக்கி என அதனைப் பலரும் சொந்தம் கொண்டாடுவது, அரவணைப்பிலிருந்து நாய் காணாமல் போனதால் கவலை கொள்ளும் அம்மா நாய் எனச் சுவாரஸ்யமான முடிச்சுகளுடனே படத்தைத் தொடங்கியிருக்கிறார் இயக்குநர் உதய் மகேஷ்.

நாய்களுக்கு குரல் கொடுத்து கதாபாத்திரங்களாகத் திரைக்கதைக்குள் கொண்டு வரும் ஐடியா பழசு என்றாலும் அதற்கான அனிமேஷனுக்கு மெனக்கெட்டதற்குப் பாரட்டுகள். ஆனால், அந்தப் பின்னணி குரல்கள் நிகழ்த்தும் காமெடி வசனங்கள் ரொம்ப சுமார் என்பதைத் தாண்டி அதிலும் உருவக் கேலிகளைச் சேர்த்திருப்பது மிகத் தவறு ப்ரோ! 

'லக்கி'யான நாயால் நல்லது நடக்க, அதற்காக அனைவரும் அதை வைத்துக்கொள்ளத் துடிக்க... இது ஒரு சிறுவர் சினிமா என்று நாம் நம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டாலும் கதாபாத்திர வடிவமைப்பில் அழுத்தமில்லாதது, நம்பகத்தன்மையற்ற வகையில் காட்சிகளை அமைத்திருப்பது ஏமாற்றமே! அதுவும் மாநிலத்தின் முதல்வரை, கவுன்சிலர் ரேஞ்ச் கெடுபிடிகளுடன் காட்டியதெல்லாம் லாஜிக்கே இல்லை பாஸ். 

Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்
Lucky The Superstar Review |லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்

அதுவும் நாயகன் நாயை மீட்டுக்கொண்டு வரும் படலத்தில் மீண்டும் மீண்டும் ஒரு வட்ட வடிவத்திற்குள்ளாகவே கதை வாக்கிங் செல்வது நம்மை அதீத சோர்வாக்கி பூஸ்ட் கேட்க வைக்கிறது!

தொடக்கப் புள்ளியைச் சுவாரஸ்யமாகப் போடப்பட்டிருந்தாலும், சிறுவர் சினிமாவுக்குத் தேவையான அம்சங்களை லாகவமாகப் பிடிக்கத் தவறியதால், சுமாரான புள்ளிக் கோலமாகவே முடிந்திருக்கிறது இந்த 'லக்கி தி சூப்பர் ஸ்டார்'.

`முத்தமழை இங்கு கொட்டி தீராதோ'..! சென்சேஷனல் ஹிட் பாடல் உருவானது எப்படி? | வரித்துணையே 03

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

`முதல்வர் கலந்துகிடுவார்னு தெரிஞ்சிருந்தா கல்யாணத்தை பெரிசா பண்ணியிருப்பேன்!' - நடிகர் டெலிபோன் ராஜ்

சென்னையில் நேற்று நடந்த நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தன் திருமணத்தில் சினிமா, டிவி பிரபலங்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொள்வாதாக இருந்ததாம். ஆனால் கடை... மேலும் பார்க்க

KH x RK Update: விரைவில் ஒரு Glimpse Video; நெல்சன் க்ளிக் ஆக இதான் காரணம்! ஷூட்டிங் எப்போது?

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்களான கமல்ஹாசன் - ரஜினிகாந்த் 47 வருடங்களுக்குப் பிறகு ரீயூனியன் ஆகும் 'KH x RK' படத்தின் புரொமோ வீடியோ இன்று வைரலாகியுள்ளது.நெல்சன் இயக்கவிருக்கும் இந்தப் படத்திற்கு ர... மேலும் பார்க்க

Chiyaan Vikram: "சில நேரங்களில் மௌனம்..." - அடுத்தடுத்த 4 படங்கள்; அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு செய்திருப்பவர் நடிகர் சியான் விக்ரம். நடிப்புக்காக உடலை வருத்திக்கொண்டு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுப்பதற்கு இவர் ஒரு உதாரணம் என ரசிக... மேலும் பார்க்க

`கேக்குறாருல சொல்லுங்க ஜி... யாரு ஹீரோ?' - வெளியான ரஜினி கமல் படத்தின் ப்ரோமோ! | KH x RK

ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் ப்ரோமோ விடியோ பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ராஜீவ் மேனன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, பட... மேலும் பார்க்க

KH x RK: `அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி' - ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

தென்னிந்திய திரை ஆளுமைகளில் தங்களுக்கென தனித் தனிப்பாதைகளை உருவாக்கி பயணித்த நடிகர் ரஜினியும் - நடிகர் கமலும் தவிர்க்கமுடியாதவர்கள். கடந்த 47 வருடங்களுக்கு முன்பு கே. பாலசந்தர் இயக்கிய 'தில்லு முல்லு'... மேலும் பார்க்க