உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரம...
Others Review: திருநர் சமூகத்தினரைப் பொறுப்புணர்வுடன் காட்சிப்படுத்த வேண்டாமா? அதர்ஸ் அரசியல் சரியா?
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் சாலையில் திட்டமிடப்பட்ட கொள்ளை முயற்சி, எதிர்பாராத விதமாகக் கோரமான வேன் விபத்தாக முடிகிறது. வேனிலிருந்த நான்கு பேர் உயிரிழக்கின்றனர். இந்த வழக்கை உதவி ஆணையர் மாதவ் (ஆதித்யா மாதவன்) விசாரிக்கத் தொடங்குகிறார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கு இல்லை எனவும், இறந்தவர்களில் மூவர் பார்வையற்ற பெண்கள் எனவும், அவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் குழந்தை பெற முயலும் மருத்துவமனைகளில் சதி நடப்பதாகவும் காட்டப்படுகிறது. இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் குற்றம் என்ன என்பதற்கு விடை காண்பதே ‘அதர்ஸ்’ படத்தின் கதை.
போலீஸ்காரராக விசாரணைக் காட்சிகளில் உறுதி, மிகை நடிப்பில்லாத உடல்மொழி என பாஸாகிறார் அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன். குறைந்த இடத்தில் வந்தாலும் தனக்கான பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் நாயகி கௌரி கிஷன்.
முக்கியமான கதாபாத்திரத்தில் சுமேஷ் மூர் மீமிகை நடிப்பை அள்ளித் தெளித்திருக்கிறார். அப்பாவி போலத் தோன்றும் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை அந்த மீட்டருக்கு அதிகமான நடிப்பு குறையவே இல்லை. இவர்கள் தவிர ஹரீஷ் பேரடி, நண்டு ஜெகன், அஞ்சு குரியன் ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இரவு நேரக் காட்சிகளில் சிறப்பான ஒளியுணர்வுடன் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறார். ஆனால் அறைக்குள்ளே கேமரா கோணங்கள் நுழைய, கலை இயக்கத்தில் இருக்கும் குளறுபடிகள் செயற்கையான உணர்வையே கொடுக்கின்றன.
பிளாஷ்பேக்கில் பெண்ணாக வரும் வேதா கதாபாத்திரத்தின் மேக்கப், வையாபுரியின் கோட் சூட் என ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்புக் குழு பல இடங்களில் சறுக்கியிருக்கிறது.
இயக்குநர் அபின் ஹரிஹரனின் இயக்கம், பல இடங்களில் சுமாரான திரைமொழியையே கொண்டிருக்கிறது. பின்னணி இசையைப் பொறுத்தவரை ஜிப்ரான், 'ராட்சசன்' பாணியிலான மிரட்டலான பாணியைத் தொடர்கிறார். ஆனால் பாடல்கள் மனதில் பதியவில்லை.
படத்தொகுப்பாளர் ராமர் முதல் பாதியில் வேகமாகக் காட்சிகளை நகர்த்தி த்ரில்லர் பாணியைத் தக்க வைக்க முயல்கிறார். இருப்பினும் இரண்டாம் பாதியின் அவரது கத்திரியையே குழம்பிப் போக வைத்திருக்கிறது திரைக்கதை. அதுவும் அந்தக் காதல் பாடலெல்லாம் அநாவசியம் சாரே!
பொதுவாக த்ரில்லர் படங்களில் நாம் ஒன்று நினைக்க, அது அப்படி கிடையாது என்று மற்றொரு கணிக்க முடியாத விஷயத்தை அதிர்ச்சி வைத்தியமாகச் சேர்ப்பது வழக்கம். அந்த பார்முலா வெற்றியும் அடைந்திருக்கிறது. ஆனால் இங்கே இயக்குநர் அப்படியான ‘ஷாக் வேல்யூ’வை மட்டுமே நம்பி, திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்.

சினிமா, சமூகத்தில் கருத்து வடிவமைப்பை உருவாக்கும் செல்வாக்கு மிகுந்த கருவி; அதைப் பொறுப்புடன் கையாளாமல் அபத்தங்களுக்கு மேல் அபத்தம் சேர்த்திருக்கிறது திரைக்கதை.
படம் முழுவதும் “அவர்களைப் புரிந்துகொள்ளுங்கள்; சமூகம் அநீதி செய்தது” என்ற வசனங்களை இடைச்செருகி, திருநர் சமூகத்தின் துயரத்தை வெளிப்படுத்துவது போலத் தோன்றினாலும், அதே வலியை அச்சாணியாகக் கொண்டு ஆதரவற்ற பார்வையற்ற பெண்களை திருநம்பி கொல்வது போலக் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவர் இன்னொரு பலவீனமானவரைக் கொல்கிறார்; அதை நியாயப்படுத்துகிறார் என்று வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அடிப்படை நெறியிலேயே தவறல்லவா?! மேலும் விளிம்புநிலை சமூக மக்களை வெறும் ‘ஷாக் வேல்யூ’வுக்காக, அதிர்ச்சியூட்டும் விதமாக மட்டும் கதைக்களத்தில் பயன்படுத்திய விதம் கண்டிக்கத்தக்கது.
ஒடுக்குமுறையையும் சமூக வன்முறையையும் சந்திக்கும் திருநர் போராட்டத்தைப் பதிவு செய்யாமல், அது குறித்து 'குற்றவியல் சித்திரம்' உருவாக்கும் அணுகுமுறை, அவர்கள் மீது அனுதாபத்தை உருவாக்காமல் ஆபத்தான பார்வையையே உருவாக்கும்!
மேலும் திரைக்கதையில் பாலின அடையாளம், கருத்தரிப்பு தொழில்நுட்பம், மருத்துவ செயல்முறைகள் ஆகியவை சுவாரஸ்யத்துக்காகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கரு முட்டைகளை வைத்து intersex குழந்தைகளை உருவாக்க “சதி” செய்வது போலக் காட்டுவது, அறிவியல் மற்றும் சமூக ரீதியாக மிகுந்த தவறான, பயமுறுத்தும் செயலாகும்.

திரையில் காட்டப்படும் இத்தகைய திரிப்புகள், உண்மையான மருத்துவ செயல்முறைகளின் மேலுள்ள நம்பிக்கையைப் பாதித்து, சதிகோட்பாடுகளுக்கு வழிவகுக்கும். சமூகத்தின் உண்மையான பிரச்னைகள், மருத்துவ அணுகல், கல்வி சமத்துவம், சட்டப் பாதுகாப்பு போன்ற விஷயங்களைக் கூடுதல் பொறுப்புடன் கையாளுவது ஒரு படைப்பாளியின் கடமை. இவை அனைத்தையுமே காற்றில் பறக்கவிட்டிருக்கிறது இந்த 'அதர்ஸ்'.
மொத்தத்தில் அதிர்ச்சி மதிப்பீடுகளுக்காக மட்டுமே அமைக்கப்பட்ட திரைக்கதை, சுமாரான தொழில்நுட்பம் ஆகியவற்றால் உருவாகியிருக்கும் இந்தப் படம், நம் கண்டிப்பைச் சம்பாதிக்கும் படைப்பு!










