Music for Meals: சமூக சேவைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி; இளையராஜாவிற்குக் குவிய...
இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!
சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாள் என்பதால், இளைஞர்களின் கூட்டமும் அலைமோதியது. சரி, இந்த புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் சாய்ஸ் என்னவாக இருக்கும் என, அவர்களிடம் பேசினோம்...
சென்னை பல்கலைக்கழக மாணவரும், "போறப்போக்கில ஒரு (க)விதை"என்ற கவிதை நூலின் ஆசிரியருமான மு. வஷீர்அகமது புத்தகக் காட்சியில் நம்மிடம் பேசுகையில், ``எனது வாசிப்பு பழக்கம் பள்ளி காலத்தில் செய்தித்தாள்கள் படிப்பது மூலம் தொடங்கியது. எட்டாம் வகுப்பு படிக்கும் போது நான் கவிதை எழுதத் தொடங்கினேன்.

பிறகு என் நண்பன் வாங்கித் தந்த `பாரதியார் கவிதைகள்' என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்லூரியில் இளங்கலை தமிழ் எடுத்து கவிதை வெளியில் பயணிக்கத் தொடங்கினேன். 2024 ஆம் ஆண்டு எனது கவிதை தொகுப்பினை ஒன்று சேர்த்து "போறப்போக்குல ஒரு கவிதை" என்ற தலைப்பில் ஈரோடு புத்தகக் காட்சியில் நூலாக வெளியிட்டேன்.
பாரதிதாசன், பாரதியார், நா.முத்துக்குமார், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் எனக்கு மிகவும் பிடித்த கவிஞர்கள். கவிக்கோ அப்துல் ரகுமானின் ஆலாபனை , நா. முத்துக்குமார் பட்டாம்பூச்சி விற்பவன், அரசி மார்லின் எழுதிய திருத்தப்படாத கவிதைகள் மற்றும் திருநங்கை பதிப்பகத்தில் இருந்து கிரேஸ் பானுவின் சிந்தனைகள் எனும் புத்தகத்தையும் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கி இருக்கிறேன்." என்கிறார்.
சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கவி என்ற இளம் பெண் நம்மிடம் பேசுகையில், ``நான் பள்ளிப் பருவத்தில் இருந்தே வரலாற்றுப் பாடத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவள். ஆகவே வரலாறு சார்ந்த புத்தகங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன்.

கல்லூரி தொடக்கக் கட்டத்தில் வேள்பாரி, பொன்னியின் செல்வன் போன்ற புத்தகங்களை படிக்கத் தொடங்கினேன். தற்போது அரசியல் சார்ந்து புத்தகங்கள் குறிப்பாக பெரியார், அம்பேத்கர் ஆகியோரது புத்தகங்களை வாசிக்க தொடங்கி உள்ளேன்.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள், மாரி செல்வராஜின் "காட்டுப் பேச்சிகளைக் காதலித்தவன்", கவிஞர் இசை எழுதிய "ஆட்டுதி அமுதே " என்ற புத்தகம் வாங்கி இருக்கிறேன். வாசிப்பு எனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. எனது சிந்தனையையும் செதுக்கிக் கொண்டு இருக்கிறது." என்கிறார் சங்கவி.
சென்னையில் விளம்பர தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் மன்னார்குடியை பூர்வீகமாகக் கொண்ட ஷேக் நம்மிடம் பேசுகையில், ``சினிமாவில் கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான். தமிழில் அவரது பேச்சும் அவரது எழுத்து நடையும் எனக்குப் பிடிக்கும். ஆகவே அவர் சார்ந்த எந்த புத்தகமாக இருந்தாலும் வாங்கி படித்து விடுவேன்.

பிறகு ஜெயமோகன் போன்ற தமிழ் எழுத்து உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களின் புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். வாசகர் வட்டங்களில் கலந்து கொண்டேன். அவர்களின் புத்தகங்களை எல்லாம் படிக்கும் போது எனக்குள் ஒரு ஆளுமை உருவாவது போன்ற ஒரு உணர்வை பெற தொடங்கினேன்.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் ரமீஸ் பிலாலி ஆல் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட "ரூமியின் ஸ்ஃபிக் கொள்கை", "ஜின்களின் ஆசான்" என்ற ஸ்ஃபிக் நாவலும் வாங்கி இருக்கிறேன்." என்கிறார்.
சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முகிலன் என்பவர் நம்மிடம் பேசுகையில், ``புத்தக வாசிப்பு பள்ளி பருவத்திலேயே தொடங்கிவிட்டது என்றாலும் பெரிய அளவில் இல்லை. சிறுகதை, வரலாறு, கவிதை என பலவகைப் பட்ட புத்தகங்களை படிப்பேன்.

