`தினம் 300 ரூபாய் சேர்ந்தா போதும்; நானும், மனைவியும் சந்தோஷமா இருப்போம்!' - 2 ரூ...
எதிர்காலத்துக்குப் பணத்தை சேர்க்கப் போறீங்களா? - இந்த 5 விஷயங்களை அவசியம் கவனியுங்க பாஸ்.!
நம்முடைய எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்பாக இருக்கட்டும், குழந்தைகள் வளர்ந்து, அவர்களுக்குத் திருமணம் செய்வதாக இருக்கட்டும், உங்களுடைய பணிக் காலம் முடிந்து ஓய்வு பெறும்போது உங்கள் கையில் இருக்கவேண்டிய பணமாகட்டும் அல்லது நீங்கள் ஒரு வீடு கட்டுவதாக இருக்கட்டும், உள்நாட்டிலேயோ அல்லது வெளிநாட்டுக்கோ ஒரு ஜாலி டிரிப் சென்று வருவதாக இருக்கட்டும்; இவற்றுக்கான செலவுகளை செய்வதற்கான பணம் உங்களிடம் இருந்தால், எந்தக் கவலையும் இல்லாமல் அவற்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
ஆனால், இந்த இலக்குகளுக்கான பணத்தை எதில் எப்படி சேர்ப்பது என்பதில் பலருக்கும் பல விதமான குழப்பம். இந்தக் குழப்பத்துக்குத் தெளிவான பதில் இல்லாதபோது, வம்பே வேண்டாம் என்று நினைத்து, காலம் காலமாக எதில் பணத்தை சேர்த்து வருகிறோமோ, அதிலேயே பணம் சேர்க்க ஆரம்பித்துவிடுகிறோம். இதனால் நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான லாபத்தைப் பெறாமலே போகிறோம்!

ஆனால், எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை சேர்க்கும்போது 5 முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனித்து செய்தால், எந்தக் கவலையும் இல்லாமல் நீங்கள் இருப்பதுடன், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய லாபமும் நிறையவே கிடைக்கும்! அந்த 5 விஷயங்கள் என்னென்ன?
1. பாதுகாப்பு (Safety)
எந்த ஒன்றில் நாம் பணத்தை சேமிக்க அல்லது முதலீடு செய்வதாக இருந்தாலும் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். பாதுகாப்பு என்பது நம் பணம் பத்திரமாக நமக்குத் திரும்பக் கிடைப்பதாகும். ஒரே வருஷத்தில் பணம் இரண்டு மடங்காகிவிடும் என்று சொல்லி நாம் ஒரு லட்சம் ரூபாயைப் போடுகிறோம். ஆனால், பணம் வாங்கியவர்கள் ஆறே மாசத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள். லாபம் கிடைக்கவில்லை என்பதோடு, அசல் பணமும் போய்விட்டது. இப்படி இல்லாமல் அசல் பணத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் பத்திரமாக இருப்பதுதான் பாதுகாப்பு. பத்திரமாக பணம் சேர்க்க முதன்மையான சேமிப்புக் கருவியாக இருப்பது, வங்கி பிக்சட் டெபாசிட்...

பாதுகாப்பு என்கிற விஷயம் முதன்மையாகப் பார்க்கப்பட வேண்டியது என்றாலும், இதற்கு நெகட்டிவ் பக்கம் ஒன்றும் உள்ளது. பாதுகாப்பு அதிகம் உள்ள எந்த முதலீடாக இருந்தாலும் சரி, அதன் மூலம் அதிக லாபம் கிடைக்காது. உதாரணமாக, வங்கி எஃப்.டி என்பது பாதுகாப்பானதுதான் என்றாலும், அதில் கிடைக்கும் வட்டி என்பது அதிகபட்சம் 6% - 7% என்கிற அளவில்தான் இருக்கும்.
இந்த வட்டி வருமானத்தை வைத்து எதிர்காலத்தில் ஒருவரால் பெரும் பணம் சேர்க்க முடியாது. எனவே, எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க நினைக்கும்போது, பாதுகாப்பு என்கிற அம்சத்துக்கு முக்கியத்துவம் தரலாமே தவிர, அந்த ஒரு அம்சத்தை மட்டுமே முக்கியமாக நினைத்தால், பெரிய லாபம் எதுவும் கிடைக்காது!
2. உடனே பணமாக்கும் தன்மை (Liquidity)

