'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்ப...
அன்றும் இன்றும் பரவும் தீ... இந்தி எதிர்ப்பு போராட்டமும் திமுகவும் | ‘வாவ்’ வியூகம் 04
ஜனநாயகத்தில் ‘போராட்டம்’ என்பது மிகப் பெரிய ஆயுதம். அதுவே அரசியல் என்று வரும்போது, அது கட்சிகளின் மாபெரும் சக்தி. சில போராட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும், சில போராட்டங்கள் கட்சிக்கு பலம் சேர்க்கும். குறிப்பாக ஆட்சியில் இல்லாதபோது ஒரு கட்சி தனது இருப்பை உறுதி செய்ய உதவியாக இருக்கும். இதையும் தாண்டி, நுணுக்கமாக தேர்தல் அரசியல் என்று குறுகும்போது, ‘போராட்டங்கள்’ மக்கள் தீர்ப்பை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள ஒரு ‘வாவ் வியூகம்’.
அன்றும், இன்றும், என்றும் தேர்தல் அரசியலையும் போராட்டங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. அப்படியாக தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெற்ற சில போராட்டங்களைப் பற்றித்தான் இங்கே அலசுவோம்.

தமிழக அரசியல் வரலாற்றில் இன்றளவும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரு போராட்டம் என்றால், அது இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனலாம். எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு ‘டார்மன்ட் வால்கனோ’ ரகம் இது.
இந்தித் திணிப்புக்கு எதிராக முதல் போராட்டம் வெடித்ததை 1930-களின் கடைசி 3 ஆண்டுகளுக்குள் சுருக்கலாம். 1937-ல் அப்போதைய சென்னை மாகாணத்துக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ராஜாஜி முதல்வரானார். அதன் பின்னர், சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அவர், “மாணவர்கள் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும்” என்றார். அவரது பேச்சுக்கே அன்றிருந்த நீதிக் கட்சியும், சுயமரியாதை இயக்கமும் கடும் கண்டனங்களை வெளிப்படுத்தின.
ஆனால், அவற்றையெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாதவராக, 1938-ல் தமிழக மாணவர்கள் கட்டாயம் இந்தி படிக்க வலியுறுத்தும் வகையில் ஓர் அரசாணையை வெளியிட்டது ராஜாஜி அரசு. அதை எதிர்க்கும் வகையிலான போராட்டங்கள் இந்த முறை இன்னும் தீவிரமடைந்தன. ஆனால், அப்போது முதலாம் உலகப் போர் மூண்டது. தொடர்ந்து 1939-ல் ராஜாஜி ராஜினாமாவால் ஆட்சி கலைக்கப்பட்டது. 1940-ல் மெட்ராஸ் மாகாணம் ஆளுநர் கட்டுப்பாட்டில் வர, ‘வெள்ளைக்கார துரை’ இந்தி பள்ளிகளில் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்தார். ஓர் போராட்ட அலை ஓய்ந்தது.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மெட்ராஸ் மாகாண முதல்வராக இருந்த ஓமந்தூரார் மீண்டும் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். ஒரு சின்ன சகாயமாக தமிழ்ப் பேசும் பகுதிகளில் இந்தி விருப்பப் பாடம் மற்ற தென்னிந்திய மொழிகள் பேசும் பகுதிகளில் இந்தி கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது. அதற்கும் எதிர்ப்புகள் வலுத்தது, அப்புறம் ஓமந்தூரர் ராஜினாமாவோடு அந்தப் போராட்டங்களும் ஓய்ந்தன.
அதன் பின்னர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேல் அமைதியாக இருந்த எரிமலை 1965-ல் வெடித்துச் சிதறியது. ரத்தம் தெறித்தது.
1949-ல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி, ஆங்கிலம் இருக்கும், அதற்குப் பிறகு இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக நீடிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்படி, ஜனவரி 26, 1965-க்குப் பிறகு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்ற நிலை உருவாகியிருந்தது.
