செய்திகள் :

TVK : 'கைவிரித்த காங்கிரஸ்; அதிமுகவை தொடாத விஜய்! - காஞ்சி ஹைலைட்ஸ்!

post image

கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் மக்களை சந்தித்திருக்கிறார் விஜய். காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியின் உள்ளரங்கில் நடந்த கூட்டத்தில் அரைமணி நேரம் மக்கள் முன்பு பேசியிருக்கிறார். திமுக எதிர்ப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கிறார். 2026 இல் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்.

Vijay
Vijay

திமுகவுடன் கூட்டணி பேச காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்திருக்கும் நிலையில், அதிமுகவையும் பாஜகவையும் விமர்சிப்பதை தவிர்த்திருக்கிறார். விஜய்யின் காஞ்சி மக்கள் சந்திப்பின் ஹைலைட்ஸூம் சொதப்பல்களும் என்ன?

கரூர் சம்பவத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு விஜய் வெளியுலகுக்கு தலைகாட்டாமல் இருந்தார். கட்சியின் செயல்பாடுகளும் முழுமையாக முடங்கியிருந்தது. சரியாக ஒரு மாதம் கழித்து கரூர் குடும்பத்தினரைச் சந்தித்தார். நவம்பர் 5 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழுவையும் நடத்தியிருந்தார். இதைத் தாண்டி பெரிதாக எந்தச் செயல்பாடும் இல்லை. இந்நிலையில்தான் திடீரென காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் மக்கள் சந்திப்பை ஏற்பாடு செய்தனர்.

Vijay
Vijay

கரூருக்கு பிறகு உடனடியாக வெளி மாவட்டங்களுக்கு செல்லாமல், சென்னைக்கு அருகே இருக்கும் மாவட்டங்களிலிருந்து மக்கள் சந்திப்புகளை தொடங்கலாம் என்றே விஜய்யின் வியூக தரப்பு திட்டமிட்டது. அதன்படியே தவெகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் கல்விப் புள்ளியின் கல்லூரி ஒன்றை மக்கள் சந்திப்புக்காக தேர்வு செய்தனர்.

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய, ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் தலைமையில் கட்சி சார்பில் ஒரு குழுவை அமைத்தனர். இந்த குழு கட்சியின் தொண்டர் அணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சார்ந்து பயிற்சியளிப்பதுதான் திட்டம். அதன்படி கடந்த நான்கு நாட்களாக காஞ்சியில் உள்ள அதே தனியார் கல்லூரியில் தொண்டரணிக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொண்டரணியினர்தான் இன்றைய நிகழ்ச்சிக்கு பாதுகாப்பையும் வழங்கியிருக்கின்றனர். மதிமுக, தேமுதிகவுக்கு இருந்ததைப் போல ஒரு தொண்டரணியை களப்பயிற்சியோடு செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்பது தவெகவின் திட்டம். அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.

Vijay
Vijay

காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயிகள்,நெசவாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினருக்கும் நிர்வாகிகள் கடந்த இரண்டு நாட்களாக பாஸை விநியோகித்து நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு கைக்குழந்தையோடு வந்த பெண்களை ஆனந்த் வழிமறுத்து கட்டாயமாக குழந்தையோடு வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். கரூர் சம்பவம் கொடுத்த படிப்பினை இது. அதேமாதிரி, நிகழ்வு காலை 11 மணிக்கு தொடங்குமென தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

விஜய்யும் சரியாக 11 மணிக்கு நிகழ்விடத்தை அடைந்துவிட்டார். 11:10 மணிக்கு ராஜ்மோகன் மைக்கை பிடித்து நிகழ்ச்சியை ஆரம்பிக்க விஜய் மேடையேறிவிட்டார். கரூரில் விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்தது அவர்மீது கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. அதனாலயே நேர விஷயத்தில் மிக உன்னிப்பாக கவனமாக இருந்திருக்கிறார் விஜய்.