நீங்கள் எதில் பணத்தைப் போடுவதாக இருந்தாலும், அந்தப் பணத்தை ஒரு சில நாள்களில் திரும்பக் கிடைப்பதுதான் இது. உடனே பணமாக்கும் தன்மை என்பது சிலவற்றில் மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்டவற்றில் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவாக இருக்கும். இன்னும் சிலவற்றில் அதிக லாபம் கிடைக்கும். ஆனால், அவற்றை உடனே பணமாக்க முடியாது. உதாரணமாக, தங்கத்தை சில நாள்களில் விற்று பணமாக்கிவிட முடியும். ஆனால், அப்படி விற்கும்போது விலை உள்பட பல விஷயங்களில் நீங்கள் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், மனையோ அல்லது வீடோ நீங்கள் விற்க நினைத்தால், அதை உடனே விற்றுவிட முடியாது. பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். பங்குகளையோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளையோ பெரும்பாலும் நீங்கள் விற்க நினைக்கும் நேரத்தில் விற்று பணமாக்கிவிட முடியும். ஆனால், முதலீடு செய்த பணம் கொஞ்சம் குறைவதற்கும் வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது! எனவே, நீங்கள் எதில் பணம் போடுவதாக இருந்தாலும், உங்களுக்குப் பணம் தேவைப்படும்பட்சத்தில் அதை விற்றுப் பணமாக்க முடியுமா என்பதையும் அவசியம் பார்க்க வேண்டும்!
3. வருமானம் (Yield)
ஒரு சேமிப்பு அல்லது முதலீட்டின் மூலம் வருமானம் அல்லது விலை உயர்வின் மூலம் கிடைப்பதுதான் லாபம். இந்த லாபம் என்பது குறைவாகக் கிடைக்கும்போது, குறைவான ரிஸ்க்குடனும் அதிகமாகக் கிடைக்கும்போது அதிக ரிஸ்க்குடனும் இருக்கும். உதாரணமாக, வங்கி எஃப்.டி என்பது ரிஸ்க் என்பது மிகவும் குறைவானது. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வருமானமும் மிகக் குறைவாகவே இருக்கும். ஆனால், பங்குகளோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட் என்பவை குறுகிய காலத்தில் ரிஸ்க் கொண்டவையாக இருந்தாலும், நீண்ட காலத்தில் ரிஸ்க் குறைந்து, அதிக லாபம் தர வல்லதாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் அதிகம் லாபம் கிடைக்கும். ஆனால், அதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். தங்கத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும் என்றாலும், அது எளிதில் திருடு போவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, நமக்கு அதிகம் லாபம் கிடைப்பது அவசியம் என்றாலும் அதை மட்டுமே பிரதானமான விஷயமாகப் பார்க்கக் கூடாது!
4. வரி அனுகூலம் (Tax Efficiency)
எந்த ஒன்றில் பணம் போடுவதாக இருந்தாலும், அதன் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு வரி உண்டா, உண்டு எனில் எத்தனை சதவிகிதம் என்பதை எல்லாம் தெரிந்துகொண்டு பணத்தை சேர்க்க வேண்டும். சிலவற்றில் வரி எதுவும் கட்ட வேண்டி இருக்காது. ஆனால், வருமானம் என்பது குறைவாகவே கிடைக்கும். சிலவற்றில் லாபம் அதிகமாக இருக்கும். ஆனால், அதிகமான பணத்தை வரியாகக் கட்டவேண்டி இருக்கும். பி.பி.எஃப்., இன்ஷுரன்ஸுக்கு வரி இல்லை. ஆனால், இவை நீண்ட காலத்துக்கானவை என்பதுடன், குறைந்த அளவு வருமானம் தருபவை. அதிக லாபமும், குறைந்த வரியும் இருக்கும் திட்டத்தில் பணம் போடுவதே புத்திசாலித்தனம்.
5. நெகிழ்வுத்தன்மை (Flexibility)
ஒரு முதலீட்டில் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் அல்லது முடித்துக்கொள்ளலாம்; மேற்கொண்டு பணம் போடலாம்; பகுதி அளவு பணம் எடுக்கலாம் எனப் பல விதமான பாசிட்டிவ் விஷயங்கள் இருப்பதுதான் நெகிழ்வுத்தன்மை. ரியல் எஸ்டேட்டில் பாதுகாப்பு ஓரளவு அதிகம் என்றாலும், அதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும் முடியாது. விற்கவும் முடியாது.
ஆக, இந்த 5 விஷயங்களும் எதில் அதிகமாக இருக்கிறதோ, அதில் உங்கள் பணத்தைப் போட்டால், உங்களால் அதிகமான பணத்தை சேர்க்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை!
முதலீட்டு ஆலோசனை உங்களுக்கு வேண்டுமா?
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டை சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!



















