Cloudflare என்பது என்ன? X, Chatgpt, Gemini முடக்கத்துக்கு இதுதான் காரணமா?
SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற வேண்டும். இந்த விண்ணப்பங்களை நிரப்புவதில் மக்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன.

மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களுக்கு விடை கொடுக்க இன்று முதல் சென்னை மாவட்டத்தில் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த வாக்காளர் உதவி மையங்கள் முதல் நாளிலேயே எந்தத் தெளிவும் இல்லாமல் முறையான வசதிகளும் இல்லாமல் இயங்கி மக்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.
'கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், 18.11.2025 முதல் 25.11.2025 வரை எட்டு நாட்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் செயல்பட உள்ளன' என சென்னை மாநகராட்சி ஆணையரும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் நேற்று அறிவித்திருந்தார்.

தேர்தல் அலுவலரின் அறிவிப்பின்படி இயங்க தொடங்கியிருக்கும் சில உதவி மையங்களுக்கு இன்று நேரில் சென்றோம். மக்களுக்கு ஏற்படும் குழப்பங்களையும் சந்தேகங்களையும் தீர்க்கத்தான் இந்த உதவி மையங்கள். ஆனால், இந்த உதவி மையங்களுக்கு வரும் மக்கள் மேலும் குழப்பமடைந்து அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக, அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்களை அறியவே மக்கள் அதிகமாகச் சிரமப்படுகின்றனர்.
ஐஸ் ஹவுஸின் என்.கே.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கும் உதவி மையத்தில் சங்கரன் நாயர் என்பவரைச் சந்தித்தோம். அந்த மையத்திலிருந்த B.L.O அதிகாரியிடம் நீண்ட நேரமாகச் சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் அடித்து அடித்து எழுதப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும் வைத்திருந்தார். அவருக்கு என்ன சிரமம் என்பதைக் கேட்டோம்.

'எனக்கு 14 வயசு இருக்கும்போது 1964-ல நாங்க குடும்பமா சென்னைக்கு வந்துட்டோம். 1977 எலெக்சன்ல இருந்து 40 வருசத்துக்கு மேல ஓட்டு போட்டுட்டு இருக்கேன். இப்போ புதுசா எதோ பார்ம் கொடுக்குறாங்க. வீட்டுக்கு வந்துதான் கொடுத்தாங்க. அதுல 2005 எலெக்சன்ல என்னோட பேரு வாக்காளர் பட்டியல்ல எந்தப் பாகத்துல எந்த வரிசையில இருந்துச்சுன்னு கேட்குறாங்க.
75 வயசாகுது எனக்கு எப்படி அந்த விவரமெல்லாம் தெரியும்? 2005 சமயத்துல பெசண்ட் ரோட்லதான் இருந்தேன். இதே என்.டி.கே ஸ்கூல்லதான் என் மனைவி, மாமியாரோட ஓட்டு போட்டேன். சரி, அதே என்.டி.கே ஸ்கூல் உதவி மையத்துலயே வந்து கேட்போம்.
அவங்க நமக்குச் சரியான தகவலைச் சொல்லுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, அந்த 2005 வாக்காளர் பட்டியல்ல எங்க மூணு பேர் பெயரையும் தேடி பார்த்துட்டு இல்லைங்குறாங்க. நிரப்பாம கொடுத்துட்டு போங்க பார்த்துக்கலாங்றாங்க.

இவங்க பென்ச்சு போட்டு உட்காந்திருக்குறதுக்கு பக்கத்து க்ளாஸ்லதான் இத்தனை வருசமா ஓட்டு போட்டிருக்கேன். பேரு இல்லைன்னு சொன்னா நான் எங்க போறது? வயசு 75 ஆயிடுச்சு. இன்னும் எத்தனை எலெக்சனைப் பாத்துட போறோம். வந்தாலும் சரி போனால சரி...' எனப் புலம்பிவிட்டு சென்றார்.
உதவி மையத்தில் நின்றபடியே விண்ணப்பப்படிவத்தில் உள்ள B.L.O எண்ணைப் பலமுறை தொடர்பு கொண்டிருந்தார் G.குமார் என்பவர்.
'2002 அல்லது 2005 சமயத்துல உள்ள வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கேட்குறாங்க. நாம ஏழைப்பட்டவங்க. மாசத்துக்கு ஒரு வாடகை வீடுன்னு மாறுற நிலைமையில இருக்கோம். நாம எப்படி 2005 சமயத்துல எந்தத் தொகுதியில எங்க ஓட்டு போட்டோம்னு நியாபகம் வச்சுக்குறது? இங்க வந்து கேட்டா, 'உங்க பேர் இங்கயே இல்ல.