கிட்டத்தட்ட 26 நிமிடங்களுக்கு விஜய் பேசியிருந்தார். காஞ்சிபுரத்தையும் அண்ணாவையும் கனெக்ட் செய்து பேச்சை ஆரம்பித்தவர், அண்ணா தொடங்கிய அந்த கட்சியின் இப்போதைய நிலை எப்படியிருக்கிறது என நேரடியாக திமுகவை அட்டாக் செய்ய ஆரம்பித்தார். பொய் சொல்லி திமுக மக்களை ஏமாற்றிவிட்டது என்றார். பாலாறு மணற்கொள்ளை, காஞ்சி பேருந்து நிலையம், காஞ்சி நெசவாளர்கள் பிரச்னை போன்றவற்றை முன்வைத்தும் திமுகவை கடுமையாக அட்டாக் செய்தார்.

திமுகவை குடும்பக் கட்சி, வாரிசு கட்சி என தவெக ஆரம்பத்திலிருந்தே கடுமையாக விமர்சித்து வருகிறது. 'எங்க கட்சி ஒன்னும் சங்கரமடம் கிடையாதுன்னு சொன்னது யாரு...' என்று முதல்வரின் குடும்பத்துக்கு எதிராக நேரடியாக திரி கொளுத்தினார். அதேமாதிரி, விஜய்யின் அந்த சனிக்கிழமை சந்திப்புகளில் ஒரு டெம்ப்ளேட் இருக்கும். அதாவது அந்த வாரம் முழுவதும் விஜய்யின் மீது விழும் விமர்சனங்களுக்கு அந்த பிரசாரத்தில் பதில் கொடுப்பார். அதே டெம்ப்ளேட்தான் இங்கேயும். எம்.ஜி.ஆரையும் கூத்தாடிதான்னு சொன்னீங்க என தன்னை எம்.ஜி.ஆரோடு ஒப்புமைப்படுத்திப் பேசினார்.

Vijay
Vijay

தவெகவினர் 'தற்குறி' என இணையதளங்களில் விமர்சிக்கப்படுவதையும், அதற்கு எதிராக திமுக எம்.எல்.ஏ எழிலன் பேசியதையும் குறிப்பிட்டு அதற்கும் பதில் கூறினார். 26 நிமிடம் முழுவதும் திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சித்திருந்தார். மதுரை மாநாட்டில் ஸ்டாலின் அங்கிள் என நக்கலாக பேசியிருந்தார். அதற்கு கொஞ்சம் கலவையான விமர்சனம் வரவே அடுத்தக் கூட்டத்திலிருந்தே ஸ்டாலின் சார் என மாற்றிக் கொண்டார். ஆனால், இந்தக் கூட்டத்தில் மீண்டும் 'ஸ்டாலின் அங்கிள்!' என நக்கல் தொனியில் பேசியிருந்தார். கடைசியில் வழக்கம்போல ரெண்டே ரெண்டு பேருக்கு இடையிலதான் போட்டியே என முடித்தார். இதன்மூலம் திமுக தங்களை நோக்கி இன்னும் கடுமையாக எதிர்வினையாற்றும், அதன்வழி திமுக vs தவெக என களத்தை மாற்ற வேண்டும் என விஜய் நினைக்கிறார்.

2026 இல் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார். அரசியல் எதிரி, கொள்கை எதிரி என இரண்டிலும் தெளிவாக இருக்கிறோம் என்றார். ஆனால் அதிமுக, பாஜகவை பெயருக்கு கூட எங்கேயும் விமர்சிக்கவில்லை. அண்ணா காலத்தில் கட்டிய காஞ்சி பேருந்து நிலையத்தை இன்னும் புதுப்பிக்கவில்லை என்றார். ஆனால், இடையில் எத்தனையோ ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்ததை வசதியாக மறந்துவிட்டார். 'பாசிச பாஜக' என்றும் எங்கேயும் பேசவில்லை. S.I.R க்கு எதிராக கட்சியினரை ஆர்ப்பாட்டமெல்லாம் செய்ய வைத்தார். அதுகுறித்தும் இங்கே வாய்திறக்கவில்லை.

