மேயர் பதவி: ராஜ்தாக்கரே, சரத் பவாருடன் ஷிண்டே கூட்டணி - மகாராஷ்டிராவில் மாறும் க...
அணை ஓசை: காவிரி பெருவெள்ளமும் வறட்சியும்... ஒரே கனவு - `நீரைத் தாங்கும் எஃகு கோட்டை' | பகுதி 02
“உலகப் பிரளயம்”
1924 – காவிரி ஆற்றின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். ஜூலை மாதம் ஏற்பட்ட மாபெரும் வெள்ளம், பவானி, காவிரி, கொள்ளிடம் கரைகளை முறியடித்து பாய்ந்தது.
அன்றைய இதழ்களில் “வெள்ளச் சிந்துகள்” எனப் பதிவான செய்திகள், அதே வருடம் ஆசியா, ஐரோப்பா, சீனா மற்றும் ரஷ்யாவிலும் மழையால் பெரு பாதிப்பு எனச் சான்றுகள் கூறுகின்றன.
மக்கள் நினைவுகளில் பதிந்த வலி, அனைத்தும் சேர்ந்து அந்த நிகழ்வுகளை “உலகப் பிரளயம்” எனப் பெயரிட்டன.
டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் அழிந்தன; வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன; ஏழைகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட பெருவெள்ளம் போல அதற்கு முந்தைய எந்த வருடத்திலும் அவ்வளவு மழை பொழிந்தது கிடையாது, இவ்வளவு வெள்ளம் வந்தது கிடையாது என்று அப்போது வயது முதிர்ந்த பெரியோர்கள் கூறியதாக "கிராமானூகூலன்" என்ற இதழின் தலையங்கம் கூறுகிறது.

ஒரு "வெள்ளச் சிந்து" காவிரியும், பவானி ஆறும் கூடும் கூடுதுறை என்ற இடத்தில் வெள்ளம் "புலியைப் போல" பாய்ந்தது என்று வர்ணிப்பதிலிருந்து இவ்வெள்ளத்தின் தீவிரத்தை நாம் உணரலாம்!
வரலாறு கூறுகிறது — 1906 முதல் 1930 வரை பல ஆண்டுகள் தொடர்ச்சியாக வெள்ளம் தமிழகத்தைத் தாக்கியது என்று.
ஆனால், வெள்ளம் மட்டும் அல்ல, வறட்சியும், பஞ்சமும் காவிரியின் மறுபக்கம். சங்க இலக்கியங்களில் பசுமையோடு பாடப்பட்ட காவிரி, மழை இல்லாத காலங்களில் பாசனக் கால்வாய்களில் தண்ணீர் குறைந்தபோது மக்களை வாட வைத்தது. 1876–78 பஞ்சம் இதற்கு சான்று. அப்போதைய அரசு, கூலி வேலைக்கு ஆட்களை நியமித்து, அதற்கான கூலியாக தானியம் வழங்கும் “உழைப்பு–உணவு” திட்டம் மேற்கொண்டது.

ஆனாலும், ஆயிரக்கணக்கானோர் பட்டினியால் துயருற்றனர். மெட்ராஸ் மாகாணத்தில், மக்கள் தலைநகர் மெட்ராஸை நோக்கி வேலை தேடி இடம் பெயர்ந்தனர். வில்லியம் டிக்பி எழுதிய “தாது வருட பஞ்சம்” என்ற நூல், அந்தக் கொடுமையை வெளிப்படுத்துகிறது.
எங்கும் உடல் மெலிந்திருக்கும் துயரமான மனிதர்களின் நடமாட்டமே அப்போது நாட்டில் காணக்கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகம் படிப்போர் நெஞ்சத்தை கலங்க வைக்கும். இதில் உள்ள தகவல்களை வாசிக்கும் போது பல இரவுகள் தூங்கக்கூட இயலாமல் போகும். அவ்வளவு கொடுமை, சொல்லொனாத் துயரம்.
இவ்வாறான வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி தாக்கியதால், நிலையான நீர் மேலாண்மை தேவை உறுதியாக வெளிப்பட்டது. காவிரியின் ஓட்டத்தை அடக்கி, நீரை சேமித்து, பாசனமாகப் பயன்படுத்தும் கனவின் விதை அப்போது விதைக்கப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழன் கட்டிய கல்லணை போல, இப்புதிய காலத்திலும் மக்களைக் காக்க ஒரு பெரிய அணை அவசியமென அனைவரும் உணர்ந்தனர்.
அந்தத் தேவைக்கான பதிலாக வந்தார் பிரிட்டிஷ் பொறியாளர் ஆர்தர் காட்டன். அவரது கனவு — “நீரைத் தாங்கும் எஃகு கோட்டை”. அதன் உருவமே, பின்பு தமிழகத்தின் உயிர்நாடியாக மாறிய “மேட்டூர் அணை”.
(தொடரும்)













