'நண்பா... நண்பீஸ் உங்களுக்கு அரசியல் வேண்டாம்!' - மாணவர்களுக்கு முதல்வர் விஜய் அ...
US Elections: இந்திய வேர்கள்... அமெரிக்க அரசியல் களம் - மீண்டும் வெற்றி பெற்ற சுஹாஸ் சுப்ரமணியம்!
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam), ஒபாமா நிர்வாகத்தில் தொழில்நுட்பக் கொள்கைப் பணிகளை மேற்கொண்டு, விர்ஜீனியா மாகாண அரசியலில் தடம் பதித்தவர். தற்போது மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தன் இடத்தை உறுதிசெய்திருக்கிறார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி!
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள 10-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சுஹாஸ், குடியரசுக் கட்சி வேட்பாளர் டேவ் பெக்வித்தைத் (Dave T. Beckwith) தோற்கடித்திருக்கிறார். நடைபெற்ற தேர்தலில் சுமார் 61.4 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியைத் தக்கவைத்துள்ளார். 2024-ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தற்போது இரண்டாவது முறையாக அந்தப் பொறுப்புக்குத் தேர்வாகியிருக்கிறார்.
இந்தியப் பின்னணியும் கல்லூரி நாள்களும்...
1986-ம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் பிறந்தவர் சுஹாஸ். இவரது பெற்றோர் 1979-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். தாய் பெங்களூருவையும், தந்தை சென்னை மற்றும் செகந்தராபாத்தையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

டுலேன் (Tulane) பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த சுஹாஸ், பின்னர் நார்த்வெஸ்டர்ன் (Northwestern) பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். கல்லூரிக் காலத்தில் கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணிகளில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டார்.
வெள்ளை மாளிகை ஆலோசனைப் பணி
சட்டப் படிப்புக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும் செனட் நீதித்துறைக் குழுவிலும் பணியாற்றினார். 2015-ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில், வெள்ளை மாளிகையின் தொழில்நுட்பக் கொள்கைப் பிரிவில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் பணியாற்றிய சுஹாஸ், பின்னர் தனியார் துறையில் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டார். அதேநேரத்தில் தன்னார்வ தீயணைப்பு வீரராகவும் மருத்துவ அவசர உதவியாளராகவும் களத்தில் பணியாற்றினார்.

விர்ஜீனியா அரசியலும் வரலாற்றுப் பதிவும்
2019-ம் ஆண்டு விர்ஜீனியா மாகாணப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தொடர்ந்து மாகாண செனட்டிலும் பணியாற்றினார். அங்கு போக்குவரத்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், மருந்துகளின் விலை போன்றவற்றைக் குறைக்கும் சட்ட முயற்சிகளில் முக்கியப் பங்கெடுத்தார்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, விர்ஜீனியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்கர் என்ற வரலாற்றைப் படைத்தார்.
தற்போது மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் சுஹாஸ் சுப்ரமணியம், தொழில்நுட்பம், குடியேற்றக் கொள்கை, அரசு நிர்வாகச் சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்திய வேர்களைக் கொண்டு, அமெரிக்க அரசியலில் முக்கியப் பங்களிப்பை வழங்கி வரும் இவரது பயணம் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.