TVK
TVK

நேற்றுதான் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்து விஜய்யுடன் கூட்டணி பேசவில்லை என உறுதியாக தெரியப்படுத்தியிருக்கிறது. பீகார் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸின் பார்வை நம் பக்கமாக திரும்பும் என பனையூர் வட்டாரத்தினர் காத்திருந்தனர். பீகார் தேர்தல் காங்கிரஸ் பேரிடியாக அமையவே, அறிவாலயத்தோடு மேலும் நெருக்கமாகிவிட்டனர் கதர் சட்டையினர். இந்த நேரத்தில் நடக்கும் நிகழ்வில் விஜய் அதிமுக, பாஜகவை விமர்சிக்காமல் போவதை கட்டாயம் கவனத்தில் கொண்டேதான் ஆக வேண்டும். டிசம்பருக்கு பிறகுதான் கூட்டணி குறித்த தெளிவான உறுதியான முடிவை எடுப்போம் என தவெகவின் முக்கிய நிர்வாகிகளும் ஊதுபத்தி கொளுத்துகின்றனர்.

TVK
TVK

உள்ளரங்கில் நடக்கும் மக்கள் சந்திப்புகளில் கட்சித் தலைவர்கள் மக்களுடன் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிவது வழக்கம். தேர்தலின் போது சம்பிரதாயத்துக்காவது அதை செய்வார்கள். ஆனால், விஜய் அதையும் செய்யவில்லை. 2000 பேரை திரட்டி உட்கார வைத்து அவர்கள் முன் வழக்கம் போல ஆவேச வசனங்களை மட்டும் பேசிவிட்டு சென்றிருக்கிறார். அவர் பேசுவதற்கு கைத்தட்டி விசிலடிப்பதற்காக மட்டுமே அந்த மக்களை திரட்டி வைத்ததைப் போல இருந்தது. ஆனால் மக்களிடம் செல், மக்களிடம் வாழ் என்கிற வசனத்தை மட்டும் சரியாக பேசிவிடுகிறார்.

`எல்லோருக்கும் வீடு, ஒரு மோட்டார் சைக்கிள், பவர் ஃபுல்லான பாதுகாப்பு'- விஜய் சொல்லும் வாக்குறுதிகள்!

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.அதில் 2026ம் ஆண்டு தேர்தலில் வென்றால் தவெக என்னென்ன செய்யும் என்றும் அதன் வாக்குறுதிகள் குறித்தும் பேசியிருக... மேலும் பார்க்க

கோவை செம்மொழி பூங்கா விதிமீறல் புகார் - டென்ஷன் ஆன நேரு, செந்தில் பாலாஜி

கோவை காந்திபுரம் பகுதியில்45ஏக்கர் பரப்பளவில் ரூ.212கோடி மதிப்பில் செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது.1,000பேர் அமரக்கூடிய அரங்கம்,நூற்றுக்கணக்கான தாவர வகைகள்,செயற்கை நீர் வீழ்ச்சியுடன் மலைக் குன்று... மேலும் பார்க்க

Nigeria: நைஜிரியாவில் ஒரே பள்ளியில் 315 பேர் கடத்தல்! - பெரும் அச்சத்தில் மக்கள்

நைஜிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், குழந்தைகள் உட்பட மொத்தமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜிரியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய க... மேலும் பார்க்க

"நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல்" - திமுக வை தாக்கும் தவெக விஜய்

இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்... மேலும் பார்க்க

மதுரை: சீரமைக்கப்படாத மலைச்சாலை; கண்டுகொள்ளாத அரசு; 40 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்; பின்னணி என்ன?

மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைத்து, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க ... மேலும் பார்க்க