சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வ...
அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு லஞ்சம்? புகார் கூறிய பெண் வழக்கறிஞர் தவெக-வில் இருந்து நீக்கம்
`ஊழலற்ற நேர்மையான ஆட்சி’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்து ஆட்சியைப் பிடித்தது த.வெ.க. ஆனால் ஆட்சிக்கு வந்த ஒருசில தினங்களிலேயே அக்கட்சி நிர்வாகிகள் வசூல் வேட்டையில் இறங்கியதாகப் புகார்கள் எழுந்தன.
அதையடுத்து 24.05.2026 தேதியிட்ட ஜூ.வி இதழில், `ஆவின் தலைவர் பதவி ரூ.50 லட்சம்… அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சம்… வசூல் சர்ச்சையில் த.வெ.க மாவட்டச் செயலாளர்’ என்ற தலைப்பில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.
அந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்த விழுப்புரம் மாவட்டச் செயலாளர் `குஷி’ மோகன் மீதுதான் தற்போது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் வழக்கு தொடர்ந்திருக்கிறார் வழக்கறிஞர் ஞானசௌந்தரி.

அதன் தொடர்ச்சியாக கட்சி நிர்வாகி ஒருவருடன் அவர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, தகித்துக் கொண்டிருக்கிறது த.வெ.க. அந்த ஆடியோவில், `நான் எவ்வளவு கஷ்டப்படற குடும்பம் தெரியுமா? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் நான்.
தளபதி வெற்றிபெற்றதும், அவர் எனக்காகவே வெற்றிபெற்றதாக நினைத்தேன். ஏனென்றால் நாம் அரசுத் தரப்பு வழக்கறிஞராவோம். வாழ்க்கையில் முன்னேறுவோம் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் (குஷி மோகன்) என்னை மிகவும் கேவலமாக நடத்தினார். அ.தி.மு.க, தி.மு.க-வில் அந்தக் கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம் கட்சியில்தான் மாற்றுக் கட்சிக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள்’ என்று நீண்டது அந்த ஆடியோ.
இந்த விவகாரம் குறித்து அப்போது நம்மிடம் பேசிய ஞானசௌந்தரி தரப்பு, ``தளபதி கட்சி ஆரம்பித்த சமயத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் 11 வழக்கறிஞர்கள் தேவை என்று கேட்டார்கள். ஆனால் அப்போது விழுப்புரத்தில் ஞானசுந்தரி உட்பட நான்கு பேர்தான் ரசிகர்கள் என்ற முறையில் பெயர் கொடுத்தார்கள்.
அதில் மூன்று பேர்தான் சீனியர். இப்போது இருக்கும் மாவட்டச் செயலாளர் குஷி மோகன் மீது இரண்டு எஃப்.ஐ.ஆர்கள் விழுந்தன. அதற்கும் அவர்கள்தான் ஆஜரானார்கள்.
அப்படி இருக்கும்போது அவர்களை விட்டுவிட்டு, அரசு வழக்கறிஞராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆறு பேரைப் போட்டிருக்கிறார் `குஷி’ மோகன். ஒரு நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை வாங்கிக் கொண்டுதான் நியமித்திருக்கிறார்கள்” என்றனர்.

அதேசமயம், ``எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தளபதி ஆட்சி வந்ததில் இருந்து அனைத்தும் சட்ட விதிகள்படி நேர்மையாக நடைபெற்று வருகிறது. அதன்படி அரசு வழக்கறிஞர் நியமனமும் அப்படித்தான் நடைபெறும்.
ஆனால் அந்த நியமனம் இன்னும் நடைபெறவே இல்லை. அதற்குள் இப்படி உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. கட்சிக்காக அவர் உழைக்கவும் இல்லை.
தேர்தல் நேரத்தில் அவர் பிரசாரம் செய்வதைப் போல ஒரு போட்டோ இருந்தால் காட்டச் சொல்லுங்களேன் பார்க்கலாம். வழக்கறிஞர் அணியில் பொறுப்பு வேண்டும் என்று கேட்டு வந்தார். ஆனால் எந்தப் பொறுப்பையும் அவருக்கு வழங்கவில்லை” என்று ஜூ.வி-யிடம் கேள்வி எழுப்பியிருந்தார் மாவட்டச் செயலாளர் `குஷி’ மோகன்ராஜ்.
இந்த நிலையில்தான் ஞானசௌந்தரியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்திருக்கிறார் குஷி மோகன்ராஜ். அவர் வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், ''இணையத்தளம் வழியாக த.வெ.க-வில் உறுப்பினராக இணைந்தவர் சந்திரமோகன் மனைவி ஞானசௌந்தரி.
எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாகச் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்.
மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பாக அவரிடம் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து `குஷி’ மோகன்ராஜிடம் கேட்டபோது, ``தளபதி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து, பொய்யாக பல்வேறுக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. அப்படியானவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஞானசௌந்தரியும், அதேபோல பொய்யான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.
ஆனால் வழக்கறிஞர் நியமனம் குறித்து அவர் தாக்கல் செய்த வழக்கை, ஆதாரங்கள் இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால் பொய் குற்றச்சாட்டுகள் மூலம் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்த அவரை, கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறோம்” என்றார்.















