'ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் டு கல்விக்கடன் ரத்து' - 2ம் கட்ட வாக்குறுதிகளை ...
”இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள்!” - ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முந்தைய காங்கிரஸ் ஆட்சியைவிட பிரதமர் மோடி ஆட்சியில்தான் தமிழகத்துக்கு அதிக நிதி வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கேட்ட அத்தனை திட்டங்களையும் பாரதிய ஜனதா அரசு வழங்கியது. பா.ஜ.கவிற்கு, அ.தி.மு.க. அடிமையாக இல்லை. நாங்கள் அவர்களோடு அன்போடுதான் இருக்கிறோம். இது மக்களுக்கும் தெரியும்.

டெல்லி சென்றால் ஒரு மாதிரியும், சென்னைக்கு வந்தால் ஒரு மாதிரியும் இருப்பது நாங்கள் அல்ல. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிதான் அடிமைத்தனமான கூட்டணி. தேர்தல் குறித்து யார் கருத்து கூறினலும் அ.தி.மு.க. கூட்டணிதான் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்கிறார்கள். இதை பொறுக்க முடியாத சிலர் அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்கிறார்கள். ரூ.200 சினிமா டிக்கெட்டை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பதும் ஊழல்தானே? எம்.ஜி.ஆர். நடிகராக இருந்தார். ஆனால், அவர் அரசியலில் நடிக்கவில்லை.
இன்று அரசியலுக்கு வரக்கூடிய நடிகர்கள் அரசியலிலும் நடிக்கிறார்கள். இந்த நடிப்பை நிச்சயம் மக்கள் ஏற்க மாட்டார்கள். பட்டாசு, தீப்பெட்டித் தொழிலுக்கு பா.ஜ.க அரசு எதுவும் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி.யை குறைத்தோம். 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை காப்பியடித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையாக வெளியிட்டது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னர் பொது மக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் கருத்து கேட்டு அதனை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனசாமி கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் வெளியிடுவோம். தி.மு.க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்த்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதில் இருந்து தப்பிக்க, எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். வருங்காலங்களில் மக்களை தி.மு.க. ஏமாற்ற முடியாது. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய தோல்வியை மக்கள் பரிசாகத் தருவார்கள்” என்றார்.