இந்த அச்சம் இந்தி பேசாத மாநிலங்களில் பரவியது. தமிழகத்தில் ‘தகத்தகாய சூரியன்’ போல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பிரகாசித்தது. அப்படியான அடைமொழியை இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக் கொடுக்க, திமுகவின் அரசியல் வரலாற்றில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது முக்கியமானது என்பதை உணர்த்துவதற்கே!
1962-ல் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். 1965 நெருங்க நெருங்க இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்பதை எதிர்த்து மாநிலங்களவையில் அவரது குரல் தொடர்ந்து ஒலித்தது. ஒரு கட்டத்தில் அவரது வாதங்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு சமாதானம் செய்யும் விளக்கங்களையும் அளித்த சுவாரஸ்ய சம்பவங்கள் உள்ளன,
பரவிய தீ...
அப்படியே காலம் சென்று கொண்டிருக்க 1964-ஆம் ஆண்டு டிச.5-ல் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் குல்சாரி லால் நந்தா அலுவலகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதுதான் போராட்டத் தீ பரவக் காரணமானது.
அதில், “1965-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி முதல் மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தியே பயன்படுத்தப்படும். இருப்பினும், முக்கியமான சுற்றறிக்கைகள், அரசாணைகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தி எதிர்ப்பு மனநிலை தமிழகத்தில் நீறு பூத்த நெருப்பாக இருக்க அதில் இந்த அறிக்கை எண்ணெய் ஊற்றியது.
திமுகவும் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. மத்திய அரசு சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஜனவரி 26, 1965 கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அண்ணாதுரை அறிவித்தார். ஆனால், அவரை அந்தப் போராட்ட நாளுக்கு முன்னதாகவே காவல் துறை கைது செய்தது. இது திமுகவினரை இன்னும் கொந்தளிக்க வைத்தது.
தமிழகத்தில் பல இடங்களில், குறிப்பாக தலைநகர் சென்னை, தென்னகத்தில் மதுரை, மேற்கில் பொள்ளாச்சி என்று போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. திமுகவின் உத்வேகப் பேச்சுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டிருந்தது என்னவோ மாணவர்கள் தான். ஒரு கட்சி இளைஞர்களை அரசியல்மயமாக்குவதில் தான் வளர முடியும். அதற்குத் தோதாக அமைந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் திமுக தன்னெழுச்சியாக வந்த மாணவர்கள் உள்பட மாணவ சமுதாயத்தை அரசியல்மயமாக்குவதில் சிறப்பாக தன்னை ஈடுபடுத்தியது. திமுகவின் இன்றைய பலத்துக்கு அன்று போடப்பட்ட ஆலமர விதை எனலாம்!
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிப்.10 1965 மற்றும் பிப்.12 1965 மறக்கக் கூடாதவை என்றே சொல்லலாம். பிப்.10 அன்று திருப்பூரில் ஒரு தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 19 வயது மாணவர் உயிரிழந்தார். அது மக்களை வெகுண்டெழச் செய்தது. காவல் நிலையமே கொளுத்தப்பட்டது. பிப்.10-ம் தேதி போலீஸ் தமிழகம் முழுவதும் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்.
பிப்ரவரி 12-ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த துப்பாக்கிச் சூடு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சக்கட்டம். அன்றைய தினம் தமிழகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பொள்ளாச்சி போராட்டத்தை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதாக பல்வேறு நூல்களிலும் தகவல்கள் உள்ளன.
இப்படியாக இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் எழுச்சிக்கு வித்திட்டதோடு 1967-ல் அதை ஆட்சி அரியணையில் ஏற்றிய வாவ் வியூகமாக இருந்தது.

அணையாத அந்தத் தீ...
இந்தி எதிர்ப்புப் போராட்டம் இன்றளவு ஒழியவில்லை. கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை அதற்கு ஒரு சாட்சி.
