Vijay, Ajith -க்கு அப்புறம் நான்தான்னு போட்டாங்க! - Actor Vignesh's Untold Stori...
"அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன்!" - சத்யேந்திராவுக்கு மிஷ்கின் இரங்கல்
நடிகர் மற்றும் திரைப்பட விமர்சகர் சத்யேந்திரா நேற்று காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் காலமானார்.

இவருடைய உறவினர்கள் எவரையும் தொடர்பு கொள்ள முடியாததால், உடல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
பிறகு இவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, இறுதிச்சடங்கு செய்வதற்கு அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.
சினிமா தொடர்பான எந்தவொரு நிகழ்வு எந்தத் தொலைவில் நடைபெற்றாலும் அங்கு சத்யேந்திரா இருப்பார்.
அந்தளவிற்குச் சினிமா மீது காதல் கொண்டவர் அவர். இவருடைய மறைவிற்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின், சத்யேந்திராவிற்காகக் கவிதை ஒன்றை எழுதி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர், "கரும்புகை துப்பித் துப்பி புகைவண்டி வந்துவிட்டதா, எந்த இருக்கை கிடைத்தது காலம் எதிரில் ஓடும் ஜன்னலா, கறுப்பு வெள்ளையில் அவர் உன் பயணச்சீட்டைச் சரிபார்த்தாரா, அசைந்து தூங்கு அல்லது அயர்ந்து தூங்கு, ஊர் வரும்வரை கனவில் பற நினைவு அறுந்து அண்டம் குலுங்கும், எழு இறங்கு நட தண்ட வண்டவாளங்கள் முடிகின்றன, கை காட்டிகள், மணிகள் அசையா இதுதான் புகையூர், நண்பா அந்த நிறமற்ற பாறையில் போய் உட்கார், கொஞ்சம் காத்திரு... அடுத்த வண்டியில் ஏறி நான் உன்னிடம் வந்து சேர்ந்து கொள்கிறேன். சினிமா கட்டாந்தரையில் நடந்து நடந்து கால் தேய்ந்த... நண்பர் சத்யேந்திராவுக்கு சக பாதசாரி, மிஷ்கின்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




















