``விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் UPI கட்டணம்" - நடைமுறைச் சிக்கல்கள் என்ன?| ஓர...
Paris Cafe Review: ஆணவக்கொலை பற்றிப் பேசும் கஃபே; ஆனால் இந்த அதீத நாடகத்தன்மை தேவைதானா?
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வரும் ஒலிக்கு (அர்ச்சனா) ஓர் உயரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.
இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள அப்பா கௌதம் (குரு சோமசுந்தரம்), அம்மா தாரா (அனுமோல்), காதலன் கவின் (விஜய் விஷ்வா) என அனைவரையும் தொலைபேசியில் அழைக்கிறார்.
ஆனால், அப்பா - அம்மா இருவருமே அவருடைய தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.

அடுத்த நாள் காலையில் கவினைச் சந்தித்துப் பேசுகையில், அப்பாவிடமிருந்து மறு அழைப்பு வருகிறது. அப்போதுதான் கருத்து வேறுபாடு காரணமாக அப்பாவும், அம்மாவும் பிரிந்துவிட்ட தகவல் ஒலிக்குத் தெரிய வருகிறது.
இதனால், கவலைகொள்ளும் அவர், தாய் தந்தையை மீண்டும் சேர்த்து வைக்க இந்தியாவுக்கு வருகிறார். கௌதமுக்கும், தாராவுக்கும் இடையில் என்ன பிரச்னை, அதை மகளால் சரி செய்ய முடிந்ததா என்பதைச் சொல்கிறது இயக்குநர் சாரஜ் சீலனின் 'பாரிஸ் கஃபே'.
ரியாக்ஷன்களை வெளிப்படுத்தும் இடத்தில் தன்னுடைய ஸ்டைல் நடிப்பைக் கச்சிதமாகத் திரையில் கொண்டு வந்துவிடுகிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.
ஆனால், காட்சிகள் பெரும்பாலானவை செயற்கையாக இருப்பதால் இவருடைய நடிப்பும் சில சமயங்களில் நாடகத்தன்மையாகத் தெரிகிறது.

எப்போதுமே அறத்தின் பக்கம் நிற்கும் கதாபாத்திரத்தில் வரும் அனுமோல், தரப்பட்ட வேலையைக் கவனமாகச் செய்திருக்கிறார்.
மகளாக வரும் அர்ச்சனா நடிப்பில் நிறைய இடங்களில் தேவையானதையும், சில இடங்களில் மிகை நடிப்பையும் கலந்து கட்டித் தந்திருக்கிறார்.
இவர்களைத் தாண்டி, மற்ற கதாபாத்திரங்களில் வரும் விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய் ஆகியோரின் கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கும் அளவிற்கு எழுதப்படவில்லை.
இந்தக் கதை கோரும் விஷயங்களைக் குறைவில்லாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி. ஆனால், சில இடங்களில் 'கலர் கலர்' லைட்டிங்குகள் நல்ல விஷுவல்களையும் சீர்குலைக்கின்றன.
ஆரம்பம் முதல் சோதிக்கும் ரூட்டிலேயே பயணிக்கும் படத்துக்கு 'பாரிஸ் கஃபே'வில் காபி வாங்கிக் கொடுத்து உசுப்பாமல் விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் வி.ஜே.சபு ஜோசப்.

பாடல்களில் நம் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு எவ்வித சுறுசுறுப்பும் இல்லை. அதுபோல, எமோஷன்ஸ், பரபரக்கும் திருப்பம் என எங்கும் பின்னணி இசை, காட்சிகளின் வீரியத்தை ஏற்றாமல் விட்டிருக்கிறது.
கிரீன் மேட் உதவி மூலம் போஸ்டன் நகரத்தை படத்திற்குள் கொண்டு வந்த கிராபிக்ஸில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இப்படியானவை படத்தின் மேக்கிங் தரத்தையும் 'டிம்' அடிக்க வைக்கின்றன.
சூழலினால் தவறு செய்யும் கணவர், அதனால் அவரைப் பிரியும் மனைவி, இவர்களைச் சேர்த்து வைக்கும் மகள், பிறகு குடும்பமாகச் சேர்ந்து கணவர் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு எப்படி நீதி பெறுகிறார்கள் என 'பாரிஸ் கஃபே'வின் ஸ்டியரிங்கைத் திருப்பியிருக்கிறார் இயக்குநர்.
எப்போதும் அறத்தையே பின்பற்ற நினைக்கும் மனைவி, ஆனால், குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு அந்த நேரத்தில் தவறு செய்யும் கணவர், இதனால் இவர்களுக்குள் உண்டாகும் மோதல் என்கிற விதத்தில் ஆரம்பக் கதை 'லைக்' செய்ய வைக்கிறது.
ஆனால், அக்கதையைத் துளியும் பரபரப்பும், சுவாரஸ்யமும் இல்லாமல் திரைக்கதையாக விரித்திருக்கிறார் இயக்குநர்.

இடையிடையே கைகொடுக்காத ஒன்லைனர்கள், நாடகத்தன்மையோடு அரங்கேற்றப்பட்ட காட்சிகள், செல்லுபடியாகாத எமோஷன் எனப் பல விஷயங்கள், சோர்வடைந்த படத்தை மேலும் தாலாட்டுகின்றன. ஆணவக்கொலை பற்றிப் பேச நினைத்த நோக்கத்திற்கு மட்டும் பாராட்டுகள்!
மேக்கிங், திரைக்கதை என இரண்டிலும் சோர்வூட்டும் இந்த 'பாரிஸ் கஃபே' நம் வீக்கெண்ட் டைம்பாஸாக மாறவில்லை.














