செய்திகள் :

கல்வி சலுகை அல்ல... உரிமை! பள்ளியில் சேர்க்க மறுத்தால்.! - சட்டம் சொல்வது என்ன? - 11

post image

படிக்க வைக்கிறது உங்க கடமை மட்டுமல்ல… குழந்தையின் உரிமையும்!

“நான் உன்னைப் பத்து மாசம் சுமந்து, எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைக்கிறேன் தெரியுமா?”

குழந்தைகள் படிக்காமல் விளையாடும்போது, பல வீடுகளில் அம்மாவோ அப்பாவோ இப்படிச் சொல்லிக் கடிந்துகொள்வதைக் கேட்டிருப்போம். பெற்றோர் கஷ்டப்பட்டு உழைத்து, வியர்வை சிந்திப் பிள்ளைகளைப் படிக்க வைப்பது உண்மைதான். ஆனால், கொஞ்சம் நின்று யோசித்துப் பாருங்கள்... ஒரு குழந்தைக்குக் கல்வி கிடைப்பது என்பது பெற்றோரின் விருப்பத்தை மட்டுமே சார்ந்த ஒன்றா?

நிச்சயமாக இல்லை! கல்வி என்பது பெற்றோர் குழந்தைக்குத் தரும் சலுகையோ உதவியோ அல்ல...

அது அந்தக் குழந்தையின் உரிமை!

குறிப்பாக, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி பெறுவது அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை! அந்த உரிமை குழந்தைக்குக் கிடைப்பதை உறுதிசெய்வது அரசின் கடமை!

சட்டம் சொல்வது என்ன

கல்வி உரிமைக்கு வித்திட்ட சட்டமும் தீர்ப்புகளும்!

1950-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே, 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி வழங்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று சரத்து 45 வழிகாட்டியது. ஆனால், அது அரசுக்கான வழிகாட்டும் நெறிமுறையாகத்தான் இருந்தது. அப்போது கல்வி என்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை.

1990-களில் உச்சநீதிமன்றத்தில் நடந்த இரண்டு முக்கிய வழக்குகள் இந்த நிலையை மாற்றுவதற்கான பாதையை அமைத்தன. 1992-ல் நடந்த மோகினி ஜெயின் (Mohini Jain v. State of Karnataka) வழக்கில், கல்வி உரிமை என்பது வாழ்வுரிமையோடு தொடர்புடையது என்று நீதிமன்றம் விளக்கியது.

தொடர்ந்து, 1993-ல் நடந்த உன்னிகிருஷ்ணன் (Unni Krishnan J.P. v. State of Andhra Pradesh) வழக்கில், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவசக் கல்வி பெறும் பெறும் அடிப்படை உரிமை இருப்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அதே நேரத்தில், Mohini Jain தீர்ப்பில் கூறப்பட்ட கல்வி உரிமையின் பரந்த விளக்கத்தை முழுமையாக ஏற்காமல், அதன் வரம்பைத் தெளிவுபடுத்தியது.

சட்டம் சொல்வது என்ன

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்

இதற்குப் பிறகு, 2002-ல் கொண்டுவரப்பட்ட 86-வது அரசமைப்புத் திருத்தம் கல்வி உரிமைக்குப் பெரிய வலுசேர்த்தது. அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட சரத்து 21A, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி வழங்குவதை அரசின் பொறுப்பாக்கியது.

இந்த அரசமைப்புத் திருத்தத்தின் தொடர்புடைய விதிகள் 2010 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தன. அதே நேரத்தில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பகாலப் பராமரிப்பு மற்றும் கல்வி தொடர்பாக சரத்து 45 மாற்றப்பட்டது. மேலும், தங்கள் குழந்தைகள் அல்லது தங்கள் பாதுகாப்பில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடிப்படைக் கடமை என சரத்து 51A(k)-ல் சேர்க்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக உருவானதுதான் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (Right of Children to Free and Compulsory Education Act, 2009 அல்லது RTE Act). இந்தச் சட்டம் 2010 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது.

பள்ளியில் சேர்க்க மறுத்தால் என்ன செய்வது?

“சட்டம் எல்லாம் சரிங்க... ஆனா நடைமுறையில எவ்வளவோ பிரச்சனை வருதே!” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கும் இந்தச் சட்டத்தில் வழிகள் இருக்கின்றன.

“அட்மிஷன் காலம் முடிஞ்சிடுச்சு... இனிமேல் சேர்க்க முடியாது!” என்று பள்ளி சொன்னால், RTE சட்டத்தின் பிரிவு 15-ன்படி, கல்வியாண்டின் தொடக்கத்திலோ அல்லது நிர்ணயிக்கப்பட்ட நீட்டிக்கப்பட்ட காலத்திலோ சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.

