சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வ...
The Odyssey Review: மனிதத்தை முன்னிறுத்தும் புராண காவியம் - கிறிஸ்டோபர் நோலனின் ஆகச்சிறந்த படைப்பா?
டிராய் நகரத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘ட்ரோஜன்’ போருக்குப் பிறகு, தனது சொந்த நாடான இத்திகாவை அடைய ஒடிசியஸ் மேற்கொள்ளும் பத்து ஆண்டுக்கால சாகசப் பயணம்தான் 'தி ஒடிஸி'. உலகின் மிகப் பழைமையான இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காவியம், பல நூற்றாண்டுகளாக வாய்வழியாகப் பரவிய கதைகளை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கக் கவிஞர் ஹோமரால் தொகுக்கப்பட்டது. கிரேக்கக் கடவுள்கள், அரக்கர்கள், மாயத் தீவுகள் என புராணமும் சாகசமும் கலந்த 3,000 ஆண்டுகள் பழைமையான இந்த மாபெரும் காவியத்தைத் திரைக்கு கொண்டுவரும் அசாத்திய சவாலை கிறிஸ்டோபர் நோலன் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறாரா?

கிரேக்க நாகரிகத்தின் முக்கியமான மரபுகளில் ஒன்று விருந்தோம்பல். விருந்தாளியின் உருவில் ஜியுஸ் உட்பட எந்தக் கடவுளும் வரலாம் என்பதால், ஒவ்வொரு விருந்தாளியையும் கடவுளாக மதித்து நடத்த வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. பத்து ஆண்டுகள் நீடித்த டிராய் போரின் முடிவில், அதே நம்பிக்கையை ஆயுதமாக மாற்றி ‘ட்ரோஜன் ஹார்ஸ்’ யுக்தியால் வெற்றியைப் பெற்றுத் தருகிறார் ஒடிசியஸ் (மேட் டேமன்). ஆனால் அந்த வெற்றிக்கான விலை எவ்வளவு பெரியது என்பதை அவர் உணரும் பயணம்தான் 'தி ஒடிஸி'.
மறுபுறம், இருபது ஆண்டுகளாக அரசன் இல்லாமல் தவிக்கிறது இத்திகா. ஒடிசியஸ் இனி திரும்பி வரமாட்டார் என்று நம்பும் நூற்றுக்கும் மேற்பட்ட அரசகுடி இளைஞர்கள், அவரது மனைவி அரசி பெனிலோபேவை (அன் ஹாதவே) மணந்து அரியணையைக் கைப்பற்றக் காத்திருக்கிறார்கள். கணவர் நிச்சயம் திரும்பி வருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், அவர்களை ஏமாற்றி காலத்தைக் கடத்துகிறார் பெனிலோபே.

ஒடிசியஸ் போருக்குச் செல்லும்போது வெறும் குழந்தையாக இருந்த அவரது மகன் டெலெமக்கஸ் (டாம் ஹாலண்ட்), இப்போது இளைஞனாக வளர்ந்துவிட்டான். தந்தை உயிருடன் இருக்கிறாரா என்று தெரியாமல், அரண்மனையில் தினமும் அவமானங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கிறான். ஒரு புறம் வீடு திரும்பப் போராடும் தந்தை; மறுபுறம் அந்த வீட்டையே காப்பாற்ற போராடும் மனைவியும் மகனும். இந்த இரு கதைகளோடு, ‘ட்ரோஜன் ஹார்ஸ்’ போரின் நிகழ்வுகளையும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் பார்வையில் மீண்டும் கட்டமைத்து, இறுதியில் மூன்றையும் ஒரு புள்ளியில் இணைக்கிறார் கிறிஸ்டோபர் நோலன்.
ஒரு வகையில் இது கிறிஸ்டோபர் நோலனின் முந்தைய படைப்பான `ஒப்பன்ஹெய்மர்' திரைப்படத்தின் கருத்தியல் நீட்சியாகவே நகர்கிறது. `ஒப்பன்ஹெய்மர்' தனது கண்டுபிடிப்பின் விளைவுகளால் சிதறும் ஒரு மனிதனின் மனப்பயணத்தைச் சொன்னது என்றால், `தி ஒடிஸி', தனது புத்திசாலித்தனமும் யுக்தியும் ஏற்படுத்திய விளைவுகளின் பாரத்தைச் சுமக்கும் ஒரு மனிதனின் பயணத்தைச் சொல்கிறது.
இந்தக் காவியத்தை நோலன் வெறும் புராணச் சாகசமாக அணுகவில்லை. கடவுள்கள், அரக்கர்கள், மாய உலகங்கள் என புராணக் கூறுகள் நிறைந்திருந்தாலும், அதன் மையத்தில் மனித உணர்வுகளையே முன் நிறுத்தியிருக்கிறார். குற்றவுணர்வு, காத்திருப்பு, இழப்பு, குடும்பப் பிணைப்பு, மனித அறம் என உணர்வுகள் வழியாக இந்தப் புராணக் கதையை இன்றைய பார்வையாளருக்கும் நெருக்கமானதாகச் சொல்லயிருக்கிறார். அதே நேரத்தில், போரில் வெற்றி பெற்றவர்களுக்குக்கூட இறுதியில் எதுவும் மிஞ்சுவதில்லை; மனிதனின் கொடிய குணங்களை நியாயப்படுத்த அவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் காரணம்தான் போர் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

