Super Singer Season12: நடுவர்களாக முன்னாள் நட்சத்திரப் போட்டியாளர்கள்! - வெளியான...
Super Singer Season12: நடுவர்களாக முன்னாள் நட்சத்திரப் போட்டியாளர்கள்! - வெளியானது புரோமோ!
'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியின் 20-வது ஆண்டு சாதனையைக் கொண்டாடும் வகையில், 'சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ்' நிகழ்ச்சியின் பிரமாண்ட அறிமுக ப்ரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பாடகர்களை அறிமுகம் செய்து, திரையிசை உலகிற்குப் பல முன்னணிப் பாடகர்களை வழங்கியிருக்கிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்தப் புதிய சீசனின் மிக முக்கியச் சிறப்பம்சமாக, முந்தைய சீசன்களில் போட்டியாளர்களாகவும் வெற்றியாளர்களாகவும் வலம் வந்த 14 முன்னணிப் பின்னணிப் பாடகர்கள், இன்று நடுவர்களாக அதே மேடையில் சங்கமிக்கின்றனர்.
ஆண் நடுவர்களாக சத்ய பிரகாஷ், நிவாஸ், திவாகர், பிரவீன் சைவி, ஆர்.கே. ஆதித்யா, செந்தில் மற்றும் சந்தோஷ் ஹரிஹரன் ஆகியோரும், பெண் நடுவர்களாக புண்யா, பிரியங்கா, ரக்ஷிதா, நித்யஸ்ரீ, ரோஷினி, ராஜலட்சுமி மற்றும் சிவாங்கி ஆகியோரும் பங்கேற்று அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைப் பட்டைதீட்ட உள்ளனர். ரசிகர்களுக்கு நேரடி கான்சர்ட் அனுபவத்தை வழங்கும் விதமாக, இந்த சீசனில் பிரமாண்டமான கான்சர்ட் பாணி அரங்க அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாடகர்களுக்கு மிக அருகில் ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில் பிரத்யேக 'ஃபேன் பிட்' (Fan Pit) பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. தொகுப்பாளர்களைப் பொறுத்தவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சியுடன் பயணித்து வரும் மா.கா.பா ஆனந்த் உடன், புதிய தொகுப்பாளராக ஸ்ருதிகாவும் இணைந்து தனது கலகலப்பான பேச்சால் மேடையைச் சிறப்பிக்க உள்ளார். ‘நியூ ஏஜ்’ என்ற தீமில், புதிய குரல்களையும் ஒன்றிணைக்கும் இந்தப் புதிய சீசன், வரும் நவம்பர் 21-ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியிலும், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.



















