செய்திகள் :

இந்தியா வளர்கிறது... ஆனால் மக்கள்? - காரணம் இதுதான்!

post image

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இந்திய மக்கள் மேற்கொண்டுள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.82 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்ந்திருக்கும் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், ‘மியூச்சுவல் ஃபண்ட் சரியானது’ என்ற பிரசாரத்தால் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள விழிப்புணர்வு. மாதம்தோறும் எஸ்.ஐ.பி மூலமாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ரூ.31,000 கோடியைத் தாண்டியிருக்கிறது. அதே நேரம், மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இன்னும் நாம் போதுமான வளர்ச்சியை எட்டவில்லை என்பதைச் சொல்கிறது இன்னொரு புள்ளிவிவரம்.

இந்தியாவின் 147 கோடி மக்களில் வெறும் 4% பேர்தான் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். மீதமுள்ள 96% மக்கள் இன்னமும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், சிட் ஃபண்ட், எண்டோவ்மென்ட் பாலிசி போன்ற பாரம்பர்ய சேமிப்புகளைத்தான் நாடுகின்றனர். அவை பணத்துக்குப் பாதுகாப்பைத் தருகின்றனவே தவிர, பணத்தைப் பெருக்குவதில்லை என்பது இன்னும் பலருக்குப் புரியாமலேயே இருக்கிறது.

இந்தியாவில் 40% செல்வம் வெறும் 1% பணக்காரர்களிடம்தான் குவிந்திருக்கிறது. இன்று இந்தியாவில் 220-க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் உள்ளனர். இவர்களில் பங்குச் சந்தை முதலீடுகளால் மட்டுமே பில்லியனர்கள் பட்டியலில் சேர்ந்தவர்கள் அதிகம். ஆனால், 50% இந்தியர்கள் இன்னமும் பண மேலாண்மையை புரிந்துகொள்ளவில்லை. இவர்கள் முதலீட்டுச் சந்தையின் வாய்ப்புகளையும் தவற விடுகிறார்கள். குறிப்பாக, சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இந்த விஷயம் போகவில்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் போன்றவர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் இன்னும் சென்று சேரவேயில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று எல்லாமே விரல்நுனியில் வந்துவிட்டாலும், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தை முதலீட்டின் மீதான நம்பிக்கையை சாதாரண மக்களிடம் உருவாக்குவது சவாலாகவே இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை போன்றவை மீது மக்கள் பயமும் நம்பிக்கையின்மையும் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வங்கி சேமிப்பு, தங்கம், இன்ஷூரன்ஸ் போன்ற விஷயங்களிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுகிறார்கள்.

இந்தியாவின் அடுத்த 10 கோடி முதலீட்டாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கிராமங்களிலிருந்து வரவேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகளும், மியூச்சுவல் ஃபண்ட் துறையும், ஊடகங்களும் சேர்ந்து இன்னும் அதிகமான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். மக்கள், தங்களது பாரம்பர்ய சேமிப்பு முறைகளிலிருந்து விலகி, எதிர்காலத்தில் அதிக பலன் தரவல்ல, பணவீக்கத்தைத் தாண்டிய வருமான வளர்ச்சியைத் தரக்கூடிய முதலீடுகளை மேற்கொள்ளத் தயாராக வேண்டும்.

இந்தியா, எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் நாம் ஒவ்வொருவரும் பங்கெடுத்துப் பலன் அடையத் தயாராவோம்.

- ஆசிரியர்