“இது ஒரு தொடர்ச்சியான போராட்டம். 85 ஆண்டுகளுக்கும் மேலாக சளைக்காமல் தொடரும் வெற்றிகரமான போராட்டம். அதுதான் தமிழர்களின் உணர்வுடன் கலந்துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம். இந்தியை அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம்.
மொழிப்போர்க் களத்தில் முதல் பலியான மாவீரர்கள் நடராசன், தாளமுத்து எனத் தொடங்கி, 1965 மொழிப்போர்க் களத்தில் கீழப்பழுவூர் சின்னசாமி, சிவகங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற உயிர்த் தியாகங்களால் ஆதிக்க இந்தியிடமிருந்து தாய்மொழியாம் தமிழைக் காத்த வரலாறு, திராவிட இயக்கத்திற்கும் அதன் அரசியல் பேரியக்கமான திமுகவுக்கும் உண்டு.
ஆதிக்கத்தை எதிர்ப்பதும், தாய்மொழியைக் காப்பதும் திமுக கட்சியினரின் ரத்தத்தில் ஊறிய உணர்வு. உயிர் அடங்கும் வரை அந்த உணர்வு அடங்காது” என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் காலத்துக்கு ஏற்ப தனது வடிவமைத்தை மாற்றிக் கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு சாட்சிதான் ‘இந்தி தெரியாது போடா’ இயக்கம்.
கடந்த 2020 செப்டம்பரில் இந்த இயக்கம் பிரபலமானது. சமூக ஊடகங்களில் இந்தி எதிர்ப்புக்கு பெறும் ஆதரவு பெருகியிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி மத்திய அரசால் இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டுமே இந்தி பேசாத மாநில மக்களால், குறிப்பாக தமிழகத்தில் இருந்து வலுவான எதிர்ப்பு முன்வைக்கப்படும்.
கடந்த காலங்களிலும் #WeDontWantHindiDivas, #StopHindiImposition போன்ற ஹாஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்டிங் செய்யப்பட்டன. அந்த வகையில் 2020-ம் ஆண்டு இணையத்தில் ட்ரெண்டாகத் தொடங்கியது #HindiTheriyathuPoda.
முன்னதாக, இந்தி மொழி தெரியாததால் சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் கனிமொழி. அதாவது, ‘இந்தி தெரியாது’ என்று கூறியதாலேயே, ‘நீங்கள் இந்தியரா...’ என்ற கேள்வியை விமான நிலைய அதிகாரி ஒருவர் தன்னிடம் கேட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், ‘இந்தி தெரிந்தால்தான் இந்தியரா...’ என்ற கேள்வியையும் கூடவே எழுப்பியிருந்தார் கனிமொழி.
அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்தி தெரியாததை சுட்டிக்காட்டி சுமத்தப்பட்ட ஏளனங்களை பகிரங்கமாக தெரிவித்தனர்.
அதன்பின் கனிமொழி இந்தி திணிப்புக்கு எதிரான வார்த்தைகள் கொண்ட டி-ஷர்ட் அணிந்தவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தார். கூடவே, “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகியிருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு தமிழ்த் திரைத் துறையில் பரவலாக ஆதரவு இருந்தது. இது விமர்சனத்துக்கும் உள்ளானது.
தமிழர்கள் பலரும் ‘இந்தி தெரியாது போடா’ வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்துகொள்ள, அது உலகத் தமிழர்கள் மத்தியிலும் பிரபலமானது. களத்தில் கெத்து காட்டி இந்தியை எதிர்த்த வரலாறு கொண்ட திமுக, இணையத்தில் காட்டிய கெத்து பாஜகவுக்கு ஷாக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.
தொடர்ந்து 2021-ல் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அப்போதும் இந்தி எதிர்ப்பு திமுகவுக்கு சாதகமான வியூகமானது. இந்தியை திணிக்கும், நீட்டை திணிக்கும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்ற ஆயுதத்தை கையில் எடுத்த திமுக, அதில் வெற்றியும் கண்டது.