வெறும் ஒருவருடைய கதை, ஒருவருடைய புத்தகம் என்று போக மாட்டேன். இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் சுந்தர ராமசாமி எழுதிய, "ஒரு புளிய மரத்தின் கதை", இந்திரா சௌந்திரராஜன் எழுதிய, "ரகசியமான ஒரு ரகசியம்" வாங்கி இருக்கிறேன். புத்தக வாசிப்பை எனக்கு யாரும் அறிமுகப்படுத்தவில்லை. இயற்கையாகவே நானே புத்தகத்தை தேடி பயணிக்க தொடங்கி விட்டேன்." என்றார்.
தொடர்ந்து, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வாழப்பாடியை பூர்வீகமாக கொண்ட சஞ்சிவ் என்பவர், நம்மிடம் பேசுகையில், ``கல்லூரியின் இறுதி ஆண்டில் தான் எனக்கு புத்தக வாசிப்பின் மீதான ஆர்வம் தொடங்கியது. அதுவும் எனக்கு ஒருவர் புத்தகத்தை பரிசாக அளித்ததன் மூலம் அது தொடங்கியது.

அந்தப் புத்தகத்தின் பெயர் "அச்சம் கொள், ஆளுமை தவிர்" . அதன் பிறகு தான் புத்தகத்தின் மீதான ஆர்வம் எனக்கு தொடங்கியது. இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் மொழிபெயர்ப்பு நூலான "நினைவுகள் அழிவதில்லை" என்ற புத்தகமும், பெரியாரின் "சுதந்திர தமிழ்நாடு ஏன்?" என்ற புத்தகமும் வாங்கி இருக்கிறேன்." என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத, சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம் பெண் நம்மிடம் பேசிய போது, ``முதலில் சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்களை வாசிக்க தொடங்கினேன். பிறகு தமிழில் இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் புத்தகங்கள் என இதுபோன்ற வாசிக்க தொடங்கினேன். பிறகு இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் "அறம்" புத்தகம், எஸ்.ரா உடைய "தேசாந்திரி" புத்தகம் படிக்க தொடங்கினேன்.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடைய "துணையெழுத்து" புத்தகம் மற்றும் மனித பரிணாமத்தை கூறும் "மனித குலம் ஒரு வரலாறு" புத்தகம். புத்தகம் வாசிப்பால் எனது சிந்தனை மாற்றம் ஏற்பட்டுள்ளது, அதை என்னால் உணர முடிகிறது." என மகிழ்வை பகிர்ந்து கொண்டார்.

சென்னை கிருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் முஹம்மத் யாசர், ``அரசியல் வரலாறு போன்ற புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஏ ஜி நூராணி உடைய "ஆர் எஸ் எஸ் அறியப்படாத பக்கம்", தொல்.திருமாவளவன் எழுதிய "அமைப்பாய் திரள்வோம்" இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கி இருக்கிறேன்." என்கிறார்.
சென்னையைச் சேர்ந்த கிஷோர் கான் என்பவர் நம்மிடம் பேசுகையில், ``கடந்த வருடம் நா. முத்துக்குமார் அவர்களுடைய, "அணிலாடும் முன்றில்" என்ற புத்தகத்தை படித்தேன். அந்தப் படித்ததன் தாக்கம் என்னுள் உணர முடிந்தது. பிறகு கவிதை மீதான ஆர்வம் அதிகரித்தது என்றே கூறலாம். அந்த புத்தகம் என் நண்பருடைய பரிந்துரை.

அதனால் இந்த ஆண்டு ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு வந்திருக்கிறேன். நான் வாங்கிய புத்தகங்கள் க்ரீஷ் பாலா எழுதிய "மெல்ல செத்து மீண்டு வா", மற்றும் எழுத்தாளர் லதா அவர்களுடைய "கழிவறை இருக்கை" ஆகிய இரண்டு புத்தகங்களையும் வாங்கி இருக்கிறேன்." என்றார்.
"புத்தகங்களும் கதவுகளும் ஒன்றே. நீங்கள் அவற்றைத் திறக்கிறீர்கள், நீங்கள் வேறொரு உலகத்திற்குள் செல்கிறீர்கள்." என்றார் ஜீனெட் வின்டர்சன். புத்தகங்கள் வழியே, வாசிப்பின் வழியே பல உலகங்களின் வாசல் கதவு திறக்கட்டும்.!



