அந்தக் காலம் முடிந்துவிட்டது என்ற ஒரே காரணத்தைக் காட்டி, அதற்குப் பிறகு சேர்க்கை கோரும் குழந்தைக்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. பள்ளியில் இதுவரை சேராத அல்லது தொடக்கக் கல்வியை முடிக்காத ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்பில் சேர்த்து, தேவையான சிறப்புப் பயிற்சி வழங்கிப் படிக்க வைக்க பிரிவு 4 வழிவகை செய்கிறது.

சட்டம் சொல்வது என்ன

அதேபோல், பள்ளியில் சேர்க்கும்போது சட்டத்தால் தடைசெய்யப்பட்ட நன்கொடைத் தொகையை (Capitation Fee) கேட்பதோ, குழந்தையையோ பெற்றோரையோ சேர்க்கைக்கான தேர்வு அல்லது நேர்காணல் மூலம் சோதிப்பதோ கூடாது எனப் பிரிவு 13 தடை செய்கிறது.

RTE சட்ட பிரிவு

இவற்றில் ஏதேனும் விதிமீறல் நடந்தால், முதலில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம். தீர்வு கிடைக்கவில்லையா? RTE சட்டத்தின் பிரிவு 32-ன்படி, சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகார அமைப்பிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கலாம்.

அந்த அமைப்பு, சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு, மூன்று மாதங்களுக்குள் புகாரைத் தீர்மானிக்க வேண்டும்.அந்த முடிவில் திருப்தி இல்லாவிட்டால், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடமோ அல்லது உரிய மாற்று அதிகார அமைப்பிடமோ மேல்முறையீடு செய்யலாம்.

கல்வி சலுகை அல்ல... உரிமை!

ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லாமல் வேலை செய்துகொண்டோ, கல்வியைத் தொடர முடியாமலோ இருப்பதைப் பார்த்தால், “அது அவங்க குடும்பப் பிரச்சனைப்பா...” என்று கடந்து போய்விடாதீர்கள்.

குழந்தைக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை; நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கிடைப்பதை உறுதிசெய்வது அரசின் பொறுப்பு. அந்த உரிமையைப் பாதுகாப்பதில் சமூகமாக நமக்கும் பங்கு இருக்கிறது.

கல்வி என்பது பெற்றோர் குழந்தைக்குத் தரும் சலுகையோ உதவியோ அல்ல... 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச, கட்டாயக் கல்வி பெறுவது அரசமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை!

ஆக்கிரமிப்பை அகற்றாத மும்பை மாநகராட்சி; கமிஷனரின் சம்பளத்தை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட் அதிரடி

மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவலி என்ற இடத்தில் மாநகராட்சி பஸ் நிறுத்ததிற்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ... மேலும் பார்க்க

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி, மகன்கள் உட்பட 7 பேரும் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராகப் பதவி... மேலும் பார்க்க

"கணவனை விவாகரத்து செய்யப்போகிறேன்; கருவைக் கலைக்க அனுமதியுங்கள்" - சுப்ரீம் கோர்டில் பெண் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டில் 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் கருவைக் கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். கணவருடன் தனக்கு சண்டை இருப்பதாகவும், அவரை விவாகரத... மேலும் பார்க்க

`வேலை பறிபோனால் என்ன செய்யலாம்? உங்கள் உரிமைகள் என்னென்ன?' சட்டம் சொல்வது என்ன? - 10

``நாளையிலிருந்து நீங்கள் வேலைக்கு வர வேண்டாம்!” இந்த ஒற்றை வாக்கியம் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த உலகத்தையும் சில நொடிகளில் உலுக்கிப் போட்டுவிடும். மாதச் சம்பளம் நின்றுபோனால் குடும்பத்தை எப்படி நடத்துவது, ... மேலும் பார்க்க

``இந்த வாதத்தை ஏற்க முடியாது' ; கே.என் நேரு மீது FIR பதிவு செய்ய தடையில்லை' - உச்ச நீதிமன்றம் அதிரடி

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் வேலை வாய்ப்பு முறைகேடு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை (F... மேலும் பார்க்க

`இப்படிச் சொல்வது கூட தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா?' - சட்டம் சொல்வது என்ன? - 8

சட்டம் உங்கள் கையில்!“நீயெல்லாம் இன்னும் எதுக்கு உயிரோட இருக்க?” என்று கோபத்திலோ, விளையாட்டாகவோ யாரிடமாவது சொல்லியிருக்கலாம். ஆனால், இப்படிச் சொல்வதெல்லாம் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாகிவிடுமா? ஒருவர... மேலும் பார்க்க