Dharman: "'நான் கமல் படம் செய்கிறேன்' என ரஜினி தூங்காமல் வேலை செய்கிறார்" - கமல்...
SpaceX: IPO விலையைவிடக் குறைந்தது... இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?
எதாவது ஒரு நிறுவனம் தனது பங்குகளை ஐ.பி.ஒ மூலம் வெளியிடும்போது பலரும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள். காரணம், ஐ.பி.ஒ வந்தவுடன் அந்தப் பங்கின் விலை சட்டென 30% , 40% உயரும். அப்படி உயர்ந்தால், அந்தப் பங்கினை விற்றுவிட்டு நல்ல லாபம் பார்க்கலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இன்னும் சிலர் வேறு விதமாக ஐ.பி.ஒ பங்குகளை அணுகுவார்கள். அதாவது, ஒரு நிறுவனப் பங்கு ஐ.பி.ஒ வரும்போது அதை வாங்க மாட்டார்கள். ஐ.பி.ஒ வந்தபிறகு அந்தப் பங்கின் விலை எப்படிப் போகிறது என்று பார்ப்பார்கள். அந்தப் பங்கு ஐ.பி.ஒ வந்தபோது விற்கப்பட்ட விலையைவிடக் குறைவான விலைக்கு வரும்போது வாங்கி, அதை நீண்ட காலம் வைத்திருக்க முயற்சி செய்வார்கள்.
இந்த இரண்டு அணுகுமுறையில் இரண்டாவது அணுகுமுறை சரியோ என்று யோசிக்கிற மாதிரியான ஒரு பாடத்தைத் தந்திருக்கிறது அண்மையில் பெரும் பரபரப்புடன் ஐ.பி.ஒ வந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்கு விலை...

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனப் பங்கு ஒன்றின் விலை 160 டாலர் என நிர்ணயமான நிலையில், கடந்த 15-ஆம் தேதி அன்று அமெரிக்கப் பங்குச் சந்தையில் பலத்த எதிர்பார்ப்புடன் 174 டாலர் என்கிற அளவில் வர்த்தகமாகத் தொடங்கியது. அந்தப் பங்கு விலை. இரண்டாம் நாளன்று அதாவது, ஜுன் 16-ம் தேதி அன்று, 218 டாலர் வரை உயர்ந்தது. இரண்டே நாளில் 30% லாபம். இந்த விலை உயர்வைப் பார்த்த பலரும்
இந்தப் பங்கை நாம் தவறவிட்டுவிட்டோமே என்று நினைத்து வாங்க, 30% லாபம் பார்த்தவர்கள் வேறு மாதிரி யோசிக்கத் தொடங்கினார்கள். இப்போதைக்கு இந்த லாபம் போதும் என்று நினைத்தவர்கள், ஸ்பேஸ்எக்ஸ் பங்கை மூன்றாம் நாள் முதல் அதாவது, 17-ஆம் தேதி முதல் விற்கத் தொடங்கினார்கள்.
இதனால் அந்தப் பங்கு விலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்து, ஜூன் 23-ஆம் தேதி அன்று முடிவில் 156 டாலர் என்கிற அளவில் இருக்கிறது.
இனிமேல் இந்தப் பங்கு விலை இன்னும் உயருமா அல்லது இன்னும் இறங்குமா என்பது இனிவரும் நாள்களில்தான் தெரியும். ஆனால், இந்த நிறுவனப் பங்கின் ஐ.பி.ஓ-விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. அது, ஒரு நிறுவனப் பங்கு ஐ.பி.ஒ வரும் சமயத்தில் அந்தப் பங்கினை வாங்க வேண்டுமா என்பதுதான்.