நீங்க 2005ல எங்க இருந்திங்களோ அங்க போயி செக் பண்ணி எழுதுங்க'ன்னு சொல்றாங்க. 2005 இல் வில்லிவாக்கத்துல இருந்தேன்னு நினைக்குறேன். அங்க போய் எங்கன்னு தேடுவேன்? B.L.Oக்கிட்ட போன் பண்ணி கேட்டா, நாளைக்கு உங்க ஏரியாவுக்கு வருவோம். வீட்டுல இருங்கன்னு சொல்றாங்க. நான் MTC ஊழியர். இன்னைக்கு எனக்கு வார விடுமுறை. நாளைக்கு என் பொழப்பைக் கெடுத்து லீவு போட சொல்றீங்களா?" என்றார் ஆதங்கத்தோடு.
உதவி மையங்கள் கணினி வசதியோடு இருக்கும் என்றும் மக்களுக்கு கணினி வழியே அந்த 2005 வாக்காளர் பட்டியல் தரவுகளை எடுத்துக் கொடுப்போம் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
ஆனால், எந்த மையத்திலும் கணினி வசதி செய்யப்படவே இல்லை. கணினி வசதி இல்லாமல் இந்த உதவி மையங்கள் இயங்குவதால் பலரும் அலைக்கழிக்கப்படுகின்றனர். என்.டி.கே பள்ளி உதவி மையத்தில் கணினி வசதி இருந்திருந்தால், குமாரை வில்லிவாக்கத்துக்குச் சென்று பாருங்கள் எனக் கூறும் நிலையே இருக்காது.

தேர்தல் ஆணைய வெப்சைட்டில் குமாரின் விவரங்களைப் போட்டு அந்தத் தகவல்களை எடுத்துவிடலாம். சென்னையில் குமாரைப் போன்றவர்கள்தான் அதிகம். நடுத்தர வர்க்கத்தினராக வாழ்விடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இன்னும் பலர் 2005 இல் வெளி மாவட்டங்களில் வாக்களித்துவிட்டு அதன்பின் பணிக்காக சென்னையில் குடியேறியிருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கும் உதவி மையங்களில் கணினி இருந்தால் மட்டுமே 2005 ஆம் ஆண்டுக்கான தகவல்களை எடுத்துக் கொடுக்க முடியும். 2005 இல் திருநெல்வேலியில் வாக்களித்துவிட்டு அதன்பிறகு சென்னைக்குக் குடியேறியவரை, இந்த ஒரு தகவலுக்காக மீண்டும் திருநெல்வேலி சென்று வாருங்கள் எனச் சொல்ல முடியுமா? இந்த அடிப்படையான வசதி கூட இல்லாமல் உதவி மையங்கள் இயங்க தொடங்கியிருப்பது மேலும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி, அலைக்கழிக்கவே செய்கிறது.
மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று இந்த உதவி மையங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார். இன்று காலை முதல் உதவி மையங்கள் செயல்படுகின்றன. அந்த உதவி மையங்களிலுள்ள B.L.Oக்களுக்கு உதவி மையங்களுக்கெனச் சிறப்பு பயிற்சிகளோ அறிவுரையோ கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
சென்னையின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு உதவி மையத்தில் வாசலில் வாக்காளர் உதவி மையம் என பேனர் தொங்குகிறது. ஆனால், உள்ளே இருக்கும் B.L.O அதிகாரிகள், "உதவி மையமா அப்படியெல்லாம் எதுவும் இல்லையே சார்... நாங்கள் வழக்கமாக வீடு வீடாகச் சென்று செய்யும் பணியை இங்கே உட்காந்து செய்கிறோம்" என்கின்றனர்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையங்கள் இயங்கும் என மாநகராட்சி அறிவித்திருக்கிறது. பணி நாள்கள் என்பதால் பல பேர் பிற்பகலுக்கு மேலும் மாலை வேளையிலுமே மையங்களை நோக்கி வருகின்றனர். ஆனால், சில உதவி மையங்களை ஸ்கூல் பெல் அடித்தவுடனேயே மூடி விடுகிறார்கள்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரனைத் தொடர்புகொண்டு பேசினோம். 2005 இல் வெளி மாவட்டத்தில் வாக்களித்து இப்போது சென்னையில் குடிபெயர்ந்திருப்போருக்கு உதவி மையங்களில் கணினி இல்லாமல் எந்த உதவியும் செய்ய முடியாதே எனக் கேட்டேன்.
"ஓ... அப்படி ஒரு விஷயம் இருக்குல்ல" என ஆச்சர்யமாகக் கேட்டுக் கொண்டவர், "எல்லா உதவி மையங்களிலும் கணினி வைப்பதில் நடைமுறை சிக்கல் இருந்தது. அதனால்தான் கணினி வசதி செய்யவில்லை. நாளை முதல் இணைய வசதியுடன் கூடிய லேப்டாப்களை உதவி மையங்களில் வைக்க பேசிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.
முதலில் அதிகாரிகளுக்கு இருக்கும் குழப்பங்களைக் களைய தேர்தல் ஆணையம் யோசிக்க வேண்டும்.













