``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மா...
``இந்தியாவின் 2-வது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட்'' -துணிக்கடை பொம்மையில் அரசு பள்ளி மாணவர் சாதனை
உலகில் ஒரு மூளைமுடுக்கு எங்கும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ).
அதற்கேற்ப, ஏஐ-ன் நன்மைகளையும் அதன் பயன்பாடுகளையும் புரிந்துகொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆர்வத்துடன் நிகழ்த்தி வருகின்றனர் மாணவர்கள்.
அவ்வகையில், உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் ஏஐ ரோபோட்டிக் டீச்சரை உருவாக்கி பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்துசகரை சேர்ந்த அரசு பள்ளியில் படிக்கும் ஆதித்யா என்ற மாணவர் இந்த அற்புதமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
இவர் இப்போது 12ஆம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ரோபோடிக்ஸ் துறையில் எந்தவிதமான பயிற்சியும், முன் அனுபவமும் கிடையாது. அவரிடம் இருந்தது எல்லாம், கிராமப்புற மாணவர்களும் தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய எண்ணமே.
தினமும் பள்ளி முடித்து அனைவரும் வீட்டுக்குச் சென்ற பின்பும், ஆதித்யா மட்டும் சர்க்யூட்டும் கையுமாக இருந்து பல ஆராய்ச்சிகளை செய்துள்ளார்.
பல முயற்சிகளுக்குப் பிறகு, ஒரு பெண் வடிவத்தில் ரோபோட் டீச்சரை உருவாக்கி அதற்கு 'சோஃபி' என்றும் பெயர் வைத்துள்ளார்.
இந்த ஏஐ சோஃபி டீச்சர் நடத்தும் வகுப்புகளில் மாணவ–மாணவியர்கள் உற்சாகமாக கவனித்து, பல சுவாரசியமான கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#WATCH | Bulandshahr, UP | A 17-year-old student from Shiv Charan Inter College, Aditya Kumar, has built an AI teacher robot named Sophie, equipped with an LLM chipset.
— ANI (@ANI) November 29, 2025
The robot says, "I am an AI teacher robot. My name is Sophie, and I was invented by Aditya. I teach at… pic.twitter.com/ArJYSsf39F
துணிக்கடை மேனிக்யூன் பொம்மையை ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் கருவியுடன் இணைத்து, இதை அவர் உருவாக்கியுள்ளார். சோஃபியின் முக்கிய செயல்பாடு, பெரிய ரோபோட்டிக்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்தும் அதே வகையான LLM சிப்செட் மூலம் இயங்குகிறது.
இது ரோபோவால் கேள்விகளைப் புரிந்துகொண்டு இயல்பாக பதிலளிக்க உதவுகிறது. அன்றாடப் பொருட்களான பழைய லேப்டாப் பாகங்கள், எளிய சென்சார்கள் மற்றும் ஸ்பீக்கர் மாடியூல்கள் ஆகியவற்றை பயன்படுத்தியே இதை அவர் உருவாக்கியுள்ளார்.
தற்போது, சோஃபியால் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள முடிகிறது. இப்போதைக்கு இந்தி மொழியிலும், எதிர்கால புதுப்பிப்புகளில் மற்ற மொழிகளிலும் பேச முடியும்.
பொது அறிவு, இயற்பியல் மற்றும் அடிப்படைக் கணக்கு உட்பட பல்வேறு பாடங்களில் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், மனித ஆசிரியர்கள் இல்லாதபோது வகுப்புகள் தடைபடாமல் இருக்கவும், மாற்று ஆசிரியராகச் செயல்படவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
முதற்கட்டமாக மாதிரி ஐடியாகவே இருக்கும் இது; எதிர்காலத்தில் முழுமையான ஏஐ டீச்சர் ரோபோட்டாக உருவாக வேண்டும் என்பதே ஆதித்யாவின் கனவே இருக்கிறது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஆதித்யாவின் தந்தை காம்பவுண்டர் வேலை பார்க்கிறார். ரோபோட்டை தயார் செய்து முடிக்கும் வரை ஏற்பட்ட செலவுகளை ஆதித்யாவுக்காக அவரது தந்தை கடன் வாங்கி உதவியுள்ளார்.
இதுகுறித்து பேசும் ஆதித்யா, “இது இந்தியாவின் இரண்டாவது ஏஐ டீச்சிங் அசிஸ்டன்ட். சில நேரங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால், மாணவர்களுக்கு அன்றைய வகுப்புகள் இல்லாமலே போகிறது. இந்தப் பிரச்சனையை தீர்க்கவே நான் இதை உருவாக்கியுள்ளேன். விண்வெளி ஆராய்ச்சியாளராவதே என்னுடைய லட்சியம்” என்று கூறினார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆராய்ச்சி ஆய்வகங்களை நிறுவி இளம் சயின்டிஸ்ட்களை உருவாக்க வேண்டும், மற்றும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள மாணவர்களுக்கு உரிய வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசிற்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஆதித்யாவின் இந்த ஆர்வத்தை பலரும் பாராட்டி, ஊக்குவித்து வருகின்றனர்.




















