CPRF பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சி முடித்த காவலர்களின் அணிவகுப்பு விழா | ...
Rain: கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்துவிட்டதாகவும், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (புயல் சின்னம்), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, சனிக்கிழமை காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்த புயல் சின்னம் சனிக்கழமை பிற்பகலில் வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே முல்லைத் தீவுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடந்தது. இதுதொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும்.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஜன. 12 முதல் ஜன. 16-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ஜன. 11,12 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