ஒரு நிறுவனப் பங்கு ஐ.பி.ஒ வரும்போது அந்தப் பங்கின் உண்மையான மதிப்பு என்பது பலரும் பல விதமாகப் பேசும் விஷயமாக இருக்கும். ஒரு சிலர், ஒரு நிறுவனப் பங்கின் மதிப்பு மிகப் பிரமாதம். இந்த மதிப்புக்கு இந்த விலையைத் தாராளமாகத் தரலாம் என்பார்கள்.
இன்னும் சிலர், இந்த நிறுவனத்தின் மதிப்பு இவ்வளவுதான். எனவே, இந்த விலை என்பது மிக மிக அதிகம் என்று வாதிடுவார்கள். ஆனால், சாதாரண முதலீட்டாளர் ஒருவருக்கு ஒரு நிறுவனப் பங்கின் மதிப்பைக் குறித்து சரியாக மதிப்பிடத் தெரியாது. எனவே, இந்த நிறுவனப் பங்கு குறித்து பொதுவெளியில் பலரும் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்துத்தான் வாங்கவோ அல்லது வாங்காமல் இருக்கவோ முடிவு செய்கிறார்கள்.
ஒரு நிறுவனப் பங்கை ஐ.பி.ஒ.வில் வாங்குவதா, இல்லையா என்று முதலீட்டாளர்கள் முடிவு செய்ய முடியாத நிலையில் இருக்கும்போது, அந்த நிறுவனப் பங்கைப் பற்றி மிக உயர்வாக எடுத்துச் சொல்லப் பலரும் கிளம்பிவிடுகிறார்கள்.
இதனால் தேவை இல்லாத 'hype' உருவாகிறது. இந்த 'hype'-யைப் பார்த்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் பிற்பாடு அந்தப் பங்கின் விலை குறையும்போது 'அய்யய்யோ, மோசம் போய்விட்டோமே' என்று கவலைப்படத் தொடங்கிவிடுகிறார்கள்.

பொதுவாக, ஒரு நிறுவனமானது ஐ.பி.ஒ மூலம் தனது பங்கை வெளியிடும்போது, அதிக மதிப்பில்தான் வெளியிட நினைக்கும். அப்படி வெளியிட்டால்தான் அந்த நிறுவனத்துக்கு அதிகமான பணம் கிடைக்கும். அதுநாள் வரை அந்தப் பங்குகளை வைத்திருந்தவர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும். ஆனால், அது சரியான மதிப்புதானா, அந்தப் பங்கு விலைக்கு அந்த மதிப்பைத் தருவது சரியா என்கிற குழப்பம் முதலீட்டாளர்களுக்கு இருக்கும் என்பதால், ஐ.பி.ஒ சமயத்தில் அந்தப் பங்கினை வாங்குவதைப் பல சமயங்களில் தவிர்த்துவிடுவது நல்லது.
எந்த நிறுவனப் பங்காக இருந்தாலும் ஐபிஒ வந்தபிறகு அது ஏறி, இறங்கி, கடைசியில் உண்மையான மதிப்பில் வர்த்தகமாகத் தொடங்கும். அந்த விலையில் ஒரு நிறுவனப் பங்கினை முதலீட்டாளர் விரும்பும்பட்சத்தில் தாராளமாக வாங்கலாம். அப்படி இல்லை எனில், விலை இன்னும் குறையட்டும் என்று மேலும் சில நாள்கள் பொறுக்கலாம்.
ஆனால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் இப்படி செய்யாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம், இந்தப் பங்கின் விலை குறுகிய காலத்துக்குள்ளேயே 50%, 100% உயர்ந்துவிடுமோ, ஐ.பி.ஒ.ல் வாங்காமல் விட்டால், இந்த அபரிமிதமான லாபத்தை நாம் இழந்துவிடுவோமோ என்கிற அச்சம்தான். இதனை 'Fear of Missing out' என்பார்கள். அபரிமிதமான லாபத்தைச் சம்பாதிக்கும் வாய்ப்பினை இழந்துவிடுமோ என்று நினைத்து, ஒரு நிறுவனப் பங்கினை அதிக விலை தந்து வாங்குவது சரியல்ல.
ஒரு நிறுவனப் பங்கின் மதிப்பானது வர்த்தகமாகத் தொடங்கிய சில மாதங்களில் தெரிந்துவிடும். அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள், பிற்பாடு விலை ஓரளவுக்கோ அல்லது நல்லது குறைந்தபிறகோ வாங்கினால், அதிகமான நஷ்டத்தையும் தவிர்க்க முடியும்.
நீண்ட காலத்தில் நல்ல லாபத்தையும் சம்பாதிக்க முடியும். எனவே, இனி எந்த ஐ.பி.ஒ வந்தாலும், அந்தச் சமயத்தில் அந்தப் பங்கினை வாங்கித்தான் ஆக வேண்டுமா என்பதை ஒன்றுக்கு 10 முறை யோசித்துப் பார்த்து வாங்குவது சரியான முடிவாக இருக்கும்!
முதலீட்டு ஆலோசனை வேண்டுமா?
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!




















