Vijay, Ajith -க்கு அப்புறம் நான்தான்னு போட்டாங்க! - Actor Vignesh's Untold Stori...
`கூண்டுக்குள்' குழந்தைகள்.. கைகொடுக்கும் செல்லப்பிராணிகள்; 'Pet parenting' தரும் ஆச்சர்ய மாற்றங்கள்!
"அம்மா... டாமிக்கு சாப்பாடு வெச்சாச்சா?"
நாய் அல்லது பூனை வளர்க்கும் வீடுகளில், குழந்தைகள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. வீட்டைக் காக்க நாய்களும், எலிகளைப் பிடிக்க பூனைகளையும் வளர்த்த காலம் மாறிவிட்டது. இன்றைய குடும்ப அமைப்பில், செல்லப்பிராணிகள் என்பவை ரேஷன் கார்டில் மட்டும் விடுபட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில், நாய்களும் பூனைகளும் வெறும் செல்லப்பிராணிகளாக இல்லாமல், நண்பர்களாகவும் சில நேரங்களில் ஆசிரியர்களாகவும் இருக்கின்றன என்பதில் உங்களுக்கு ஐயம் வேண்டாம்!

De-Socializing - சமூக விலகல்
டிஜிட்டல் மாயமாகிக் கிடக்கும் இன்றைய நவீன உலகத்தில், குழந்தைகள் ஒருவரையொருவர் பார்த்து, பேசி நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறுகிக்கொண்டே செல்கின்றன. காரணம், செல்போன். ஆம், செல்போனில் மூழ்கி சமூக வாழ்வியல் சிதைவுகளை இன்றைய இளம் தலைமுறை குழந்தைகள் சந்திக்கின்றனர். `என் குழந்தை, எந்நேரமும் கையில் மொபைல் வச்சுட்டு தான் இருப்பா... மொபைல் இல்லைன்னா சோறு ஊட்டிவிட்டாக் கூட சாப்பிட மாட்டா' எனப் பெருமிதப்படும் பெற்றோருக்கு, குழந்தைகள் மற்றவர்களுடன் சமூகமாகப் பழகாமல் (Socialize), மொபைல் அடிமைத்தனத்திற்கு (Mobile Addiction) ஆட்படுவதால் ஏற்படும் விளைவுகள் புரிவதில்லை. அபார்ட்மென்ட்களில் தங்கள் எதிர் வீட்டில் இருப்பவர் பெயர்கூட தெரியாமல், குழந்தைகளை குறுகிய வட்டத்துக்குள் அடைத்து வளர்ப்பது, இன்றைய பெற்றோர் செய்யும் மிகப்பெரிய வளர்ப்பு முறை தவறு (Parenting Mistake) என்றே சொல்ல வேண்டும்.
இத்தகைய சூழலில், குழந்தையின் வளர்ச்சியில் செல்லப்பிராணிகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன... வெறும் பொழுதுபோக்கு என்பதைக் கடந்து, செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் குழந்தைகள் பெறும் பலன்கள் என்ன என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
கருணையை கற்றுத்தரும் முதல் ஆசிரியர்!
ஒரு நாயோ பூனையோ பசிக்கும்போது உணவு கேட்கும். உடல்நிலை சரியில்லாதபோது சோர்வாக இருக்கும். பயந்தால் ஒளிந்துகொள்ளும். இவற்றை தினமும் கவனிக்கும் குழந்தைகள், மற்ற உயிரினங்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தொடங்குகின்றனர். செல்லப்பிராணிகளிடத்தில் அவர்கள் செலுத்தும் அன்பு, "எனக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும் உணர்வுகள் இருக்கின்றன" என்ற எண்ணத்தை (Empathy) அவர்களுக்குள் இயல்பாக உருவாக்குகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளுக்குக் கருணை என்ற பண்பைக் கற்றுக்கொடுப்பது பெரிய சவாலாக மாறியிருக்கிறது. ஆனால் செல்லப்பிராணியுடன் ஒரு குழந்தை வளரும்போது, இயல்பாகவே அதைக் கற்றுக்கொள்ளும்.