எத்தனை வலுவான எதிர்ப்பு வந்தாலும் இந்தியை திணிப்பதில் பாஜக சற்றும் தளர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிக்கும் முயற்சியை கையில் எடுத்தது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தன் எஸ்எஸ்ஏ நிதி விடுவிப்பு என்று டெல்லி மேலிடம் கையில் எடுத்தபோது, “ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. இதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல. ‘மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது’ என்று மிரட்டல் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுக்க மாட்டார்கள். எனவே எங்களது உரிமையை கேட்கிறோம். அவரது தனிச் சொத்தை கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று கர்ஜித்தார் முதல்வர் ஸ்டாலின்.
“நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். இதற்கு சுதந்திரத்துக்கு பிறகான தமிழகத்தின் வரலாற்றை படித்தாலே புரியும். தலைக்கனம் காட்ட வேண்டாம்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இந்தி எதிர்ப்பு மனநிலையை திமுக சற்றும் தளர்த்திக் கொள்ளவில்லை.
கடந்த மார்ச் 2025-ல் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவு இப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் மிக முக்கியமானது.
“மும்மொழி சூத்திரத்திற்கான ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சார சர்க்கஸ் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய விஷயமாக மாறிவிட்டது. முடிந்தால் இதை அவர்களின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகவும், இந்தி திணிப்பு குறித்த வாக்கெடுப்பாகவும் வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் இறங்கட்டும் என்று நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன்.
வரலாறு மிகவும் தெளிவாக உள்ளது. தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணிக்க முயன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் அல்லது பின்னர் தங்கள் நிலைப்பாட்டை மாற்றி திமுகவுடன் இணைந்துகொண்டுள்ளனர். பிரிட்டிஷ் காலனித்துவத்திற்குப் பதிலாக இந்தி காலனித்துவத்தை தமிழ்நாடு என்றும் பொறுத்துக்கொள்ளாது.
திட்டங்களின் பெயர்கள் முதல் விருதுகள் வரை மத்திய அரசு நிறுவனங்கள் இந்தியை குமட்டல் தரும் அளவுக்கு திணிக்கின்றனர், இது இந்தியாவில் இந்தி பேசாமல் இருக்கும் பெரும்பான்மையானவர்களை மூச்சுத் திணறவைக்கிறது.
மனிதர்கள் வருவார்கள் போவார்கள் (men may come, men may go) ஆனால் இந்தியாவில் இந்தியின் ஆதிக்கம் தகர்க்கப்பட்ட பிறகும் கூட, முன்னணிப் படையாக நின்றது திமுகதான் என்பதை வரலாறு நினைவில் கொள்ளும்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இது, கூட்டணியில் இருக்கும் காங்கிரஸுக்கும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பாஜகவுக்கும் சேர்த்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கை.
தவெக தலைவர் விஜய்க்கு விசிலடிக்கும் ஜென்Z தலைமுறையினருக்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரலாற்றை அவர்களுக்குப் பிடித்த திரைமொழியில் சொல்ல ‘பராசக்தி’ படத்தை திமுக பயன்படுத்திக் கொண்டதும் மிக முக்கிய வியூகமே.
பாஜகவுடன் மீண்டும் அதிமுக-வுடன் கைகோத்துள்ள இந்த 2026 தேர்தலிலும் தேர்தலில் இந்தி திணிப்பு விவகாரத்தை திமுக நிச்சயம் கையில் எடுக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
அதற்கு அச்சாரமாக, சமீபத்தில் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளில் முதல்வர் ஸ்டாலின், “மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஓர் உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!” என்று அந்தத் தீயை அணைக்காமல் பார்த்துக்கொள்வதன் பின்னணியில் சமகால தேர்தல் அரசியல் வியூகமும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
(தொடரும்...)
| அடுத்த வாரம்: அரசியல் கட்சிக்கு அடித்தளம் அமைத்த ‘சமூக’ போராட்டம் |