ஒடிசியஸாக மேட் டேமன் உடலளவிலும், நடிப்பிலும் அபாரமான உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இளம் போர்வீரராக இருந்து, போர்களால் சோர்ந்த அரசனாக மாறும் வெவ்வேறு காலகட்டங்களை மிக இயல்பாக திரைக்கு எடுத்து வந்திருக்கிறார். இது அவரது சிறந்த நடிப்புகளில் ஒன்றாக நினைவில் நிற்கும். அரசி பெனிலோபேவாக அன் ஹாதவே, காத்திருப்பின் வலியையும் உறுதியையும் மிகுந்த உணர்வுபூர்வமாகக் கடத்துகிறார். தந்தையைத் தேடி அலையும் டெலெமக்கஸாக டாம் ஹாலண்டும் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாகத் திகழ்கிறார்.
இவர்களுடன் ஜெண்டயா, எலியட் பேஜ், ஜான் பெர்ன்தால், லூபிடா நியோங்'ஓ, சார்லிஸ் தேரான் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் தங்களுக்கான இடத்தைச் சிறப்பாக நிரப்புகின்றனர். வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வரும் ராபர்ட் பேட்டின்சனின் நடிப்பும் குறிப்பிடும் படியானதாக இருக்கிறது. ஒடிசியஸின் மீது அசைக்க முடியாத விசுவாசம் கொண்டிருந்தாலும், காலப்போக்கில் விரக்தியடையும் தளபதியாக ஹிமேஷ் படேலும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, செர்சியாக வரும் சமந்தா மோர்டன் சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் செல்கிறார்.

இன்னொரு இயக்குநராகவே படத்தை தனது தோள்களில் சுமக்கிறார் ஒளிப்பதிவாளர் ஹோய்ட் வான் ஹோய்டெமா. முழுப் படத்தையும் ஐமேக்ஸ் கேமராக்களில் படமாக்குவதே மிகப்பெரிய தொழில்நுட்பச் சவால். அதில், நிஜ நிலப்பரப்புகள், மிரள வைக்கும் இயற்கைக் காட்சிகள், நடுக்கடலில் படமாக்கப்பட்ட காட்சிகள், வெறும் நெருப்பு வெளிச்சத்தில் ஒளியூட்டப்பட்ட அரங்குகள், இரவில் நடைபெறும் போர்க் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கிறது. அதே நேரத்தில், அது ஒருபோதும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை மறைத்துவிடவில்லை. நோலனின் கற்பனையைத் திரையில் உயிர்ப்பிக்கும் சாரதியாக உழைத்திருக்கிறார் ஹோய்ட் வான் ஹோய்டெமா.
வழக்கமாக இதுபோன்ற புராணக் காவியங்களில் பிரமாண்டமான ஆர்கெஸ்ட்ரா இசை ஆதிக்கம் செலுத்தும். ஆனால், அதிலிருந்து விலகி, பண்டைய இசைக்கருவிகளையும் இயற்கை ஒலிகளையும் மையமாகக் கொண்டு எளிமையான, அதே நேரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இசையை உருவாக்கியிருக்கிறார் லுட்விக் கோரன்சன்.

கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, ஒப்பனை என எந்தத் துறையிலும் தேவையற்ற ஆடம்பரம் இல்லை. புராணப் படம் என்பதற்காக மிகைப்படுத்தாமல், இயல்பாகவே அனைத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். அதனால், எந்தக் காட்சியிலும் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கவில்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த அந்த உலகத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. சைக்ளோப்ஸ், லேஸ்ட்ரிகோனியர்கள், கடலில் உருவாகும் பெரும் சுழல், மரணத்திற்குப் பின்னான ஹேடஸ் உலகம் என உண்மையில் இல்லாத புராண விஷயங்கள் கூட நம்பும்படி, உயிரோட்டத்துடனும் நம்பகத்தன்மையுடனும் திரையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் எழுத்து. ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த ஒரு புராணக் காவியத்தை கிட்டத்தட்ட மூன்று மணி நேர திரையனுபவமாக மாற்றுவது சாதாரண விஷயம் அல்ல. நோலனின் வழக்கமான புதிர்கள் நிறைந்த திரைக்கதை இதில் இல்லையென்றாலும், ஒடிசியஸின் பயணம், இத்திகாவில் பெனிலோபே மற்றும் டெலெமக்கஸின் போராட்டம், கடந்த காலமும் நிகழ்காலமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் விதம் என மூன்று கதைகளையும் தொய்வில்லாமல் நகர்த்தியிருப்பது திரைக்கதையின் மிகப்பெரிய வெற்றி. ஒரு காட்சிகூட தேவையற்றதாகத் தோன்றவில்லை. குறிப்பாக, அதெனாவாக ஒடிசியஸ் கற்பனையில் ஜெண்டாயா தோன்றுவதற்கு பின்னிருக்கும் காரணம் சிறந்த படைப்பாக்க முடிவுகளில் ஒன்று.

வசனங்களும் வெறும் தகவல்களைப் பரிமாறுவதற்காக எழுதப்படவில்லை. ஒவ்வொரு வசனமும் கதாபாத்திரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், படத்தின் மையக் கருத்துகளையும் சுமந்து செல்கின்றன. அதில் உச்சமாக நிற்பது, இறுதியில் ஒடிசியஸும் பெனிலோபேயும் சந்திக்கும் நீண்ட உரையாடல். எந்தப் போர்க்களக் காட்சியையும் விட அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அந்த சில நிமிடங்களில், நோலன் தனது முழுப் படத்தின் மையக் கருத்தையும் அழுத்தமாகச் சொல்லிவிடுகிறார்.
நகரங்களை அழித்தது போர் அல்ல; மனிதர்களுக்கிடையேயான நம்பிக்கையை உடைத்த ஒரு முடிவுதான். கடவுள்களின் பெயரில் தங்களின் செயல்களை நியாயப்படுத்திக்கொள்ளும் மனிதர்கள், இறுதியில் அதன் பாவத்தையும் பாரத்தையும் தாங்களே சுமக்க வேண்டியிருக்கிறது என்பதே படம் பேசும் மிகவும் வலிமையான அரசியல்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு காவியத்தை, அதன் கவித்துவம் சிதையாமல், அதே நேரத்தில் இன்றைய மனித உளவியலோடும் அரசியலோடும் உரையாடும் சினிமாவாக மாற்றியிருப்பதுதான் நோலனின் மிகப்பெரிய சாதனை. அதிகாரத்தின் மீதான மனிதனின் பேராசை, அதற்காக அவன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் நியாயங்கள், போரின் விலை, மனித நாகரிகத்தின் அடிப்படை அறம் ஆகியவற்றைப் பேசும் இந்தப் படம், வெறும் புராணத் திரைப்படமாக அல்ல, காலங்கள் கடந்த மனிதக் காவியமாகவும் உயர்கிறது.

நடிப்பு, எழுத்து, ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம், தொழில்நுட்பம், கதை சொல்லல் என ஒவ்வொரு துறையிலும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது `தி ஒடிஸி'. கிறிஸ்டோபர் நோலனின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக மட்டுமல்லாமல், இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான திரைப்படங்களின் பட்டியலிலும் இடம்பிடிக்கும் படைப்பாக `தி ஒடிஸி' உயர்ந்து நிற்கிறது.
