பொறுப்புணர்வின் தொடக்கம்
காலை எழுந்தவுடன் செல்லப்பிராணிக்கு உணவு வைப்பது, அவற்றின் கிண்ணங்களைச் (Bowls) சுத்தம் செய்து தண்ணீர் நிரப்புவது, விளையாட வைப்பது, இடத்தை சுத்தமாக வைத்திருப்பது போன்ற சிறிய பொறுப்புகளை குழந்தைகளிடம் கொடுக்கலாம். இதனால் அவர்கள் "ஓர் உயிர் என்னை நம்பி இருக்கிறது" என்பதை உணர ஆரம்பிப்பார்கள். பல சமயங்களில் பள்ளிகளில்கூட கற்றுக்கொடுக்க முடியாத இந்தப் பொறுப்புணர்வை, ஒரு நாயோ பூனையோ சில மாதங்களிலேயே கற்றுத்தரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சமூகத் திறன் மேம்பாடு!
சில குழந்தைகள் இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். புதிய நண்பர்களிடம் பேசத் தயங்குவார்கள். ஆனால் வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் குழந்தைகள், தங்கள் தயக்கத்தை உடைத்து எளிதாகப் மற்றவர்களுடன் பழகுகிறார்கள்.
மன நலனை மேம்படுத்தும் செல்லப்பிராணிகள்
பள்ளி அழுத்தம், தேர்வு பயம், தனிமை உணர்வு போன்றவற்றை இன்று பல குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழலில் செல்லப்பிராணிகளுடன் சில நிமிடங்கள் செலவிடுவதுகூட அவர்களின் மனதை அமைதிப்படுத்துகிறது. பல ஆய்வுகளின்படி, நாய் அல்லது பூனையைத் தலையை வருடி கொஞ்சி மகிழ்வதன் மூலம் மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து, மகிழ்ச்சி உணர்வு அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் National Institutes of Health (NIH) நடத்திய ஆய்வின் முடிவில், செல்லப்பிராணிகளுடன் தொடர்பில் இருப்பது Cortisol அளவு மற்றும் பதற்றம் (Anxiety), ரத்த அழுத்தம் (Blood Pressure) ஆகியவற்றைக் குறைத்து, மனநிலையை (Mood) மேம்படுத்தி, இதய மற்றும் ரத்தநாள ஆரோக்கியத்தை (Cardiovascular Health) மேம்படுத்த வழிவகுப்பது தெரியவந்திருக்கிறது.

இதுதவிர ஆக்ரோஷம் குறைதல், கற்றல் திறன் (Learning Ability) மேம்படுதல் போன்றவையும் நிகழ்வதாக, NIH குறிப்பிடுகிறது.
எனவேதான் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தைகளின் மனநலம், Autism Spectrum Disorder, Anxiety Management போன்ற துறைகளில் Animal Assisted Therapy (AAT) என்பது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
2022-ல் Complementary Therapies in Clinical Practice இதழில் வெளியிடப்பட்ட “The Effect of Pet Therapy on the Stress and Social Anxiety Levels of Disabled Children” என்ற ஆய்வில், Pet Therapy பெற்ற உடல் ஊனமுற்ற குழந்தைகளின் Stress மற்றும் Social Anxiety அளவுகள் கணிசமாகக் குறைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்தியாவில் பெரியளவில் இல்லையென்றாலும், ஆட்டிசம் மையங்கள், சிறப்புப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் இந்த 'பெட் தெரபி' (Pet Therapy) பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திரை நேரம் - Screen Time Reduction
இன்றைய குழந்தைகளின் பெரும்பாலான நேரத்தை மொபைல், டேப்லெட் அல்லது டிவி உள்ளிட்டவையே ஆக்கிரமிக்கின்றன. சமூகத்துடனான தொடர்பை அதீத திரை நேரத்தால் (Screen Time) பல குழந்தைகள் கைவிடுகின்றனர். ஆனால் வீட்டில் ஒரு செல்லப்பிராணி இருந்தால், அதனுடன் விளையாடுவது, அதை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது, பராமரிப்பது போன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள். இதனால் உடல் இயக்கமும் மேம்பட்டு, திரை நேரமும் வெகுவாக குறைகிறது.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை!
செல்லப்பிராணிகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்பதற்காக, எல்லா பொறுப்புகளையும் அவர்களிடமே ஒப்படைக்கக் கூடாது. குழந்தைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையேயான தொடர்பை ஆரம்பத்தில் கண்காணிக்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கம் உள்ளிட்ட சுகாதார விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். செல்லப்பிராணி ஒரு பொம்மை அல்ல, உணர்வுகள் கொண்ட ஓர் உயிர் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பிளேஸ்டேஷன், மொபைல், டேப்லெட் போன்ற சாதனங்கள் பொழுதுபோக்கைத் தரலாம். ஆனால், ஒரு செல்லப்பிராணி அதையும் தாண்டி அவர்களுக்குப் பலவகைகளில் உதவி, அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும்!





















